Published : 28 May 2014 10:29 AM
Last Updated : 28 May 2014 10:29 AM
ரயில்கள் தடம்புரள்வதைத் தடுக்க நவீன தொழில்நுட்பத்தில் தண்டவாளங்கள் பராமரிக்கப் படுகிறது. பயணிகள் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக ரயில்வே நிர்வாகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
ரயில் போக்குவரத்தில் தண்டவாளங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. பயணிகள் ரயில்கள், சரக்கு ரயில்கள் என எண்ணற்ற ரயில்கள் தினமும் இயக்கப்படுகின்றன. அவற்றின் எடை மற்றும் வேகம் ஆண்டுதோறும் அதிகரிக்கிறது. ஆகவே ரயில்களின் வேகம் மற்றும் அதனால் ஏற்படும் அதிர்வுகளைத் தாங்குமளவுக்கு தண்டவாளங்கள் இருக்க வேண்டியது அவசியம்.
கான்கிரீட் ஸ்லீப்பர் கட்டைகள்
முன்பெல்லாம் பர்மா தேக்குமரத்தில் செய்யப்பட்ட சிலிப்பர் கட்டைகளைப் பதித்து தண்டவாளம் அமைக்கப்பட்டது. இப்போது கான்கிரீட் சிலிப்பர் கட்டைகளைக் கொண்டு தண்டவாளம் அமைக்கிறார்கள். இதுகுறித்து ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், “மரத்தாலான சிலிப்பர் கட்டைகள் மீது போடப்பட்ட தண்டவாளங்களின் இடைவெளி ரயில்களின் அதிர்வு காரணமாக நாளடைவில் விரிவடையும். அதனால் ரயில் தடம்புரளும் அபாயம் உள்ளது. அதனால்தான் தற்போது தேக்கு மர சிலீப்பர் கட்டைகளுக்குப் பதிலாக கான்கிரீட் சிலீப்பர் கட்டைகளைப் பயன்படுத்துகிறோம். இதனால் ரயில்கள் தடம்புரள்வது குறைந்திருக்கிறது” என்றார்.
வலுவாக்கப்படும் தண்டவாளம்
ரயில்களின் எண்ணிக்கை குறிப்பாக சரக்கு ரயில் பெட்டிகளின் எண்ணிக்கை, மற்றும் எடை அதிகரித்துள்ளதால் ஏற்படும் அதிர்வைத் தாங்கும் வகையில் ஒரு மீட்டர் தண்டவாளத்தின் எடை 52 கிலோவில் இருந்து 60 கிலோவாக அதிகரிக்கப்படுகிறது.
அத்துடன் குறிப்பிட்ட தொலைவில் தண்டவாளத்தை இணைப்பதற்காக “பிஷ் பிளேட்ஸ்” வைத்து அதை போல்டுகளைப் போட்டு பொருத்துவார்கள். ரயில் போக்குவரத்து காரணமாக அந்த போல்டுகள் கொஞ்சம் கொஞ்சமாக கழன்றுவிட வாய்ப்புள்ளது. நாசவேலை செய்பவர்கள் ரயிலைக் கவிழ்ப்பதற்காகவும் போல்டுகளை கழற்றிவிட வாய்ப்புள்ளது. ரயில்கள் இவ்வாறு தடம்புரள்வதை தடுப்பதற்காக தற்போது ‘வெல்டிங்’ வைத்து தண்டவாளங்களை இணைக்கிறார்கள். இதனால் ரயில்கள் தடம்புரளும் அபாயம் குறைந்திருப்பதாக ரயில்வே நிர்வாகம் கூறுகிறது.
துருப்பிடிப்பதால் ஏற்படும் விரிசல்
ரயில்பெட்டிகளில் இருந்து கழி வறைக் கழிவுகள் தண்டவாளத்தில் விழுவதால் தண்டவாளம் துருப்பிடிக்க வாய்ப்புள்ளது. அதை கவனிக்காமல் விட்டுவிட்டால் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டு ரயில்கள் தடம்புரளும். துருப்பிடிப்பதால் தண்டவாளத்தில் ஏற்படும் விரிசலை கண்டுபிடிப்பது சிரமம். இதற்காக ‘அல்ட்ராசோனிக் பிளா டிடெக்டர்’ என்ற இயந்திரத்தை ரயில்வே நிர்வாகம் பயன்படுத்தி வருகிறது. இந்த நவீன இயந்திரம், ‘கேங்க் மேன்’ டிராலியில் சென்று தண்டவாள விரிசலைக் கண்டுபிடிப்பதைவிட துல்லியமாக விரிசல்களைக் கண்டுபிடிக்கிறது. இப்புதிய இயந்திரத்தை தண்டவாளத்தின் இருபகுதிகளிலும் தனித்தனியே வைத்து மிகவும் மெதுவாக இயக்குவதால் துருப்பிடிப்பதால் ஏற்படும் விரிசலை துல்லியமாகக் கண்டுபிடிக்க முடிகிறது என்கின்றனர் ரயில்வே பொறியாளர்கள்.
பராமரிப்பு இயந்திரம்
ரயில் அதிர்வுகளைக் குறைப் பதற்காக தண்டவாளத்திலும் பக்கவாட்டிலும் கருங்கல் ஜல்லி கொட்டப்படுகிறது. ரயில் போக்குவரத்து காரணமாக கருங்கல் ஜல்லி நொறுங்கி பவுடராகிவிடும். இதை அகற்றா விட்டால் தண்டவாளத்தில் மழைநீர் தேங்கி, தண்டவாளத்துக்கும் ரயில் போக்குவரத்துக்கும் பாதிப்பு ஏற்படும். எனவே, குறிப்பிட்ட கால இடைவெளியில் இப்பவுடரை அப்புறப்படுத்திவிட்டு, மீண்டும் அங்கே கருங்கல் ஜல்லி கொட்டுவார்கள். ரயில்வே ஊழியர்கள் செய்து வரும் இப்பணியை மேற்கொள்வதற்காக தற்போது இருப்புப்பாதை பராமரிப்பு இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. ரயில்வே ஊழியர்கள் இப்பணியைச் செய்யும்போது அந்த இடத்தில் 20 கிலோ மீட்டர் வேகத்தில் ரயிலை இயக்க முடியும். ஆனால், இருப்புப்பாதை பராமரிப்பு இயந்திரத்தைக் கொண்டு இப்பணியைச் செய்தால் அந்தப் பாதையில் ரயில்களை இயக்க முடியாது. இயந்திர பராமரிப்பில் இதுதான் பிரச்சினை. இருப்பினும், மனிதர்களைக் கொண்டு தண்டவாளத்தைப் பராமரிப்பதைவிட இயந்திரத்தைக் கொண்டு செய்யும்போது வேகமாகவும், கச்சிதமாகவும் செய்து முடிக்க முடிகிறது என்கின்றனர் ரயில்வே அதிகாரிகள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT