Published : 09 Jul 2015 07:53 AM
Last Updated : 09 Jul 2015 07:53 AM

சங்கராச்சாரியர் கொலை மிரட்டல் விடுத்ததாக புகார்: காஞ்சிபுரம் டிஎஸ்பி அலுவலகத்தில் ரவிசுப்ரமணியம் ஆஜராகி விளக்கம்

சங்கரராமன் கொலை வழக்கில் அப்ரூவராக மாறிய ரவிசுப் ரமணியம், காஞ்சிபுரம் டி.எஸ்.பி. அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜரானார். சங்கராச்சாரியாரால் தமது உயிருக்கு ஆபத்து உள்ளதாக முதல்வர் தனிப்பிரிவில் அளித்த மனு தொடர்பான விசாரணைக்காக அவர் டி.எஸ்.பி. அலுவலகத்துக்கு வந்தார்.

ரவிசுப்ரமணியம் கடந்த மாதம் 12-ம் தேதி முதல்வர் தனிப்பிரிவில் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், ‘காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை மற்றும் மந்தைவெளி ஆடிட்டர் ராதா கிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கு களில் 2005-ம் ஆண்டு கைது செய்யப்பட்டேன். 2 வழக்கு களிலும் அப்ரூவராக மாறினேன்.

9 ஆண்டு சிறைக்குப் பின், ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கில் எனக்கு 2013-ல் ஜாமின் கிடைத்தது. ஆனால், பிறழ்சாட்சி சொல்லி குற்றவாளிகளை தப்பிக்க விட்டதால் மனசாட்சி உறுத்தியது.

இதனால், கடந்த 8-ம் தேதி சிறப்பு வழக்கறிஞரை சந்தித்து நடந்த உண்மைகளை கூறவிரும் புவதாக தெரிவித்தேன். அதற்கு ஆலோசனை கேட்டதுடன் மனு ஒன்றையும் அளித்தேன். இதை அறிந்த ஜெயேந்திரர் என்னை அழைத்து மிரட்டினார். எனவே எனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறியிருந்தார்.

இந்நிலையில், இந்த மனு தொடர்பான விசாரணைக்காக காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் அருகே உள்ள டிஎஸ்பி அலுவலகத்தில் , ரவிசுப்ரமணியம் நேற்று காலை ஆஜரானார். அவரிடம் டிஎஸ்பி பாலச்சந்தர் விசாரணை மேற்கொண்டார். சுமார் 20 நிமிடம் நடைபெற்ற விசாரணையில் பல்வேறு முக்கிய தகவல்களை ரவிசுப்ரமணியம் போலீஸாரிடம் தெரிவித்தாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, ரவிசுப்ரமணியம் கூறியதாவது: முதல்வர் தனிப் பிரிவில் அளித்த மனு தொடர்பாக, டிஎஸ்பி அலுவலகத்தில் ஆஜராகும் படி அதிகாரிகள் கூறினர். இதை தொடர்ந்து, நேரில் ஆஜராகி என் தரப்பு விளக்கங்களை அளித்தேன் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x