Published : 06 Jul 2015 02:45 PM
Last Updated : 06 Jul 2015 02:45 PM

வியாபம் ஊழல், மர்மச் சாவு வழக்குகளை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும்: ராமதாஸ்

வியாபம் ஊழல் வழக்கு மட்டுமின்றி மர்மச்சாவுகள் குறித்த வழக்குகளையும் சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''மத்தியப் பிரதேச தொழில் படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு வாரியத்தில் நடந்த ஊழல்கள் குறித்த விசாரணையில் உதவி செய்து வந்த மருத்துவக் கல்லூரி முதல்வர் அருண்ஷர்மா மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

இவ்வழக்கில் இதுவரை மொத்தம் 46 பேர் மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது திகில் படங்களில் வரும் மர்மக் காட்சிகளை விஞ்சும் வகையில் அமைந்திருக்கிறது.

மத்தியப்பிரதேசத்தில் மருத்துவம், பொறியியல், ஆசிரியர் பயிற்சி, கணினி பயிற்சி உள்ளிட்டப் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு நடத்துவதற்காக மத்தியப்பிரதேச தொழில் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு வாரியமான வியாபம் (VYAPAM- VYAVSAYIK PAREEKSHA MANDAL) கடந்த 1970 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது.

காலப்போக்கில் பணியாளர்கள் நியமணத்திற்கான தேர்வுகளையும் இந்த அமைப்பே நடத்தியது. நுழைவுத்தேர்வு மற்றும் பணியாளர்கள் நியமனத் தேர்வில் அரசியல்வாதிகள், அதிகாரிகள் மற்றும் தொழிலதிபர்கள் கூட்டணி அமைத்துக் கொண்டு மாணவர்களுக்கு பதிலாக அந்தத் துறையில் வல்லமை பெற்றவர்களை தேர்வு எழுத அனுமதித்து முறைகேடு செய்தனர்; இதன்மூலம் பணக்கார வீட்டு மாணவர்கள் தொழில்படிப்புகளுக்கும், அரசு வேலைகளுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்பது குற்றச்சாட்டு ஆகும்.

இதுபற்றி மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்தின் கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணையில் ஈடுபட்டவர்கள், குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் என மொத்தம் 46 பேர் கடந்த 5 ஆண்டுகளில் உயிரிழந்தது நம்ப முடியாத வகையில் அமைந்துள்ளது.

உயிரிழந்த 46 பேரில் 6 பேர் சாலை விபத்துகளில் உயிரிழந்துள்ளனர். 3 பேர் அளவுக்கு அதிகமாக மது அருந்தி இறந்ததாக கூறப்படுகிறது. 4 பேர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ஒரு சிலர் உடல் நலக் குறைவாக இறந்ததாகவும், மீதமுள்ள அனைவரும் மர்மமான முறையில் உயிரிழந்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

ஆனால், இவற்றில் எந்த உயிரிழப்புமே இயற்கையாக நடந்ததைப் போல தோன்றவில்லை என்பது தான் அம்மாநில அரசு மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு ஆகும். இக்குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை என்று எளிதில் நிராகரிக்க முடியாது.

உயிரிழந்தவர்களில் பலர் ஒரே மாதிரியாக இறந்திருக்கிறார்கள். இந்த மரணங்களுக்கிடையே எளிதில் உணரக்கூடிய வகையில் ஒற்றுமைகள் உள்ளன. உதாரணமாக இந்த வழக்கில் பயனடைந்த மாணவர்கள் யார், யார்? என்ற பட்டியல் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஜபல்பூர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மருத்துவக் கல்லூரியின் முதல்வர் அருண்ஷர்மா டெல்லியில் உள்ள விடுதி அறையில் மர்மமான முறையில் நேற்று உயிரிழந்திருக்கிறார்.

இவருக்கு முன் இந்த பணியை கவனித்து வந்த அதே கல்லூரியின் முதல்வர் சகாலே கடந்த ஆண்டு இதே நாளில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இவ்வழக்கில் 3 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்த மாணவி நம்ரதா தமோரின் பெற்றோரை பேட்டி எடுத்த தொலைக்காட்சி செய்தியாளர் அக்ஷய்குமார் அடுத்த சில மணி நேரத்தில் மர்மமாக இறந்தார்.

இந்த ஊழலில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் உத்தரப்பிரதேச முன்னாள் ஆளுனர் ராம்நரேஷ் யாதவ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட சில நாட்களில் அவரது மகன் சைலேஷ் யாதவ் மர்மமாக இறந்தார். இவையெல்லாம் எதேச்சையாக நடந்த நிகழ்வுகளாகத் தெரியவில்லை. ஒருவேளை இவை திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலைகளாக இருந்தால், இவற்றின் பின்னணியில் அளவுக்கு அதிகமான செல்வாக்கு படைத்த, மனிதநேயமற்ற கொடூரர்கள் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அப்படி எதுவும் இருக்கக் கூடாது என்பது தான் அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

மத்தியப் பிரதேச முதலமைச்சராக சிவ்ராஜ் சிங் சௌகான் பதவியேற்ற பின்னர் பல துறைகளில் அம்மாநிலம் முன்னேறியிருக்கிறது. சௌகான் மீது பெரிய அளவில் எந்தக் குற்றச்சாட்டும் இல்லை.

எனினும், வியாபம் ஊழல் வழக்குப் படுகொலைகள் அவரது நிர்வாகத்திற்கு பெரும் அவப்பெயரைத் தேடித் தந்துள்ளன. இப்புகார்களை மறுக்காமல் இதன் பின்னணியில் உள்ள உண்மைகளை வெளிக் கொண்டு வந்து அதன் மீது நடவடிக்கை எடுப்பதே சரியானதாக இருக்கும்.

எனவே, வியாபம் ஊழல் வழக்கு மட்டுமின்றி இந்த மர்மச்சாவுகள் குறித்த வழக்குகளையும் சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும்'' என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x