Published : 01 Jul 2015 08:21 AM
Last Updated : 01 Jul 2015 08:21 AM

மவுலிவாக்கம் கட்டிட விபத்தை விசாரித்த நீதிபதி கமிஷன் அறிக்கையை பேரவையில் தாக்கல் செய்யாதது ஏன்? - அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

மவுலிவாக்கம் கட்டிட விபத்து குறித்து விசாரணை நடத்திய நீதிபதி கமிஷனின் அறிக்கையை சட்டப் பேரவையில் தாக்கல் செய்யாதது ஏன்? என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை அருகே உள்ள மவுலிவாக்கத்தில் கடந்த ஆண்டு ஜூன் 28-ம் தேதி 11 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டமானதில் 61 பேர் பலியானார்கள். 27 பேர் காயமடைந்தனர். இந்த சம்ப வத்தில் அமைச்சர்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதால் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு மட்டுமல்லாமல், 11 மாடி கட்டிடத்தில் வங்கிக் கடன் வாங்கி வீடு வாங்கியவர்களுக்கும் நஷ்டஈடு தர வேண்டும் என்றும், விபத்து நடந்த இடத்தின் அருகே ஆபத்தான நிலையில் இருக்கும் மற்றொரு 11 மாடி கட்டிடத்தை இடித்து தரைமட்டமாக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரியுள்ளனர்.

இவ்வழக்கு விசாரணை யின்போது, மவுலிவாக்கம் கட்டிட விபத்து குறித்து விசாரணை நடத்திய நீதிபதி ரகுபதி கமிஷனின் அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு விட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து, அந்த அறிக்கையை சட்டப்பேரவையில் தாக்கல் செய்துவிட்டு, நீதிமன்றத்திலும் தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான முதல் அமர்வு உத்தரவிட்டது.

இந்நிலையில், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் முன்பு இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மூத்த வழக்க றிஞர் பி.வில்சன் ஆஜராகி வாதாடும்போது, “மவுலிவாக்கம் கட்டிட விபத்து குறித்து விசாரணை நடத்திய நீதிபதி கமிஷன் அறிக்கை இன்னமும் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படவில்லை. இந்த அறிக்கையை அரசிடம் தாக்கல் செய்து, 6 மாதங்களுக்குள் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யா விட்டால் அது காலாவதியாகிவிடும்” என்றார்.

அதையடுத்து தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் கூறும்போது, “நீதி பதி கமிஷன் அறிக்கையை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யா விட்டால், இவ்வழக்கை சிபிஐ விசாரிக்குமாறு உத்தரவிட நேரிடும்” என்று எச்சரித்தார். தமிழக அட்வகேட் ஜெனரல் ஏ.எல்.சோமையாஜி வாதிடும்போது, நீதிபதி கமிஷன் அறிக்கையை சட்டப்பேரவையில் தாக்கல் செய்வது குறித்து அரசின் கருத்தை கேட்டு தெரிவிப்பதாகக் கூறினார். இதையடுத்து வழக்கு விசாரணையை 13-ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இவ்வழக்கு தொடர்பாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் சென்னை உயர்நீதிமன்றத்தில் மற்றொரு மனுவை தாக்கல் செய் துள்ளார். அதில், “நீதிபதி கமிஷன் அறிக்கையை சட்டப்பேரவையிலும் தாக்கல் செய்யவில்லை. நீதிமன் றத்திலும் தாக்கல் செய்யவில்லை. குற்றப்பத்திரிகை முழுமையாக இல்லை. பல குறைபாடுகள் இருக்கின்றன. இது, உண்மையான குற்றவாளிகளை பாதுகாப்பது போல உள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x