Published : 06 Jul 2015 10:37 AM
Last Updated : 06 Jul 2015 10:37 AM

திருவாரூர் மாவட்டம் ஆலங்குடியில் குரு பெயர்ச்சி விழா

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டம், ஆலங்குடியில் உள்ள ஆபத்சகாயேஸ்வரர் குரு பரிகார கோயிலில் நேற்று இரவு குரு பெயர்ச்சி விழா விமரிசையாக நடைபெற்றது.

குரு பகவான் கடக ராசி யிலிருந்து சிம்ம ராசிக்கு நேற்று இரவு 11 மணியளவில் இடம் பெயர்ந்தார். இதையொட்டி, நவக்கிரக தலங்களில் ஒன்றான ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குரு பரிகார கோயிலில் குரு பெயர்ச்சி விழா நடைபெற்றது.

இந்த தலம் திருஞான சம்பந்தரால் பாடல் பெற்றது. அமுதம் கடைந்தபோது ஏற்பட்ட விஷத்தால் அவதிப்பட்ட தேவர்கள் இறைவனை வேண்ட, ஆலமாகிய விஷத்தை இறைவன் குடித்து காத்தமையால் இந்த ஊருக்கு ஆலங்குடி எனப் பெயர் வந்தது. இங்கு, இறைவன் ஆபத்சகாயேஸ்வரர் என அழைக்கப்படுகிறார். ஏலவார் குழலி தவம் செய்து இறைவனை திருமணம் செய்து கொண்டதால், இந்த தலத்துக்கு திருமணமங்கலம் என்ற பெயரும் உண்டு.

பிரசித்தி பெற்ற இக்கோயிலில் குரு பெயர்ச்சி விழா விமரிசையாக நடைபெறும். இதையொட்டி, நேற்று அதிகாலை உலக நன்மைக்காக குரு பரிகார ஹோமம் நடந்தது. தொடர்ந்து, அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. பஞ்ச மூர்த்திகளுக்கு சந்தனக் காப்பு அலங்காரமும், குரு பகவான் மூலவருக்கு விபூதி அலங்காரத்துடன் தங்கக் கவசமும் சாற்றப்பட்டது. உற்சவ தட்சிணாமூர்த்திக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. நேற்று அதிகாலை முதல் நீண்டவரிசையில் நின்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் குரு பகவானை வழிபட்டனர்.

இரவு 11 மணியளவில் குரு பகவான் கடக ராசியிலிருந்து சிம்ம ராசிக்கு பிரவேசம் செய்தபோது, மூலவர் குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள், தீபாராதனை செய்யப்பட்டது. இதில், பல்வேறு மாநிலங்களிலிருந்தும் வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

இதையொட்டி, தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கு.தர்மராஜன் தலைமையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x