Published : 19 Jul 2015 10:53 AM
Last Updated : 19 Jul 2015 10:53 AM

அதிக விலைக்கு கொள்முதல் செய்வது ஏன்? - அதானி நிறுவன மின்சக்தி ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்: தமிழக அரசுக்கு இளங்கோவன், ராமதாஸ் கோரிக்கை

அதானி நிறுவனத்துடன் செய்துகொண்ட சூரிய மின் சக்தி ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக இளங்கோவன் நேற்று வெளியிட்ட அறிக்கை:

மத்தியப்பிரதேச அரசு, பகிரங்க ஏலம் மூலம் 648 மெகாவாட் சூரிய சக்தி மின்சாரத்தை யூனிட் ரூ.5.05-க்கு கொள்முதல் செய்வதற்காக மொரீஷியஸ் நாட்டின் ஸ்கை பவர் நிறுவனத்தை தேர்வு செய்துள்ளது. இந்த பகிரங்க ஏலத்தில் பங்கேற்ற அதானி நிறுவனம் ஒரு யூனிட் மின்சாரத்துக்கு ரூ.6.04 விலை கோரியுள்ளது. ஆனால், இதே நிறுவனத்துக்கு தமிழக அரசு ரூ. 7.01 கொடுத்தது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. எனவே, எந்த அடிப்படையில் அதானி நிறுவனத் துக்கு இந்த விலை நிர்ணயிக்கப் பட்டது என்பதை தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும்.

மத்தியப்பிரதேசத்தில் அதானி நிறுவனம் கோரிய ரூ.6.04 விலையுடன் ஒப்பிட்டால் தமிழ்நாடு மின்வாரியத்துக்கு நாள் ஒன்றுக்கு ரூ.7.76 கோடி இழப்பு ஏற்படும். அதுபோல மத்தியப்பிரதேச அரசு பகிரங்க ஏலத்தின் மூலம் வாங்கிய விலையான ரூ.5.05 உடன் ஒப்பிட்டால் தமிழகத்துக்கு நாள் ஒன்றுக்கு ரூ.12 கோடி இழப்பு ஏற்படும். எனவே, தமிழகத்தின் நலனை கருத்தில்கொண்டு அதானி நிறுவனத்துடன் செய்யப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாமக நிறுவனர் ராமதாஸ்

மத்தியப் பிரதேசத்தில் சூரியசக்தி மின்சாரத்தை யூனிட் ரூ. 5.05-க்கு கொள்முதல் செய்ய பகிரங்க ஏலம் மூலம் மொரிஷியஸ் நாட்டைச் சேர்ந்த நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த ஏலத்தில் பங்கேற்ற அதானி நிறுவனம் ஒரு யூனிட் ரூ. 6.04 விலையில் மின்சாரம் வழங்க முன்வந்துள்ளது.

இதே அதானி நிறுவனத்துடன் ஒரு யூனிட் ரூ. 7.01-க்கு மின்சாரம் கொள்முதல் செய்ய தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. மத்தியப் பிரதேசத்தை விட ரூ. 2 அதிகம் கொடுத்து அடுத்த 25 ஆண்டுகளுக்கு மின்சாரம் வாங்க தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.

இதனால் தமிழ்நாடு மின்வாரியத்துக்கு சுமார் ரூ. 11 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும் எனக் கூறப்படுகிறது. எனவே, அதானி நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x