Published : 30 May 2014 04:13 PM
Last Updated : 30 May 2014 04:13 PM

அம்பேத்கர் பெயரால் நீதிபதிகளை அச்சுறுத்துவதை அனுமதிக்கக் கூடாது: ராமதாஸ்

அம்பேத்கர் பெயரால் நீதிபதிகளை அச்சுறுத்துவதை அனுமதிக்கக் கூடாது என்றும், நீதிமன்ற அறைகளில் யார், யாருடைய படங்கள் வைக்கப்பட வேண்டும் என்பது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை உயர் நீதிமன்றம் வெளியிட வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "திண்டிவனத்தில் நீதிமன்ற அறையிலிருந்த சட்ட மேதை அம்பேத்கரின் புகைப்படத்தை அகற்றும்படி தேவநாதன் என்ற சார்பு நீதிபதி ஆணையிட்டதாகவும், இதற்காக அவர் மீது வழக்குப்பதிவு செய்யும்படி ஆணையிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. சிலரின் தனிப்பட்ட நலன்களுக்காக அம்பேத்கரின் பெயர் சர்ச்சைக்குள்ளாக்கப்படுவது மிகுந்த வருத்தமளிக்கிறது.

இந்தியாவின் அரசியல் சட்டத்தை இயற்றித்தந்த மாமேதை அம்பேத்கரை நான் மதிப்பவன். தமிழகத்திலேயே அம்பேத்கர் சிலைகளை அதிக எண்ணிக்கையில் திறந்த பெருமையும் எனக்கு உண்டு. பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கை வழிகாட்டிகளில் அம்பேத்கரையும் ஒருவராக வைத்து போற்றி வருகிறோம். தைலாபுரத்திலுள்ள பா.ம.க. அரசியல் பயிலரங்க வளாகத்திலும் அம்பேத்கருக்கு சிலை எழுப்பி மரியாதை செய்து வருகிறோம். இதற்கெல்லாம் மேலாக அம்பேத்கரை எவரேனும் இழிவுபடுத்தினால் அதற்கான முதல் கண்டனக் குரல் என்னுடையதாகவே இருக்கும். ஆனால், திண்டிவனம் நீதிமன்ற விவகாரம் ஒரு சிலரால் தேவையின்றி சர்ச்சையாக்கப்படுவதாக தோன்றுகிறது.

மே மாதம் நீதிமன்றங்களுக்கு விடுமுறைக் காலம் என்பதால் அப்போது தான் நீதிமன்ற அறைகளில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும். அதைப் போலவே தான் திண்டிவனம் சார்பு நீதிமன்றத்திலும் தூய்மை மற்றும் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதற்காக அறையில் இருந்த மகாத்மா காந்தி, திருவள்ளுவர், அம்பேத்கர் ஆகியோரின் உருவப்படங்கள் அனைத்தும் எடுத்து தூய்மைப்படுத்தப்பட்ட பின்னர் நீதிமன்ற அறையிலேயே மீண்டும் பொருத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் எந்த தவறும் இருப்பதாக தெரியவில்லை.

ஆனால், அந்த நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வரும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவர் சார்பு நீதிபதி தேவநாதன் மீது கொண்டிருந்த சாதி ரீதியிலான காழ்ப்புணர்ச்சி காரணமாக அம்பேத்கர் படத்தை அகற்றும்படி நீதிபதி தம்மை மிரட்டியதாக அங்குள்ள தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த வழக்கறிஞர்களிடம் கூறி, அவர்களின் துணையுடன் தேவையில்லாத சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

நீதிமன்ற அறைகளில் யார், யாருடைய படங்கள் வைக்கப்பட வேண்டும் என்பது தொடர்பாக தெளிவான விதிமுறைகள் எதுவும் இல்லை. கடந்த 2005 ஆம் ஆண்டு வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் புதிய நீதிமன்ற வளாகத்தை அப்போதைய உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.பி.ஷா திறந்து வைத்தார். அந்த விழாவில் கலந்து கொண்ட அப்போதைய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியும், பின்னாளில் ஊழல் குற்றச்சாற்றுகளின் அடிப்படையில் நடவடிக்கைக்கு உள்ளானவருமான தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் அங்குள்ள குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்களைத் தூண்டி விட்டு, புதிய நீதிமன்றத்தில் அம்பேத்கரின் படங்களை இடம் பெற வைத்தார்.

இதுதொடர்பாக எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து நீதிமன்ற அறைகளில் மகாத்மா காந்தி, திருவள்ளுவர் படங்களைத் தவிர வேறு எவரின் படத்தையும் வைக்கக் கூடாது என சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.

இத்தகைய சூழலில் அகற்றப்படாத அம்பேத்கர் படத்தை மையமாக வைத்து தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் சர்ச்சை எழுப்புவதும், நீதிபதி மீது சாதி சாயம் பூச முயல்வதும் விரும்பத்தக்கதல்ல. கடந்த சில ஆண்டுகளாகவே தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் அணி சேர்ந்து கொண்டு நீதிபதிகளுக்கு நெருக்கடி கொடுத்து வருவதாக குற்றச்சாற்றுகள் எழுந்துள்ளன. கீழமை நீதிமன்றங்களில் தொடங்கி உயர்நீதிமன்றம் வரை இந்த போக்கு பரவியிருக்கிறது. இதனால், நீதிபதிகள் சுதந்திரமான முறையில் நீதி பரிபாலனம் செய்ய முடியாத சூழல் உருவாகிவிடுமோ என்ற ஐயமும், அச்சமும் எழுந்திருக்கிறது. இது நீதித்துறைக்கு ஆரோக்கியமானதாக தோன்றவில்லை.

அரசியல் சாசன சிற்பியான அம்பேத்கரின் போதனைகள் போற்றத்தக்கவை. ஒடுக்கப்பட்ட மற்றும் அச்சுறுத்தப்படும் மக்களின் நலனுக்காக வழக்கறிஞர்கள் பாடுபட வேண்டும் என்பது தான் அவரது விருப்பம். அதற்கு மாறாக நீதிபதிகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் ஒரு தரப்பு வழக்கறிஞர்கள் செயல்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். நீதிமன்ற அறைகளில் யார், யாருடைய படங்கள் வைக்கப்பட வேண்டும் என்பது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை உயர் நீதிமன்றம் வெளியிட வேண்டும்" என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x