Published : 06 Jul 2015 09:38 AM
Last Updated : 06 Jul 2015 09:38 AM

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் முறைகேடு: இந்திய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா? - தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேள்வி

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளதால் அது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

இந்தியாவில் நிலவிய அவசர நிலை குறித்து கடந்த ஒருவார காலமாக பேசப்பட்டு வருகிறது. அரசு அதிகாரிகளும், அரசு இயந்திரமும் அப்போதைய பிரதமர் இந்திரா காந்திக்கு ஆதரவாக தேர்தல் பணியாற்றினார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில், அவர் பெற்ற வெற்றி செல்லாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதனால்தான் இந்தியாவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது. அதுபோன்ற குற்றச்சாட்டுதான் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மீது ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தற்போது எழுந்துள்ளது.

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் அவர் போலியான வெற்றியை பெற்றுள்ளார். சேலத்தை சேர்ந்த காவல்துறை உதவி ஆணையர் அதிமுக கரை வேட்டியுடன் பிரச்சாரம் செய்தார். தமிழக அரசின் செய்தித்துறை கூடுதல் இயக்குநர் உட்பட பல அரசு ஊழியர்களும், அதிகாரிகளும் ஜெயலலிதாவுக்கு ஆதரவாகவே தேர்தல் பணியில் ஈடுபட்டனர்.

வாக்காளர்களின் எண்ணிக்கையை விட, அதிக அளவு வாக்குகள் பதிவாகியுள்ள விநோதமும் அங்கே அரங்கேறியுள்ளது. தொகுதிக்கு சிறிதும் சம்பந்தம் இல்லாத பிற தொகுதி மற்றும் வெளி மாவட்டத்தை சார்ந்தவர்களும் வாக்களித்துள்ளனர்.

இந்தியாவிலேயே எங்கும் நடை பெறாத வகையில் அராஜகம், அத்து மீறல், முறைகேடு என ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் நடந்துமுடிந்துள்ளது. இதுகுறித்து இந்திய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா? இல்லை வழக்கம்போல் வாய்மூடி மெளனமாக இருக்குமா?

நீதிமன்றங்களை நம்பியே மக்கள் தைரியமாக இருக்கின்றனர். எனவே இந்த முறைகேட்டுக்கு முடிவுகட்ட உயர் நீதிமன்றம் தானாகவே முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக மக்கள் எதிர்பார்க்கின்றனர் என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x