Published : 05 Jul 2015 12:45 PM
Last Updated : 05 Jul 2015 12:45 PM

தென் மாவட்டங்களில் செயல்பட்டுவரும் பாலூட்டும் தாய்மார்களுக்கான தனி அறை: அச்சாரமிட்ட ரோட்டரி சங்கங்கள்

`பாலூட்டும் தாய்மார்கள் நலனை முன்னிட்டு தமிழகத்திலுள்ள முக்கிய பேருந்து நிலையங்களில் தாய்ப்பால் ஊட்டும் வாரமான ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் தனி அறைகள் தொடங்கப்படும்’ என தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

நாகர்கோவில் உள்ளிட்ட தென் மாவட்ட பேருந்து நிலையங்களில் தாய்மார்கள் பாலூட்டும் அறை கள் உள்ளன. இவைகள் ரோட்டரி சங்கங்களின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இப்போது இப்பணியை அரசே ஏற்றிருப்பதற்கு ரோட்டரி சங்கத் தினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

இடைவிடாத பேருந்துகளின் இயக்கம், புகை, தூசு உள்ளிட்ட மாசுபடிந்த சூழல், ஜனக் கூட்டம் இவையெல்லாம் பேருந்து நிலையத்தின் காட்சிகளாக விரிகின்றன. நெரிசல் நேரங்களில் பேருந்து நிலையத்தில் அமர இடம் கிடைப்பதே சிரமம் என்னும் நிலையில், கைக்குழந்தையுடன் வரும் தாய்மார்கள் குழந்தைக்கு தாய்ப் பால் கொடுக்க வேண்டும் என்றாலும் தர்மசங்கடமான நிலை ஏற்படுகிறது. இதற்கு தீர்வுகாண முதலில் அச்சாரமிட்டது நாகர்கோவிலில்தான்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் முக்கியமான பேருந்து நிலையம் நாகர்கோவிலில் உள்ள வடசேரி கிறிஸ்டோபர் பேருந்து நிலையம். இங்கிருந்துதான் வெளி மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தினசரி ஆயிரக்கணக்கானோர் இந்த பேருந்து நிலையத்துக்கு வந்து செல்கின்றனர்.

இந்த பேருந்து நிலையத்தில் ரோட்டரி இண்டர்நேஷனல் அமைப்பு சார்பில் தாய்மார்கள் குழந்தைகளுக்கு பாலூட்டும் அறை அமைக்கப்பட்டுள்ளது. இதுதான் தமிழக அளவில் திறக்கப்பட்ட முதல் அறை. இப்போது அரசு இப்பணியை செய்வதற்கு இந்த அமைப்பினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

ரோட்டரி ஆளுநர் பேட்டி

மாவட்ட ரோட்டரி ஆளுநர் அசோக் பத்மராஜ் `தி இந்து’விடம் கூறியதாவது:

‘‘நாகர்கோவில், திருநெல்வேலி, ராமநாதபுரம் பேருந்து நிலையங்களில் தாய்மார்கள் பாலூட்டும் அறை திறந்துள்ளோம். ஒரு மாதம் முடிவடைந்துள்ள நிலையில் இதனை ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர்.

என் அனுபவத்தில் பல பேருந்து

நிலையங்களில் கைக்குழந்தை யுடன், தாய்மார்கள் தாய்ப்பால் கொடுக்க மறைவிடம் தேடியதை காண முடிந்தது. வாட்ஸ் அப், முகநூல் கலாச்சாரம் வளர்ந்து வரும் நிலையில் வக்கிர எண்ணம் கொண்டவர்கள் இதைகூட படம் பிடிக்கும் அபாயம் இருப்பதை உணர முடிந்தது.

அதில் இருந்து அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க முதலாவதாக நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் குழந்தைகளுக்கு தாய்மார்கள் பாலூட்டும் அறை

அமைக்கும் திட்டம் உதயமா னது. நகராட்சிக்கு சில வழிகாட்டுதல்களை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் சவான் கொடுத்தார். தொடர்ந்து பேருந்து நிலையத்தில் இந்த அறை அமைக்க நகராட்சி தரப்பில் இடம் ஒதுக்கினர்.

எங்கள் ரோட்டரி மாவட்ட எல்லை

யில் உள்ள 6 மாவட்ட தலைநகர் பேருந்து நிலையங்களிலும் இதேபோல் அறை அமைக்க திட்டமிட்டு மூன்றில் அமைத்து விட்டோம். இந்நிலையில் தமிழக முதல்வரே இப்பணியை முன்னெடுத்தமைக்கு ரோட்டரி அமைப்பின் சார்பில் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x