Published : 03 Jul 2015 09:51 PM
Last Updated : 03 Jul 2015 09:51 PM

வரி செலுத்திய நுகர்வோர்களுக்கு புதிய நுகர்வோர் அட்டை: சென்னை குடிநீர் வாரியம் அறிவிப்பு

வரி செலுத்தியவர்களுக்கு மட்டும் புதிய நுகர்வோர் அட்டையை வழங்குகிறது சென்னை குடிநீர் வாரியம்.

இது குறித்து வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

சென்னை குடிநீர் வாரியம் நுகர்வோர்களுக்கு 2015-2020 இடைப்பட்ட ஆண்டுகளுக்கான புதிய நுகர்வோர் அட்டைகளை வழங்குகிறது. இந்த நுகர்வோர் அட்டைகள் வரும் ஜூலை 6-ம் தேதி முதல் வழங்கப்படும்.

புதிய நுகர்வோர் அட்டைகள் பிரிவு அலுவலகங்களில் மட்டும் காலை 8.30 முதல் 11.30 வரை சனிக்கிழமை உட்பட எல்லா நாட்களிலும் இலவசமாக வழங்கப்படும். நுகர்வோர்கள் தங்களின் பழைய அட்டை அல்லது வரி செலுத்திய ரசீதின் நகல் ஆகியவற்றை பரிசீலனைக்கு எடுத்து வர வேண்டும்.

2015-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரையிலான நிலுவைத் தொகையை செலுத்திய நுகர்வோர்களுக்கு மட்டுமே புதிய அட்டை வழங்கப்படும். மற்றவர்கள் நிலுவைத் தொகையை செலுத்தி புதிய அட்டையை பெற்றுக்கொள்ளலாம்.

சென்னை மாநகராட்சியால் தங்கள் சொத்துக்கு புதிதாக வரி மதிப்பீடு செய்யப்பட்டவர்கள் தங்களின் சென்னை குடிநீர் வாரிய பகுதி முதுநிலை கணக்கு அலுவலரை தொடர்பு கொண்டு சென்னை மாநகராட்சியின் வரி மதிப்பீடு ஆணையின் நகலை கொடுக்க வேண்டும். அதன் பிறகு குடிநீர் மற்றும் கழிவு நீரகற்று வரி மதிப்பீடு செய்து புதிய அட்டை பெறலாம்.

புதிதாக குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்பு பெற்ற நுகர்வோர்கள் இணைப்பு பெற்றதற்கான ஆவணங்களுடன் தங்களின் குடிநீர் வாரிய அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். நுகர்வோர் அட்டையில் அல்லது வரி மதிப்பீட்டில் முரண்பாடு இருந்தால், பகுதி முதுநிலை கணக்கு அலுவலரை தொடர்புகொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x