Published : 28 Jul 2015 05:38 PM
Last Updated : 28 Jul 2015 05:38 PM

நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு கிடைத்த பரிசு: இழப்பீடு வழங்காமல் 16 ஆண்டுகளாக அலைக்கழிப்பு

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு, நீதிமன்றம் அறிவித்த இழப்பீட்டுத் தொகையை வழங்காமல் அலைக்கழிக்கின்றனர்.

திருவண்ணாமலை மாவட்ட பெருந்திட்ட வளாகத்துக்காக, 1998-ல் பிறப்பிக்கப்பட்ட அரசாணைப்படி வேங்கிக்கால், வட ஆண்டாப்பட்டு மற்றும் நம்மியந்தல் கிராமங்களில் இருந்த 40 ஏக்கர் புறம்போக்கு நிலம், 170 ஏக்கர் விவசாய நிலம் என்று 210 ஏக்கர் நிலம் 1999-ல் கையகப்படுத்தப்பட்டது. அதற்கு இழப்பீட்டுத் தொகையாக ஒரு சதுரடிக்கு 50 பைசா என்று விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

இழப்பீட்டுத் தொகையை உயர்த்தி வழங்கக்கோரி, தி.மலை மாவட்ட சார்பு நீதிமன்றத்தில் நிலம் கொடுத்த 156 பேர், தனித்தனியே வழக்கு தொடர்ந்தனர். அதில், “ஒரு சதுரடிக்கு ரூ.65 வழங்க வேண்டும்” என்று சார்பு நீதிமன்றம் 2010-ல் தீர்ப்பு வழங்கியது. அதன்படி ரூ.100 கோடி வரை இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

அதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில், அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில், “தி.மலை மாவட்ட சார்பு நீதிமன்றம் உத்தரவிட்ட ஒரு சதுரடிக்கு ரூ.65 என்பதில் இருந்து சரிபாதி தொகையை 8 வாரங்களில் வழங்கவும், அதன்பிறகு வழக்கு விசாரணை நடத்தப்படும்” என்று உயர் நீதிமன்றம் 2013 பிப்ரவரியில் உத்தரவிட்டது. 2 ஆண்டுகள் கடந்தும், இழப்பீடு வழங்கவில்லை.

தீர்ப்பை அவமதிப்பதை கண்டித் தும், இழப்பீட்டுத் தொகையை வழங்கக் கோரியும் பெருந்திட்ட வளாகம் அமைக்க இடம் கொடுத்து பாதிக்கப்பட்டோர் நலச் சங்கம் சார்பில் “குடிபுகும் போராட்டம்”, தி.மலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கடந்தாண்டு அக்டோபர் 29-ம் தேதி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்து.

அப்போது மாவட்ட நிர்வாகம் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இழப்பீட்டுத் தொகை உடனடியாக பெற்று தரப்படும் என்று உறுதி கூறப்பட்டது. அதனால் போராட்டமும் கைவிடப்பட்டது. அதேநேரத்தில் உறுதி அளித்தப்படி இழப்பீட்டுத் தொகை வழங்கவில்லை.

அதனால் விரக்கி அடைந்த விவசாயிகள், தி.மலை ஆட்சியர் அலுவலகத்தில் ஆடு மாடுகளுடன் குடிபுகும் போராட்டம், ஜூலை 27-ம் தேதி நடத்தப்படும் என்று அறிவித்தனர். அதன் எதிரொலியாக தி.மலை கோட்டாட்சியர் உமாமகேஸ்வரி முன்னிலையில் தலைமையில் நேற்று முன்தினம் இரவு பேச்சுவார்த்தை நடந்தது. அதில், இழப்பீட்டுத் தொகையை விரைந்து பெற்று தர நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டது. அதன்பேரில் குடிபுகும் போராட்டம் கைவிடப்பட்டது.

இதுகுறித்து விவசாயிகள் கூறும் போது, “நிலத்தை கொடுத்த நாங்கள் அலைக்கழிக்கப்படுகிறோம். நிலத்தையும் பெற்றுக்கொண்டு, எங்களுக்கு உரிய இழப்பீடு கொடுக்காமல் இருப்பது நியாயமா?. ஒவ்வொரு முறையும் அழைத்து பேசுகின்றனர். விரைந்து பெற்றுத் தரப்படும் என்று கூறுகின்றனர். ஆனால், பலனில்லை. நாங்கள் போராட்டத்தை கைவிட்டதும், எங்கள் கோரிக்கையை அதிகாரிகள் மறந்துவிடுகின்றனர். இந்த முறையும் உறுதி கூறியுள்ளனர். அதன்படி இழப்பீட்டுத் தொகையை பெற்று தருவார்களா? என்று தெரியவில்லை” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x