Published : 13 May 2014 10:00 AM
Last Updated : 13 May 2014 10:00 AM
சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள குப்பைக் கிடங்கில் தினமும் மலைபோல குப்பைகள் குவிவதால் அப்பகுதியில் துர்நாற் றம் வீசுகிறது. தொற்றுநோய் பரவும் முன்பு மாநகராட்சி கவனிக்க வேண்டும் என்று அப்பகுதியினர் கோரிக்கை வைக்கின்றனர்.
சென்னை மாநகராட்சி முழுவதும் உள்ள குப்பைகளை அகற்ற ராம்கோ என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் வள்ளுவர் கோட்டத்தைச் சுற்றியுள்ள 127-வது வார்டில் இருந்து 142-வது வார்டு வரை உள்ள குப்பைகளை அகற்றி மாநகராட்சிக்குச் சொந்தமான திருமலைப்பிள்ளை தெருவில் உள்ள குப்பைக் கிடங்கில் கொட்டுகிறது. இவ்வாறு தினமும் 35 வண்டிகள் மூலம் 630 டன் குப்பைகளைக் கொட்டி வருகிறது.
குப்பைக் கிடங்கு உள்ள இடத்தின் அருகில் வித்யோதயா மேல்நிலைப் பள்ளி, சென்னையின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான வள்ளுவர் கோட்டம், கக்கன் காலனி, பாலாஜி அவென்யூ, காமராஜபுரம் போன்ற பகுதிகளைச் சேர்ந்த 5 ஆயிரம் பேர் வசிக்கும் குடியிருப்புகள் உள்ளன. மேலும் தி.நகர், ஜெமினி மேம்பாலம், கோடம்பாக்கம், வடபழனி ஆகிய இடங்களுக்கு செல்பவர்களுக்கான முக்கிய வழித்தடமாகவும் வள்ளுவர் கோட்டம் உள்ளது.
குப்பைக் கிடங்கில் தினமும் மலைபோல குப்பை குவிவதால் எந்நேரமும் அப்பகுதி முழுக்க துர்நாற்றம் வீசுகிறது. அவ்வழியாகச் செல்லும் ஆயிரக்கணக் கானோர் மூக்கைப் பிடித்துக் கொண்டு செல்லவேண்டி உள்ளது.
அசுத்த நீரால் பாதிப்பு
குப்பை கொண்டு செல்லும் வண்டிகளில் இருந்து வெளியேறும் அசுத்த நீரால் இருசக்கர வாகன ஓட்டிகள் பலர் இரவு நேரங்களில் வழுக்கி விழுகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் சென்ற 7 வாகன ஓட்டிகள் விழுந்ததால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆயிரம் விளக்கு பகுதி செயலாளர் எஸ்.கே.முருகேஷ் கூறுகையில், ‘‘வள்ளுவர் கோட்டத்தில் உள்ள குப்பைக் கிடங்கில் இருந்து வாரத்தில் 2 அல்லது 3 முறை மட்டுமே பள்ளிக்கரணை பகுதிக்கு குப்பைகள் கொண்டு செல்லப்படுகின்றன. குப்பைகளை அள்ளியதுமே நேரடியாக பள்ளிக் கரணைக்கு கொண்டுசென்று கொட்டினால், வள்ளுவர் கோட்டம் பகுதியில் துர்நாற்றம் வீசுவது குறையும்’’ என்றார்.
‘‘வள்ளுவர் கோட்டத்தில் உள்ள குப்பைக் கிடங்கின் மொத்த கொள்ளளவு 600 டன். ஆனால் நாள் ஒன்றுக்கு இதைவிட கூடுதலாக குப்பைகள் சேகரிக்கப்பட்டுக் கொட்டப்படுகின்றன. மழை காலத்தில் சுமார் ஆயிரம் டன் குப்பை வரை இந்தக் கிடங்கில் கொட்டப்பட்டுள்ளது. துர்நாற்றம் வீசுவதைத் தடுக்க நோய் தடுப்பு மருந்து, லைன் பவுடர் போடுவது போன்ற நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது’’ என்று
ராம்கோ நிறுவனத்தின் 10-வது மண்டலத் தலைவர் ஜான் மாணிக்கவாசகம் கூறினார். குப்பைக் கிடங்கு ஊழியர் ஒருவர் கூறுகையில், ‘‘குப்பையோடு குப்பையாக எலி, நாய் உடல்களும் கிடக்கின்றன. குப்பை அள்ளும்போது இயந்திரத்தில் பட்டு அந்த உடல்கள் சின்னா பின்னமாகின்றன. எந்த மருந்தாலும் இந்த துர்நாற்றத்தைப் போக்க முடியாது. முகமூடி போன்றவற்றை கொடுத்துள்ளனர். ஆனாலும், பெரிதாகப் பயனில்லை’’ என்றார்.
தொற்றுநோய் பரவும் முன்பு மாநகராட்சி இப்பிரச்சினையை கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பு.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT