Published : 21 Jul 2015 08:48 AM
Last Updated : 21 Jul 2015 08:48 AM

ராகுல்காந்தியின் பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆய்வின்போது போலீஸ் அதிகாரிகளுடன் இளங்கோவன் கடும் வாக்குவாதம்: துணை ஆணையருக்கு எச்சரிக்கை விடுத்ததால் பரபரப்பு

ராகுல்காந்தி பாதுகாப்பு ஏற்பாடு கள் குறித்த ஆய்வின்போது துணை ஆணையருக்கு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் எச்சரிக்கை விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி பொன்மலை ஜி கார்னரில் வரும் 23-ம் தேதி நடைபெறும் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்க உள்ளார். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து திருச்சி விமான நிலையத்தில் நேற்று சிறப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

சிறப்பு பாதுகாப்பு படை (எஸ்.பி.ஜி) உதவி ஐ.ஜி. ராவத், விமானநிலைய இயக்குநர் நெகி, மாநகர காவல் துணை ஆணையர் சரோஜ்குமார் தாகூர், மத்திய உளவுப்பிரிவு உதவி இயக்குநர் மதியழகன், மாநில உளவுப்பிரிவு டி.எஸ்.பி. தர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். காங்கிரஸ் சார்பில் அதன் மாநிலத் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பங்கேற்றார்.

இதுபற்றி போலீஸ் அதிகாரிகள் கூறும்போது, “மாநகர காவல் ஆணையர் ஏன் இக்கூட்டத்துக்கு வரவில்லை” என ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கேட்டார். “இதைப்பற்றியெல்லாம் நீங்கள் கேட்கக்கூடாது. அவருக்குப் பதிலாக நான் வந்திருக்கிறேன்” என துணை ஆணையர் சரோஜ்குமார் தாகூர் பதிலளித்தார். ஆத்திரமடைந்த இளங்கோவன், “இங்கு வரக்கூடியவர் காங்கிரஸ் கட்சியின் மிக முக்கிய நபர். அந்த குடும்பத்தைச் சேர்ந்த 2 பெரும் தலைவர்களை ஏற்கெனவே நாங்கள் இழந்துள்ளோம். எனவே, பாதுகாப்பு விவகாரத்தில் சமரசம் செய்துகொள்ள முடியாது” என வாக்குவாதம் செய்ததுடன், ஆணையர் வராததற்காக தனது கண்டனத்தையும் அங்கு பதிவு செய்தார்.

கூட்டம் முடிந்ததும் ஜி கார்னர் மைதானத்தை எஸ்பிஜி அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு நின்றுகொண்டிருந்த காவல் ஆணையர் சஞ்சய்மாத்தூரும், இளங்கோவனும் கைகுலுக்கி அறிமுகமாகிக் கொண்டனர். பின்னர், நீங்கள் ஏன் பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டத்துக்கு வரவில்லை என ஆணையரிடம் இளங்கோவன் கேட்டார். அப்போது அருகிலிருந்த துணை ஆணையர் சரோஜ்குமார் தாகூர், ஆணையரிடம் ஏதோ சொல்ல முயன்றார்.

அவரைப் பார்த்த இளங் கோவன், “கமிஷனரைப் பற்றி நான் கேள்வி கேட்கக்கூடாதெனச் சொல்ல நீ யார்? முதலமைச்சர், ஏன் பிரதமரிடம்கூட நான் கேள்வி கேட்பேன். இது தமிழ்நாடு. பி கேர்ஃபுல்..” எனக்கூறி துணை ஆணையருக்கு எச்சரிக்கை விடுத்தார். மற்ற போலீஸ் அதிகாரிகள் இளங்கோவனை சமாதானம் செய்ய முயற்சித்தனர்.

அப்போது மாநகர நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையர் வெங்கட்ராமனைப் பார்த்து, “இவர்தான் ஐ.எஸ். ஏ.சி.யா? விவசாயிகள் சந்திப்பு நிகழ்ச்சிக் கான நேரத்தை மாற்றச் சொன்னீங் களாமே? உங்கள் இஷ்டபடி நாங்கள் செயல்பட முடியாது. எங்கள் திட்டத்துக்கு ஏற்பதான் நீங்கள் பாதுகாப்பு அளிக்க வேண் டும்” என்றார். அதற்கு பதிலளித்த வெங்கட்ராமன், “பாதுகாப்பு தொடர்பாக எஸ்பிஜி-க்கு பரிந் துரை செய்ய வேண்டியது என் கடமை, அதைதான் செய்தேன்” என்றார்.

இதைக்கேட்ட இளங்கோவன், திருச்சி போலீஸாரைப் பற்றி எங்களுக்குத் தெரியாதா? ராமஜெயம் கொலை வழக்கு குற்றவாளிகளை 2 ஆண்டு களாகியும் கைது செய்ய முடியாதவர்கள்தானே நீங்கள்” எனக்கூறிவிட்டு பொதுக்கூட்ட மேடைக்குச் சென்றுவிட்டார்.

‘2 லட்சம் பேர் பங்கேற்பர்’

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் செய்தியாளர்களிடம் கூறும்போது, “ராகுல்காந்தி பங்கேற்கும் பொதுக்கூட்டத்துக்கு 2 லட்சம் பேர் வர உள்ளனர். இதுதவிர கரும்பு, நெல், தேயிலை, ரப்பர் விவசாயிகள் சுமார் 200 பேரை சந்தித்து ராகுல் ஆலோசனை நடத்த உள்ளார். இதற்கு தேவையான பாதுகாப்பை தமிழ்நாடு காவல்துறை தரும் என எதிர்பார்க்கிறோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x