Published : 13 Jul 2015 09:50 AM
Last Updated : 13 Jul 2015 09:50 AM
திருவல்லிக்கேணி பண்ணை பசுமை காய்கறி கடையில் விற்பனையாகாமல் தேங்கும் காய்கறிகள், கீரைகளைக் கொண்டு தினமும் மாலை நேரத்தில் போண்டா, பஜ்ஜி போட்டு சுடச்சுட விற்கப்படுகிறது. இந்த முன்மாதிரித் திட்டத்துக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
விவசாயிகள் உற்பத்தி செய்யும் காய்கறிகளுக்கு நல்ல விலை கிடைக்கவும், சென்னையில் காய்கறி விலையை கட்டுக்குள் வைக்கவும் அரசு சார்பில் பண்ணை பசுமை காய்கறி கடைகள் கடந்த 2013-ல் திறக்கப்பட்டன. சென்னை யில் தற்போது 2 நடமாடும் பண்ணை பசுமை காய்கறி கடைகள் உட்பட 42 கடைகள் உள்ளன. சென்னையில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களுக்கும் இக்கடைகள் மூலமாகவே காய்கறிகள் விநியோகிக்கப்படுகின்றன.
பண்ணை பசுமை கடைகளுக் காக கிருஷ்ணகிரி, திண்டிவனம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவ சாயிகளிடம் இருந்து நேரடியாக தினமும் சுமார் 10 டன் காய்கறிகள் கொள்முதல் செய்யப்படுகின்றன. இவற்றில் அன்றைய விற்பனை போக மீதமாகும் கீரைகள், காய் கறிகள் அடுத்த நாள் வாடிவிடு கின்றன. தவிர, கொள்முதல் செய்து எடுத்துவரும்போது சேதமாகிற, அளவில் சிறியதாக இருக்கிற காய்கறிகளும் விற்பனை ஆகாமல் தேங்கிவிடுகின்றன. இவை விற்பனைக்கு தகுதியற்றவையாக ஆகிவிடுகின்றன.
இதனால், பண்ணை பசுமை கடைகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. தொடக்கத்தில் இதை அரசு ஏற்றுக்கொண்டது. தற்போது அரசு ஏற்றுக்கொள்ளாத நிலையில், பண்ணை பசுமை கடைகளே இத்தகைய இழப்புகளை ஏற்று வருகின்றன.
இந்நிலையில், இதுபோன்ற இழப்புகளை தவிர்க்கும் வகையில், திருவல்லிக்கேணி பண்ணை பசுமை காய்கறி கடையில் முன்மாதிரி திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இங்கு மீதமாகும் கீரைகள், காய்கறிகளைக் கொண்டு, தினமும் மாலை நேரங்களில் வாழைக்காய், உருளைக்கிழங்கு, மிளகாய் பஜ்ஜிகள், காய்கறி போண்டா, கீரை வடை ஆகியவை தயாரிக்கப்பட்டு சுடச்சுட விற்கப் படுகின்றன. இதற்காக மகளிர் சுயஉதவிக் குழுவைச் சேர்ந்த 2 பெண்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இத்திட்டத்தின் மூலம் மாதத்துக்கு ரூ.50 ஆயிரம் வரை வருவாயும் ஈட்டப்படுகிறது. இது வாடிக்கை யாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஏராளமானோர் காத்திருந்து வாங்கிச் செல்கின்றனர்.
பஜ்ஜி வாங்க வந்திருந்த திருவல்லிக்கேணி சி.பிரேமா இதுபற்றி கூறும்போது, ‘‘இங்கு வடை, பஜ்ஜி, போண்டா சுவையாக இருக்கிறது. தரமான எண்ணெயில் செய்கின்றனர். எங்கள் குழந்தைகள் விரும்பி உண்கின்றனர்’’ என்றார்.
புரசைவாக்கத்தை சேர்ந்த என்.ரவிக்குமார் கூறியபோது, ‘‘சொந்த வேலையாக இப்பகுதிக்கு வந்தபோது இந்த கடையைப் பார்த்தேன். கீரை வடை, போண்டா வாசனை மூக்கைத் துளைக்கிறது. இதுபோல, அனைத்து பண்ணை பசுமை கடைகளிலும் போண்டா, பஜ்ஜி போட்டு விற்கலாம்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT