Published : 08 Jul 2015 05:22 PM
Last Updated : 08 Jul 2015 05:22 PM

செட்டிநாடு அரசு கால்நடைப் பண்ணையில் ராஜஸ்தான் தர்பார்க்கர் இன பசு மாடுகள்: விவசாயிகள் வரவேற்பு

பால் கறக்கவும், உழவு பணிக்கும் பயன்படும் ராஜஸ்தான் மாநிலத்தின் தர்பார்க்கர் இன பசு மாடுகள் செட்டிநாடு அரசு கால்நடைப் பண்ணையில் மட்டுமே கிடைப்பதால் விவசாயிகளிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழகத்தில் திருநெல்வேலி, விருதுநகர், சாத்தூர், புதுக் கோட்டை, தஞ்சாவூர் மாவட்டம் ஈச்சங்கோட்டை, ஒரத்தநாடு அருகே தொழுவூர், ஊட்டி, ஓசூர், திருவாரூர் கொற்கை, முகுந்தராயபுரம், காரைக்குடி அருகே செட்டிநாடு உட்பட 12 இடங்களில் அரசு கால்நடைப் பண்ணைகள் உள்ளன.

செட்டிநாடு அரசு கால்நடைப் பண்ணை 1957-ம் ஆண்டு 1907.32 ஏக்கரில் தொடங்கப்பட்டது. இங்கு ஏழை விவசாயிகளுக்கு குறைந்த விலையில் பால், முட்டை விற்கப்படுகிறது.

இதேபோல் உழவு பணிக்கா கவும், இனப் பெருக்கத்துக்காகவும் ஜெர்சி, பிரிசியன், தர்பார்க்கர், கிடேரி இன காளைகள் அரசு நிர்ணய விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், ஜமுனாபாரி, தலைச் சேரி வெள்ளாடுகள், ராமநாதபுரம் வெள்ளை செம்மறி ஆடுகளும், யார்க்சையர் வெண் பன்றியும் வளர்க்கப்பட்டு அதன் குட்டிகள் அரசு விலையில் வழங்கப்படுகிறது.

பால் கறப்பதற்கும், உழவுப் பணிக்கும் பயன்படும் ராஜஸ்தான் மாநிலத்தின் தர்பார்க்கர் இன மாடுகள் ஆராய்ச்சியின் அடிப்படையில் வளர்க்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இந்த இன மாடுகள் மாநிலத்தில் செட்டிநாடு கால்நடைப் பண் ணையில் மட்டுமே கிடைப்பதால் விவசாயிகளிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

இது குறித்து, கால்நடைத் துறை சிவகங்கை மண்டல இணை இயக்குநர் ராம.விசுவநாதன் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

மாநிலத்தில் உள்ள அரசு கால்நடைப் பண்ணைகளில் செட்டி நாடு கால்நடைப் பண்ணையில் மட்டுமே தர்பார்க்கர் இன பசுமாடுகள் உள்ளன. ராஜஸ்தான் மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட இவ்வகை மாடுகள் கடும் வறட்சியை தாங்கி வளரக்கூடியது.

மற்ற மாடுகளை விட குறைந்தது 5 முதல் 6 லிட்டர் வரை பால் கொடுக்கும். பால் கெட்டியாகவும், சத்து நிறைந்ததாகவும் உள்ளது. மேலும், காளை மாடுகள் போன்று கடின வேலைகளைச் செய்யும் பழக்கம் உள்ளது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x