Published : 26 May 2014 09:25 AM
Last Updated : 26 May 2014 09:25 AM
குவாரி மென்பொருள் மேலாண் மைத் திட்டத்தால் தமிழக அரசின் டாமின் நிறுவனம் முதல்முறையாக ரூ.182 கோடிக்கு மொத்த வருவாயை பெற்றுள்ளது. இதையடுத்து மேலும் 9 அரசு நிறுவனங்களிலும் இத்திட்டத்தை விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு கனிம நிறுவனம் (டாமின்), 1979-ல் எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த போது ரூ.200 கோடி முதலீட்டில் தொடங் கப்பட்டது. தமிழகத்தில் கனிம வளங்களை கண்டுபிடித்தல், வெட்டி எடுத்தல், விற்பனை செய்தல் ஆகிய வற்றை முக்கிய நோக்கமாக கொண்டு டாமின் செயல்பட்டு வருகிறது.
தமிழகத்தில் நெல்லை, மதுரை, விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்படுகின்றன. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே குன்னம் என்ற இடத்தில் வெட்டி எடுக்கப்படும் கிரானைட், இந்தியாவில் முதல்தரமான கறுப்பு நிற கிரானைட் கற் களாகும். கிரானைட் கற்களை பாலிஷ் செய்யவும், தேவைக்கு ஏற்றவாறு வடிவமைக்கவும் சிறப்பு தொழிற் சாலைகளை டாமின் அமைத் துள்ளது. இதுதவிர, சிவகங்கையில் கிராபைட், திருப்பத்தூரில் மைக்கா, அரியலூரில் சுண்ணாம்புகற்கள், காஞ்சிபுரத்தில் மணல் தாதுக்கள் வெட்டி எடுக்கப்படு கின்றன.
இந்நிலையில், 2003-ம் ஆண்டு டாமின் நிறுவனத்துக்கு சொந்தமான இடத்தில் கனிம வளங்களை தனியாரும் வெட்டி எடுத்து விற்கலாம் என்றும் இதை டாமின் கண்காணிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதற்கான டெண்டரும் விடப்பட்டது. அதன் பிறகு டாமினில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் எழுந்தன. இந்த முறைகேடுகளால், அரசுக்கு தொடர்ந்து வருவாய் இழப்பு ஏற்பட்டது. 2012 வரையில் ஆண்டு மொத்த வருமானமே ரூ.100 கோடி என்ற அளவில்தான் இருந்தது.
இதையடுத்து, அதிகாரிகள் கொண்ட குழுவை அமைத்து அரசு ஆய்வு செய்தது. அதனடிப்படையில், தனியார் நிறுவன டெண்டர்களை ரத்து செய்துவிட்டு, குவாரி மேலாண்மை திட் டத்தை செயல்படுத்த முடிவு செய்யப் பட்டது. அதன்படி, 2012 டிசம்பரில் குவாரி மென்பொருள் மேலாண்மை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. தமிழகத் தில் உள்ள அனைத்து கனிம குவாரி களிலும் கேமராக்கள் பொருத்தப் பட்டு, அவை டாமின் தலைமை அலுவலகத்துடன் கம்ப்யூட்டரில் இணைக்கப்பட்டன. அதன் மூலம் குவாரிகளின் எல்லா செயல்பாடு களையும் தலைமை அலுவலகத்தில் இருந்தே கண்காணிக்க முடிந்தது.
டாமின் நிறுவன செயல்பாடுகள், வருவாய், செலவுக் கணக்குகள், மொத்த உற்பத்தி, ஏற்றுமதி உள்பட எல்லா பணிகளும் கண்காணிக்கப் பட்டன. இதன்மூலம் பெரும்பாலான முறைகேடுகள் தடுக்கப்பட்டன. அதன் பிறகு டாமின் நிறுவனத்தின் வருவாய் அதிகரித்தது. குவாரி மென்பொருள் மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட்ட ஆண்டிலேயே (2012-13) வருவாய் 122 கோடியை எட்டியது. இப்போது 2013-14ம் நிதி ஆண்டில் டாமின் நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.182 கோடியாக உயர்ந்துள்ளது.
இது தொடர்பாக டாமின் நிறுவன உயர் அதிகாரி ஒருவர் கூறும் போது, ‘‘குவாரி மென்பொருள் மேலாண்மை திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டதால் முறைகேடுகள் நடக்க வாய்ப்பே இல்லை. டாமின் நிறுவனத்தின் முழு செயல்பாடுகளும் கண்காணிக்கப்படுகின்றன. கடந்த 10 ஆண்டுகளாக டாமின் மொத்த வருவாய் ரூ.100 கோடியை தாண்டவில்லை. இப்போது மொத்த வருவாய் ரூ.182 கோடியாக உயர்ந்துள்ளது. இந்த திட்டம் சிறப்பாக செயல்படுவதால், தமிழக அரசுக்கு சொந்தமான சிமென்ட் நிறுவனம், புவியியல், சுரங்கத் துறை நிறுவனம், உப்பு நிறுவனம் உள்பட மொத்தம் 9 நிறுவனங்களுக்கு விரிவு படுத்த தொழில்துறை முடிவு செய் துள்ளது’’ என்றார்.
டாமின் ஊழியர் சங்க பொதுச் செயலாளர் கே.விஜயன் கூறுகையில், ‘‘குவாரி மென்பொருள் மேலாண்மை திட்டம் கொண்டு வந்த பிறகு, டாமின் சிறப்பாக செயல்படுகிறது. தமிழக அரசுக்கும் வருவாய் அதிகரித் துள்ளது. இத்திட்டத்தை டாமின் மட்டுமல்லாமல், மற்ற அரசு நிறுவனங் களுக்கும் விரிவுபடுத்த வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் அரசு தொழில்துறை நிறுவனங்களில் தனியார் பங்களிப்பை அனுமதிக்கக் கூடாது’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT