Published : 24 Jul 2015 08:08 AM
Last Updated : 24 Jul 2015 08:08 AM

மதுவால் மக்களுக்கு ஏற்படும் தீமைகளை கருத்தில் கொண்டு புதிய மதுவிலக்குக் கொள்கையை நாங்கள் கொண்டுவருவோம்: திருச்சியில் கொட்டும் மழையில் ராகுல் காந்தி உறுதி

மதுவால் மக்களுக்கு ஏற்படும் தீமைகளைக் கருத்தில் கொண்டு புதிய மதுவிலக்குக் கொள்கையை கொண்டுவருவோம் என்று காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் திருச்சி ஜி-கார்னர் மைதானத்தில் நேற்று மாலை நடைபெற்றது. கூட்டம் நடந்துகொண்டு இருந்தபோது மழை பெய்தது. கொட்டும் மழையில் நனைந்தபடி ராகுல் காந்தி பேசியதாவது:

தமிழகத்தில் முதல்வராக இருந்த காமராஜர் அனைத்துத் தரப்பு மக்களின் கோரிக்கைகளையும் கேட்டு அதன்படி ஆட்சி நடத்தினார். மக்களின் எண்ணங்களை நிறைவேற்றும் தலைவராக காமராஜர் திகழ்ந்தார்.

ஆனால், இன்றைய ஆட்சியாளர்கள் மக்களின் குரலைக் கேட்பதில்லை. அதிகாரம் தங்களிடம் இருக்கிறது, தங்களால் எதையும் செய்ய முடியும் என நினைக்கின்றனர். மக்களின் எண்ணங்களுக்கு மதிப்பளிக்காமல் வாக்குகளைப்பெறவே கவனம் செலுத்துகின்றனர்.

சாதாரண ஏழை, எளிய மக்களின் குரல்களை தமிழக அரசு பொருட்படுத்துவதில்லை. சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகளுக்கு பின்னரும் ஆதிதிராவிட மக்கள் கஷ்டத்துடன்தான் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள்மீதான வழக்குகள் கண்டுகொள்ளப்படவில்லை. இது துயரமானது.

ஆனால், சிலருடைய குரல் மட்டும் அரசின் காதுகளுக்கு சரியாகக் கேட்கிறது. அவர்களது குரல்களுக்கு மட்டும் செவிசாய்க்கின்றனர். சாராய சாம்ராஜ்ய அதிபர்களுக்கு மட்டுமே அரசு ஆதரவாகச் செயல்படுகிறது.

கடந்த ஆண்டு மதுவிற்பனை மூலம் தமிழக அரசுக்கு ரூ.30,000 கோடி வருவாய் கிடைத்துள்ளது. ஆண்டு தோறும் ஒவ்வொருவரது பையிலிருந்தும் ரூ.10,000 சாராய சாம்ராஜ்யத்துக்கும், அரசியல்வாதிகளுக்கும் செல்கிறது.

ஒரு குடும்பத்தில் ஒருவர் மதுவுக்கு அடிமையானால் அந்த குடும்பமே பாதிக்கப்படுகிறது. மதுவால் தமிழக பெண்கள் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை நான் அறிவேன்.

அரசின் மதுக் கொள்கை ஒவ்வொரு குடும்பத்தையும் அழித்து வருகிறது. இதன் மூலம் தமிழகத்தில் உள்ள தாய்மார்களுக்கும், சகோதரிகளுக்கும் நான் ஒன்றை தெரிவிக்கிறேன். புதிய மதுக்கொள்கையை நாங்கள் கொண்டுவருவோம். மக்களின் கஷ்டத்தைப் போக்க நாங்கள் நடவடிக்கை எடுப்போம்.

மாநில கட்சிகளின் தலைவர்கள் உங்கள் கஷ்டத்தைக் கேட்க மாட்டார்கள். நல்ல சமுதாயத்தை உருவாக்க காமராஜர் பாடுபட்டார். ஆனால், இன்றைய தலைவர்கள் சமுதாயத்தை சீரழித்து, சம்பாதிப்பதை மட்டுமே கருத்தில் கொண்டுள்ளனர்.

இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

மழையில் நனைந்தபடி..

ராகுல் காந்தி மேடை ஏறிய சிறிது நேரத்தில் மழை வேகமாக பெய்யத் தொடங்கியது. தொடர்ந்து சுமார் 30 நிமிடங்கள் பெய்தது. மழை பெய்தால் ராகுல் காந்தி நனையாமல் இருப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. ஆனால் குடைபிடிக்க முயன்றபோதும் அதை அவர் தவிர்த்து விட்டார். போதிய எண்ணிக்கையில் மைக் தயார் நிலையில் வைக்கப்படாததாலும் மழை பெய்தபோது ராகுல் காந்தி வேறு வழியின்றி திருநாவுக்கரசருக்கு வைத்திருந்த மைக்கை பயன்படுத்தினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x