Published : 13 Jul 2015 03:20 PM
Last Updated : 13 Jul 2015 03:20 PM

கடந்த இரண்டு ஆண்டுகளாக குமரியில் தேன் கொள்முதல் விலையை உயர்த்தாததால் உற்பத்தியாளர்கள் விரக்தி

கடந்த இரண்டு ஆண்டுகளாக தேன் கொள்முதல் விலையை உயர்த்தாததால் கன்னியாகுமரி மாவட்டத்தில் தேனீ வளர்ப்போர் போதிய வருவாயின்றி வேதனையில் உள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்குப் பகுதியான மார்த்தாண்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தேனீ வளர்ப்புக்கு ஏற்ற சூழல் நிலவுகிறது. இங்கு ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தேனீ வளர்ப்புத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றன.

1930-ம் ஆண்டில் மார்த்தாண்டம் ஒய்.எம்.சி.ஏ. முயற்சியால் ஸ்பென்சர் என்ற ஐரோப்பியர் குமரி மாவட்டத்தில் தேன் உற்பத்தியை தொடங்கினார். அதைத் தொடர்ந்து கே.டி.பால் என்பவர் இப்பகுதியில் தேனீ வளர்ப்பை முறைப்படுத்தினார். இப்போது குமரி மாவட்டத்தில் மட்டும் 40,000 குடும்பங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் தேனீ வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றன.

இங்குள்ள விவசாயிகள் கன்னியாகுமரி மாவட்டம் மட்டும் அல்லாமல் கேரளா, கர்நாடகாவிலும் தேனீப் பெட்டிகளை அமைத்து தேன் சேகரித்து வருகின்றனர். இவர்கள் மார்த்தாண்டத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. தேனீ வளர்ப்போர் கூட்டுறவு சங்கங்களிலும் தேனை விற்கின்றனர்.

லாபம் குறைவு

இந்நிலையில் போதிய விலை கிடைக்காததால் தற்போது பலரும் தேனீ வளர்ப்புத் தொழிலை கைவிட்டு வருகின்றனர். இது தொடர்பாக நாஞ்சில் நாட்டு வேளாண் உற்பத்தியாளர் சங்க தலைவர் ஹென்றி கூறும்போது, “கன்னியாகுமரி மாவட்ட தேனீ வளர்ப்போர் ஆண்டு ஒன்றுக்கு 40 லட்சம் கிலோ தேன் உற்பத்தி செய்கின்றனர். இது முன்பைவிட 20 சதவீதம் குறைவானது. இப்போது உள்ள இளைய தலைமுறையினரிடம் தேனீ வளர்ப்பு குறித்த புரிதலோ, அக்கறையோ இல்லை. இதன் காரணமாக தேனீ வளர்ப்புத் தொழிலில் ஈடுபடுவோர் குறைந்து வருகின்றனர்.

2012-13-ம் நிதியாண்டில் ஒரு கிலோ தேன் ரூ. 130 என விலை நிர்ண யம் செய்யப்பட்டது. அதன் பின்பு இரண்டு ஆண்டு களாக தேனுக்கான விலை அதிகரிக்கப்படவில்லை. தேன் விலையை கேரளா அரசுதான் நிர்ணயிக்க வேண்டும் என தமிழக அரசும், தமிழகம்தான் நிர்ணயிக்கும் என கேரள அரசும் கூறி வருகின்றன.

கிலோ ரூ. 130 என்ற விலை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எங்களுக்கு கட்டுப்படியானது. ஆனால், இப்போதுள்ள விலைவாசி உயர்வு, பராமரிப்பு செலவுகள், வேலையாட்கள் கூலியோடு ஒப்பிடுகையில் லாபம் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இயற்கை சீற்றங்களின் போது தேனீ வளர்ப்புத் தொழில் கடுமையாக பாதிக்கும். அது போன்ற சமயங்களில் அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். தேன் உற்பத்தியாளர்களையும் நலவாரியத்தில் பதிவு செய்ய வேண்டும்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாற்பதாயிரம் குடும்பங்கள் தேன் உற்பத்தியை சார்ந்திருக்கின்றன. ஆனால், இதுவரை இங்கு தேனீ ஆராய்ச்சி மையம் அமைக்கப்படவில்லை. குமரி மாவட்ட தேன் உற்பத்தியாளர்களின் சந்தேகங்களை தீர்க்கும் வகையில் பூச்சியியல் துறை, நோயியல் துறை வல்லுநர்கள் இப்பகுதிக்கு வந்து ஆய்வு நடத்த வேண்டும்” என்றார்.

ஆராய்ச்சி மையம் தேவை

நாட்டிலேயே ஏ1 தர தேன் இங்கு தான் கிடைக்கிறது. இந்த ரக தேன்தான் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. ஆனால், இதன் மூலம் கூடுதல் லாபம் பெற ஈரத்தன்மை பற்றிய தெளிவும், விழிப்புணர்வும் விவசாயிகளுக்கு தேவைப்படுகிறது. இதற்கென ஆராய்ச்சி மையத்தை ஏற்படுத்த வேண்டும்.

தேனீ வளர்ப்பவர்களின் நலனுக் காக தேசிய தேனீ வாரியத்தை மத்திய அரசு அமைத்திருக்கிறது. அதன் கீழ் மாநில அரசுகள், தேனீ வளர்ப்பு குழுமத்தை அமைக்க வழிகாட்டியிருக்கிறது. ஆனால், தமிழக அரசு அந்த குழுமத்தை இதுவரை அமைக்கவில்லை என்று தேன் உற்பத்தியாளர்கள் ஆதங்கப்படுகின்றனர்.

குமரி மாவட்டத்தில் 40,000 குடும்பங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் தேனீ வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x