Published : 14 Jul 2015 08:54 AM
Last Updated : 14 Jul 2015 08:54 AM

பசுமைப் போர்வை அதிகரிப்பு திட்டம்: சென்னையில் 1000 கி.மீ. சுற்றளவில் 2 லட்சம் மரக்கன்றுகள் நட முடிவு

சென்னை மாநகரில் பசுமைப் போர்வையை அதிகரிக்கும் விதமாக 1000 கி.மீ. தொலைவுக்கு சாலையோரங்களில் சுமார் 2 லட்சம் மரக்கன்றுகளை நட மாநகராட்சி நிர்வாகம் மெகா திட்டம் உருவாக்கி வருகிறது.

சென்னை மாநகரப் பகுதியின் மக்கள்தொகை 70 லட்சமாக உயர்ந்துள்ளது. இதுதவிர, பல லட்சம் பேர் தினமும் சென்னைக்கு வந்துசெல்கின்றனர். வாகனப் புகை, குளிர்சாதன இயந்திரங்களில் இருந்து வெளியேறும் வெப்பம், சமையல் உட்பட பல்வேறு காரணங்களால் வெப்பநிலை கணிசமாக உயர்கிறது. மாநகரின் சராசரி வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸாக உள்ளது. காற்றும் மாசுபடுகிறது. இந்த நிலை தொடர்ந்தால் மாநகரப் பகுதியில் மக்கள் சுவாசிக்க போதிய ஆக்சிஜன் கிடைக்காத நிலை ஏற்படும். சுவாசக் கோளாறுகளும் ஏற்படக்கூடும்.

இதை தவிர்க்க வேண்டு மானால், மொத்த நிலப்பரப்பில் 33.3% நிலப்பரப்பு பசுமைப் போர்வையுடன் இருக்க வேண்டும். அதற்கு ஏற்றவாறு அனைத்து மாநிலங்களும் பசுமைப் போர்வையின் அளவை உயர்த்த வேண்டும் என்று மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

இதன்படி, 426 சதுர கி.மீ. பரப்பு கொண்ட சென்னை மாநகரில், 142 சதுர கி.மீ.க்கு பசுமைப் போர்வை இருக்க வேண்டும். ஆனால் இங்கு 9 சதுர கி.மீ. அளவுக்கு (6.25%) மட்டுமே பசுமைப் போர்வை உள்ளது.

6-ம் இடத்தில் சென்னை

மாநில திட்டக்குழு தகவலின்படி இந்திய மாநகரங்களில் மும்பை புறநகர் 26.91% பசுமைப் போர்வையுடன் முதல் இடத்திலும், டெல்லி (20.20%) 2-ம் இடத்திலும், பெங்களூரு (13.93%) 3-ம் இடத்திலும், 6.25% பசுமைப் போர்வை கொண்ட சென்னை 6-வது இடத்திலும் உள்ளன. இதை கருத்தில் கொண்டு, சென்னையில் பசுமைப் போர்வையை 33.3% ஆக உயர்த்துமாறு அரசுக்கு தமிழக திட்டக்குழு அறிவுறுத்தியுள்ளது.

ராசி, நட்சத்திர அடிப்படையில்..

இதன் அடிப்படையில் ஒவ்வொரு வார்டிலும் சாலை யோரங்களில் தலா 5 கி.மீ. தொலைவுக்கு என மாநகர் முழுவதும் 1000 கி.மீ. தொலைவுக்கு மரம் நடும் மெகா திட்டத்தை மாநகராட்சி நிர்வாகம் உருவாக்கி வருகிறது. 1 கி.மீ.க்கு 200 மரங்கள் என மொத்தம் 2 லட்சம் மரக்கன்றுகளை உருவாக்க, மாடம்பாக்கத்தில் 30 ஏக்கர் பரப்பளவில் உள்ள பண்ணை மேம்படுத்தப்பட்டு வருகிறது. ராசி, நட்சத்திரத்துக்கான மரங்களை நடும் அம்சங்களும் இத்திட்டத்தில் உள்ளன.

ஏற்கெனவே உள்ள மரங்கள் என்சிசி, என்எஸ்எஸ் மாணவர்கள் மூலம் கணக்கெடுக் கப்பட்டு, அவற்றை தொடர்ந்து பராமரிக்கவும் திட்டம் உள்ளது.

இப்பணிகளுக்காக மாமன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறை வேற்றி, துணை இயக்குநர் நிலையில் உள்ள வேளாண் அதிகாரி ஒருவர் அயல்பணி முறையில் மாநகராட்சிக்கு அழைக்கப்பட்டுள்ளார். மாநக ராட்சியில் தற்போது மரங்கள் பராமரிப்புக்கான பூங்கா பிரிவு, மாநகராட்சி பொறியியல் பிரிவின் கீழ் வருகிறது. இந்த பிரிவை துறையாக மாற்றி, அதற்கு பூங்கா இயக்குநர் பதவி ஏற்படுத்தவும் அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.

இத்திட்டம் பற்றி கேட்டபோது சென்னை கிறிஸ்தவக் கல்லூரி தாவரவியல் துறை பேராசிரியர் து.நரசிம்மன் கூறியதாவது:

இது நல்ல திட்டம். தற்போது பல சாலைகள் கான்கிரீட், தார் சாலைகளாக உள்ளன. நடைபாதைகளும் இணைப்புக் கற்களால் மூடப்பட்டுள்ளன. அதனால் சாலையோரம் மரக்கன்றுகளை நட குறைந்தபட்சம் 2 சதுரஅடி பரப்பளவு இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

மரங்களில் உயரம், குட்டை, பருமன், ஒல்லி, அதிகம் கிளைகள் கொண்டவை, கிளைகள் இல்லாதவை என பல வகைகள் உள்ளன. சாலைகளின் அகலம், போக்குவரத்து ஆகியவற்றை கருத்தில் கொண்டு அதற்கேற்ற மரங்களை தேர்வு செய்ய வேண்டும். கட்டிடங்களுக்கு அருகில் மரங்களை நடும்போது, அவை வெளிச்சத்துக்கு ஏற்றவாறு சாய்ந்து வளரும்.

50 வகை மரங்கள்

இதைத் தடுக்க சுமார் 10 அடி உயரமாவது நேராக வளரக்கூடிய மரங்களை நட வேண்டும். ஒரு பகுதி முழுவதும் ஒரே வகையான மரங்களை நடாமல், குறைந்தது 50 வகை மரங்களை தேர்வு செய்து மாற்றி மாற்றி நடவேண்டும். மரங்கள் சென்னையின் தட்பவெப்ப நிலையை தாங்குபவையாக இருப்பதும் அவசியம்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x