Published : 03 Jul 2015 09:05 AM
Last Updated : 03 Jul 2015 09:05 AM

செயற்கை மணல் போர்வையில் கேரளாவுக்கு ஆற்று மணல் கடத்தல்? - நீதிமன்ற உத்தரவு பின்பற்றப்பட்டதா?

“கன்னியாகுமரியின் இயற்கை வளங்களை சுரண்டி கேரளாவுக்கு தாரை வார்க்கும் தமிழக குவாரிகள்” என்ற தலைப்பில் நேற்று முன்தினம் `தி இந்து’ நாளிதழில் செய்தி வெளியானதைத் தொடர்ந்து, குமரியில் இருந்து வந்த ஏராளமான புகார்கள் தொலைபேசி வழியாக குவிந்தன. அதில் முக்கியமானது ‘எம்சாண்ட் மணல்’ பின்னணியில் ஆற்று மணல் கடத்தும் வாய்ப்பு உள்ளது என்பதுதான்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கல்குவாரி கள், எம்சாண்ட் தொழிற்கூடங்கள் கேரள முதலாளிகளின் வசம் உள்ளன. முன்பு, இங்கு இயங்கி வந்த 28 குவாரிகளுக்கு அப்போதைய ஆட்சியர் நாகராஜன் தடை விதித்தார். விதிகளை மீறிய கேரள மாநில கல்குவாரி உரிமையாளர்கள் உட்பட 32 பேருக்கு ரூ.56,86,84,515 அபராதம் விதிக்கப்பட்டது.

இப்போது மீண்டும் குவாரிகள் திறக்கப்பட்டு, கேரளத்துக்கு எம்சாண்ட் மணல் அனுப்ப ஒப்பு தல் பெற்றுள்ளதால் கன்னியா குமரி மாவட்டம் மீண்டும் மணல் மாஃபியாக்களின் பிடியில் சிக்கி யுள்ளது.

இதில் பெரிய அளவிலான எம்சாண்ட் தொழிற்கூடம் மார்த்தாண்டம் அருகே களியலில் செயல்பட்டு வருகிறது. இதை கேரளாவை சேர்ந்த பெரு முதலாளி ஒருவர் நடந்தி வருகிறார்.

தடைக்கு காரணம் என்ன?

கேரள மாநில முதலாளிகள் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து எம்சாண்ட் என்னும் பெய ரில் ஆற்று மணலை கடத்துவது அதிகரித்தது. ஒரு லோடில் 4 யூனிட் ஆற்று மணலை நிரப்பி, அதன் மேல் ஒரு யூனிட் எம்சாண்ட் மணலை நிரப்பி, கேரளாவுக்கு நாள் ஒன்றுக்கு 500-க்கும் அதிக மான லோடுகள் சென்று கொண்டி ருந்தன. எம்சாண்ட் போலவே இருக்கும் இதை கண்டுபிடிப்பதும் கடினம். ஒரு லோடு ஆற்று மணல் கேரளாவில் ரூ.80 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை விலை போகிறது. மணலை மாற்றுவதற்கென்றே மாஃபியா கும்பல்கள் ஆங்காங்கே அமைத்தனர். இந்த கடத்தலை தடுக்கவே கேரளாவுக்கு எம்சாண்ட் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது.

நீதிமன்றம் விதித்த தடை

கனிமவள சட்டத்தின்படி கனி மங்களை எக்காரணத்தை கொண் டும் அண்டை மாநிலங்களுக்கு கொண்டு செல்லக் கூடாது. 2013-ம் ஆண்டு கோவை மாவட்டத்தில் இதை சுட்டிக்காட்டி மணல் தயாரிப்புக்கான பாறைப்பொடியை கேரளா கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கிலும், பாறை பொருட்கள் எந்த ரூபத்தில் இருந்தாலும் அது கனிமவளங்களே என உயர் நீதிமன்றம் தெளிவு படுத்தியது.

எனினும், இப்போது குமரியில் அவசரகதியில் எம்சாண்ட் மணல் கொண்டு செல்ல அனுமதி கொடுக் கப்பட்டதே ஆற்று மணலை கடத் தத்தான் என்று சூழல் ஆர்வலர்கள் புகார் கூறுகின்றனர்.

இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் ராம் கூறும் போது, “கடந்த அதிமுக ஆட்சியின் போது குமரியில் 42 கிராமங்கள் பாதுகாக்கப்பட்ட மலை கிராமங்களாக அறிவிக்கப்பட்டன. அவற்றை எந்த மாறுதலும் செய் யாமல் பாதுகாக்கவும் உத்தர விடப் பட்டது. இப்போது அந்த மலைப் பகுதி உடைக்கப்பட்டு எம்சாண்ட் மணலாக கேரளா செல்கிறது.

இதற்கு முன்பு ஆட்சியராக இருந்த நாகராஜன் குவாரிகள் செய்யும் முறைகேடுகளை கவனித்து தடை செய்தார். அவர் மாற்றலாகி சென்றதும் இவ்வளவும் நடந்துள்ளது. இதன் பின்னணியை அரசு ஆராய வேண்டும்’’ என்றார்.

கடமை தவறிய நிர்வாகம்

மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் மாவட்ட செயலாளர் அந்தோணி முத்து கூறும்போது, “ஒரு குறிப் பிட்ட நிறுவனத்துக்கு கேரளா வுக்கு பாறை பொடிகளாக கனிம வளங்களை கொண்டு செல்ல மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது. இதேபோல் இன்னும் ஏராளமான கல்குவாரிகளுக்கும் அனுமதி வழங்க உள்ளதாகத் தெரிகிறது. இனி எம்சாண்ட் என்ற பெயரில், தமிழக ஆற்றுமணல் கேரளாவுக்கு கடத்தப்படும் வாய்ப்பு உள்ளது’’ என்றார்.

ஆட்சியர் விளக்கம்

கேரளாவுக்கு எம்சாண்ட் மணலை கொண்டு செல்ல திரு நெல்வேலி, கோயம்புத்தூர் மாவட் டங்கள் அனுமதிக்காத நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் அனுமதி ஏன் என மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் சவானிடம் கேட்டபோது, `எல்லா தகவல்களும் அரசுக்கு கொடுக்கப்பட்டது. முறைப் படிதான் செய்துள்ளோம். அரசு உத்தரவுப்படியே கேரளாவுக்கு எம்சாண்ட் அனுப்பப்படு கிறது’ என்றார்.

விதிகள் பின்பற்றப்படுகின்றன

கனிம வளத்துறை உதவி இயக் குநர் செல்வ சேகர், “பாறைப் பொடியும் கனிமம்தான்” என்று நீதிமன்றம் கூறியுள்ளது. ஆனால் அதை முறையான அனுமதி பெற்றுக்கொண்டு செல்லலாம் என்றும் கூறியுள்ளது. இப்போது படிவம்-எஃப் மூலம் முறையாகவே எம்சாண்ட் அனுப்பப்படுகிறது.

ஆற்று மணல் கிடங்குகள் கரூர், திருச்சி, வேலூர், நாமக்கல் பகுதிகளில்தான் உள்ளன. இங்கே எம்சாண்ட் யூனிட்டை பெரு முதலீட்டில் தொடங்குபவர்கள், அதனுடன் ஆற்று மணலை சேர்க்க வாய்ப்பே இல்லை” என்றார். தமிழக இயற்கை வளங்களுக்கு இது சோதனையான காலக்கட்டம்தான்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x