Published : 14 Jul 2015 11:17 AM
Last Updated : 14 Jul 2015 11:17 AM

இசையில் புதுமைகளைப் படைத்தவர் எம்.எஸ்.வி.- ராமதாஸ்

இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் மறைவுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "தமிழ் திரையுலகின் தனிப்பெரும் இசை அமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி கேட்டு பெரும் அதிர்ச்சியும், வேதனையும், தீராத் துயரமும் அடைந்தேன்.

திரைப்பட இசையமைப்பாளராக 62 ஆண்டுகளுக்கு அறிமுகமான விஸ்வநாதன் திரை இசையில் எண்ணற்ற புதுமைகளை படைத்தவர். தனது இசையால் தமிழ்நாட்டு மக்களை கட்டிப்போட்டவர்.

வீரமூட்டும் பாடல்களாக இருந்தாலும், காதல் பாடல்களாக இருந்தாலும், சோகப்பாடல்களாக இருந்தாலும் அதற்கேற்ற உணர்வை ரசிகர்களிடம் ஏற்படுத்துவது தான் இவரது இசையின் மகத்துவம். இவரது இசையில் மயங்காதவர்கள் இருக்க முடியாது; இதற்கு நானும் விதிவிலக்கல்ல.

தனிப்பட்ட வாழ்க்கையிலும் குழந்தையைப் போல பழகக்கூடியவர். விருந்தோம்பலில் சிறந்தவர். இசையில் சிறந்தவன் என்ற கர்வம் இல்லாதவர். அதனால் தான் இப்போது அறிமுகமான இசையமைப்பாளர்களுடன் கூட இணைந்து பணியாற்றுவது அவருக்கு சாத்தியமானது. ஆனால், 1200 படங்களுக்கு இசையமைத்தும் இவரது திறமை நடுவண் அரசால் அங்கீகரிக்கப்படவில்லை என்பது தான் சோகம்.

இவரது மறைவு இந்திய திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் திரையுலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் , அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்" இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x