Published : 22 Jul 2015 03:48 PM
Last Updated : 22 Jul 2015 03:48 PM

கல்விக் கட்டணம் செலுத்த முடியாமல் தவித்த ஏழை மாணவிக்கு காப்பீட்டு ஊழியர்கள் நிதியுதவி

கோவையில் உள்ள அரசுப் பள்ளியில் பயின்று நல்ல மதிப்பெண் பெற்றதால் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஏழை மாணவிக்கு இடம் கிடைத்துள்ளது. இருப்பினும், கல்விக் கட்டணத்தை செலுத்த முடியாமல் தவித்து வந்ததால் அவருக்கு காப்பீட்டு ஊழியர்கள் நிதியுதவி அளித்துள்ளனர்.

கோவை விளாங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் ஜீவா. காளப்பட்டி அரசுப் பள்ளியில் பிளஸ் 2 படித்து 1,118 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பிடித்தார். பொறியியல் பிரிவில் அவர் பெற்ற 194 கட்-ஆப் மதிப்பெண் மூலமாக, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பயில இடம் கிடைத்துள்ளது.

ஏழ்மையான சூழ்நிலையைக் கொண்ட அவரால் முதலாம் ஆண்டு கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் உள்ளிட்டவற்றை எதிர்கொள்ள முடியாமல் சிரமப்பட்டு வந்தார். இந்நிலையில், மாணவியின் முதலாம் ஆண்டு கல்விக்காக அகில இந்திய காப்பீட்டு ஊழியர் சங்கத்தினர் கோவை மண்டலம் சார்பில் ரூ. 30 ஆயிரம் நிதியை உதவியாக வழங்கியுள்ளனர்.

கோவை , திருச்சி சாலையில் உள்ள எல்.ஐ.சி. அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அந்த சங்கத்தின் ஊழியர்கள் ஒன்றிணைந்து இந்த தொகையை அளித்துள்ளனர். அகில இந்திய காப்பீட்டு ஊழியர் சங்கத்தின் மகளிர் துணைக் குழு அமைப்பாளர் உமாமகேஸ்வரி, இந்த நிதியை மாணவியிடம் வழங்கினார்.

இது குறித்து காப்பீட்டு ஊழியர் சங்கத்தின் கோவை மண்டல பொதுச் செயலாளர் வி.சுரேஷ் கூறும்போது, ‘கடந்த 2008-ம் ஆண்டில் விளாங்குறிச்சி அரசுப் பள்ளியில் மாணவி ஜீவா உள்ளிட்ட தலித் மாணவிகளை, கழிவறையை சுத்தம் செய்யக் கோரி ஆசிரியர்கள் நிர்பந்தம் செய்துள்ளனர். அதனை கண்டித்து ஆட்சியரிடம் மனு அளித்து ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் காரணமாக இருந்தவர்தான் அந்த மாணவி.

ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவரான அவர் மிகவும் கஷ்டப்பட்டு நல்ல மதிப்பெண் பெற்றதால் மதிப்புமிக்க கல்வி நிறுவனத்தில் இடம் கிடைத்துள்ளது. இருப்பினும், கல்விக் கட்டணம் செலுத்த முடியாமல் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, ஊழியர்களிடம் இருந்து திரட்டிய நிதியை அவரிடம் வழங்கினோம். கடந்த 18 ஆண்டுகளாக எங்கள் சங்கம் சார்பில் ‘தினம் ஒரு தேநீரை தியாகம் செய்வோம்’ என்ற அடிப்படையில் நிதியைத் திரட்டி இல்லாதவர்களுக்கு உதவி புரிந்து வருகிறோம். அதில், அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு புத்தகம், பேனா, நோட்டுகள், உதவித்தொகை வழங்கி வருகிறோம். அந்த நிதியில் இருந்துதான் மாணவி ஜீவாவுக்கு வழங்கியுள்ளோம்’ என்றார்.

இதைத் தவிர, அகில இந்திய காப்பீட்டு ஊழியர் சங்கத்தின் கோவை மண்டலம் சார்பில் கடந்த 4 ஆண்டுகளாக சமூகத்தில் பின்தங்கிய ஏழை எளிய மற்றும் தலித் பட்டதாரிகளுக்கு இலவசமாக போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சியை அம்பேத்கர் கல்வி வேலைவாய்ப்பு பயிற்சி மையம் மூலமாக அளிக்கப்படு வருகிறது. அதில் பயின்ற 90 பேர் இதுவரை வங்கி, டிஎன்பிஎஸ்சி, எஸ்.ஐ., உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சமீபத்தில் நடந்த எஸ்.ஐ. தேர்வில் 5 பேர் வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நிகழ்ச்சியின்போது, அகில இந்திய காப்பீட்டு ஊழியர் சங்கத்தின் இணைச்செயலாளர் எம்.கிரிஜா, கோவை கோட்ட தலைவர் எம்.கஜேந்திரன், அம்பேத்கர் கல்வி வேலை வாய்ப்பு பயிற்சி மையத்தின் ஒருங்கிணைப்பாளர் கணேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x