Published : 17 Jul 2015 08:28 AM
Last Updated : 17 Jul 2015 08:28 AM

எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் இயங்கி வரும் அனைத்து நீதிமன்றங்களும் ஜூலை 31-க்குள் மூர் மார்க்கெட் வளாகத்துக்கு மாற்றம்

எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் இயங்கி வரும் அனைத்து நீதிமன்றங்களும் ஜூலை 31-ம் தேதிக்குள் மூர் மார்க்கெட் (அல்லிக்குளம்) வளாகத்துக்கு மாற்றப்பட உள்ளன. முதல்கட்டமாக 6 மற்றும் 13-வது பெருநகர குற்றவியல் நீதிமன்றங்கள் மூர் மார்க்கெட் வளாகத்தில் செயல்படத் தொடங்கியுள்ளன.

எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் சென்னை பெருநகர தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம், கூடுதல் நடுவர் நீதிமன்றம், பொருளாதார குற்றப் பிரிவு நீதிமன்றங்கள், விரைவு நீதிமன்றங்கள் என 10-க்கும் மேற்பட்ட நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன.

அங்கு போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால் அடிப்படை வசதிகளுடன் கூடிய நவீன நீதிமன்ற வளாகத்தை அமைக்க வேண்டும் என்று வழக்கறிஞர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் அவ்வளாகத்தில் உள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த கட்டிடத்தை பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணி மற்றும் நவீன நீதிமன்ற வளாகத்தை கட்டும் பணி ரூ.10 கோடியே 88 லட்சம் செலவில் தொடங்கப்பட உள்ளது.

இதையொட்டி, எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் இயங்கிவந்த நீதிமன்றங்களை மூர் மார்க்கெட் (அல்லிகுளம்) வளாகத்தில் உள்ள கட்டிடத்துக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது. ஜூலை 2-ம் தேதி முதல் நீதிமன்றங்களை மூர் மார்க்கெட் வளாகத்துக்கு மாற்றும் பணி தொடங்கியது. 2 நீதிமன்றங்கள் ஜூலை 15 முதல் மூர் மார்க்கெட் வளாகத்தில் செயல்படத் தொடங்கியுள்ளன.

இது தொடர்பாக எழும்பூர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் எஸ்.சந்தன் பாபு கூறியதாவது:

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி அனைத்து நீதிமன்றங்களும் மூர் மார்க்கெட் வளாகத்துக்கு மாற்றப்பட்டு வருகிறது. தற்போது 6 மற்றும் 13-வது பெருநகர குற்றவியல் நீதிமன்றங்கள் மட்டும் மூர் மார்க்கெட் வளாகத்துக்கு மாற்றப்பட்டு செயல்படத் தொடங்கியுள்ளன. ஜூலை 21 முதல் 5 மற்றும் 14-வது குற்றவியல் நீதிமன்றங்கள் மற்றும் இரு விரைவு நீதிமன்றங்கள் மூர் மார்க்கெட் வளாகத்தில் செயல்படத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜூலை 31-ம் தேதிக்குள் அனைத்து நீதிமன்றங்களும் மூர் மார்க்கெட்டுக்கு மாற்றப் பட்டு செயல்படத் தொடங் கும்.

ஆகஸ்ட் 3-ம் தேதிக்குள் பெருநகர குற்றவியல் நீதிமன்ற தலைமை நீதிபதி, எழும்பூர் நீதிமன்ற வளாகத்தை பொதுப் பணித்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கு காரணமாக நீண்டகாலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களும் அகற்றப்பட்டு வருகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x