Published : 29 Jul 2015 08:29 AM
Last Updated : 29 Jul 2015 08:29 AM
கல்லூரி மாணவர்களிடையே அடிக்கடி ஏற்படும் மோதலுக்கு முடிவுகட்ட உயர் கல்வித்துறை மற்றும் காவல்துறையினர் இணைந்து புதிய அணுகுமுறையை மேற்கொண்டுள்ளனர்.
சென்னையில் பச்சையப்பன் கல்லூரி, மாநிலக் கல்லூரி மாணவர்களிடையே பல ஆண்டுகளாக பகை நீடித்து வருகிறது. சிறிய பிரச்சினை என்றாலும் பெரும் மோதலில் முடிகிறது.
இதேபோல நந்தனம் கலைக் கல்லூரி மற்றும் புதுக் கல்லூரி மாணவர்களிடையே நீண்ட காலமாக மோதல் நடந்து வருகிறது. அற்ப காரணங்களுக் காக மாணவர்கள் கல்லூரி வளாகங்களில் மட்டுமின்றி, வெளியேயும் மோதிக் கொள்கின் றனர்.
மேலும், கல்லூரிகளில் நடை பெறும் மாணவர் தலைவர் தேர்தல், கலை விழாக்களின்போதும் மாணவர்களிடையே மோதல் நிகழ்வதுண்டு. கடந்த ஆண்டில் மட்டும் கல்லூரி மாணவர்களிடையே 30-க்கும் மேற்பட்ட மோதல்கள் நிகழ்ந்ததாக காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவாகியுள்ளன. தகராறில் ஈடுபட்ட 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்லூரியை விட்டு நீக்கப்பட்டுள்ளனர்.
இந்த ஆண்டு வகுப்புகள் தொடங்கி சில நாட்களே ஆகியுள்ள நிலையில், மீண்டும் மோதல் போக்கு தொடங்கிவிட்டது. இப்படி அடிக்கடி ஏற்படும் மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க உயர்கல்வித் துறையும் காவல்துறையும் இணைந்து புதிய அணுகுமுறையை கையாள்கின்றன.
இதுகுறித்து கல்லூரிக் கல்வி இயக்குநரக அலுவலர் ஒருவர் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் சட்ட விரோதமாக கூடுவதையும், ஆயுதங்கள் பதுக்கி வைப்பதையும் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரச்சினைக்குரிய கல்லூரிகளில் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு கூடுதல் காவலர்கள் நியமிக் கப்பட்டுள்ளனர். மாணவர்களை நல்வழிப்படுத்தும் முயற்சிகள் பேராசிரியர்கள் மூலம் எடுக்கப்பட்டு வருகின்றன.
மாதந்தோறும் ஆலோசனைக் கூட்டம் நடத்தி மாணவர்களின் குறைகளைக் கலைய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் மாணவர்கள் வழிதவறி செல்லாத சூழலை உருவாக்கியுள்ளோம்.
இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.
காவல் துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘பேருந்து தினம் கொண்டாட உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதையும் மீறி கொண்டாட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்து வருகிறோம். பிரச்சினைக்குரிய கல்லூரிகளில் நிலைமையைக் கண்காணிக்க கூடுதலாக உளவுப் பிரிவு மற்றும் நுண்ணறிவுப் பிரிவு காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தரும் தகவல்கள் அடிப்படையில், உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கிறோம். இதுபோன்ற ஏற்பாடுகளால் மோதல் கட்டுப் படுத்தப்பட்டுள்ளது’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT