Published : 28 Jul 2015 05:39 PM
Last Updated : 28 Jul 2015 05:39 PM
விருதுநகர் அருகே பாவாலி கிராமத்தில் சிதைந்து வரும் அரிய வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாக்க தொல்லியல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வர்த்தக நகரமான விருதுநகருக்கு மேற்கே வரலாற்றுச் சிறப்புமிக்க ஊர்களில் ஒன்றான பாவாலி கிராமம் அமைந்துள்ளது. மதுரை நாயக்க மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் இருந்த 72 பாளையங்களில் (தற்போதையை தாலுகாக்கள்) பாவாலியும் ஒன்று. இவ்வூர் பிற்கால பாண்டியர் காலத்தில் கி.பி.12-13-ம் நூற் றாண்டுகளில் மிகச்சிறந்த நிலையில் இருந்தது. இதை இவ்வூரில் கண்டறியப்பட்டுள்ள கல்வெட்டுகளால் அறியலாம்.
பாவாலி கிராமத்துக்கு பல்வேறு வரலாற்றுச் சிறப்புகள் உள்ளன. பாவாலி கண்மாய்க்கு அருகே உள்ள குடிநீர் கிணறு ஒன்று பாண்டியன் என்ற பெயரில் இன்றும் அழைக்கப்படுகிறது. ஊர் நடுவில் உள்ள குடிநீர் கிணறு தற்போது தூர்ந்து போயுள்ளது.
இக்குடிநீர் கிணற்றில் பாண்டிய மன்னர்கள் ஆட்சியைக் குறிக்கும் வகையில் மீன் சின்னம் பொறித்த கல்வெட்டுகளும், இத்துடன் பக்கவாட்டில் குதிரை, காளை, அன்னப்பறவை சிற்பங்களும், ஒரு புறத்தில் பாம்பு மற்றும் சிவலிங்க சிற்பங்களும் உள்ளன. பிற்கால பாண்டியர் ஆட்சிக் காலத்தில் இவ்வூரில் திருவாலீஸ்வரமுடையார் கோயில் என்ற பெயரில் சிவாலயம் ஒன்றும் சிறந்த நிலையில் இருந்ததை இங்குள்ள கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது.
தற்போது பாவாலியில் உள்ள சுப்பிரமணியர் கோயிலில் உள்ள நந்தி கி.பி.12-13-ம் கலைப்பாணியில் காணப்படுவதால், இந்த நந்தி திருவாலீஸ்வரமுடையார் கோயிலில் இருந்ததாகக் கருதப் படுகிறது. பாண்டியன் கிணற்றில் காணப்படும் துண்டுக் கல்வெட்டு ஒன்றின் மூலம் இவ்வூரில் பிற்கால பாண்டியர் காலத்தில் ஐநூற்றுவரர் என்ற வணிகக்குழு செயல்பாட்டில் இருந்துள்ளதையும், இவ்வணி கர்கள் சிவாலயத்துக்கு கொடை அளித்துள்ளதையும் அறிய முடிகிறது.
மேலும் பாவாலியில் தற் போது சிதைந்த நிலையில் பாளையக்காரர்களுக்குரிய அரண்மனையும் உள்ளது. இந்த அரண்மனையின் முன்பு உள்ள தூணில் பாளையக்காரர்களை எச்சரிக்கும் வகையில், வீரபாண் டிய கட்டபொம்மன் தூக்கில் இடப்பட்டதற்குப் பிறகு ஆங்கிலே யர்களால் எச்சரிக்கை விடுத்து வைக்கப்பட்ட செப்புப் பட்டயமும் இருந்தது. இது தற்போது புனரமைக்கப்பட்டு ஊர் மக்களால் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
மேலும், பாவாலி கிராமத்தின் நுழைவு வாயிலில் காணப்படும் ஒரு மண்டபத்தின் நடுவில் சதிக்கண்ணாகக் கணவனும், மனைவியும் நின்ற நிலையில் காட்சியளிக்கின்றனர். உடன்கட்டை ஏறிய இத்தம்பதியர் சிற்பத்தின் மேலாக திருவாட்சி ஒன்றும் அழகாகச் செதுக்கப்பட்டுள்ளது. ஆனால், வரலாற்றுச் சிறப்புகள் மிக்க பாவாலியில் உள்ள சிற்பங்களும், சின்னங்களும் பரமாரிப்பு இல்லாததால் சிதைந்து வருகின்றன.
இது குறித்து தொல்லியலாளர் சொ.சாந்தலிங்கம் கூறியதாவது:
ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு சிறப்பு உண்டு. அதை நாம் தக்கவைத்துக்கொள்ள வேண்டும். அந்த வகையில் பாவாலி கிராமத்தில் உள்ள தொன்மையான கல்வெட்டுகள் மற்றும் சின்னங்கள் நமக்கு ஏராளமான வரலாற்று பின்னணிக்கு ஆதாரமாக உள்ளன. அவை அனைத்தும் பாதுகாக்கப்பட்டு அடுத்த தலைமுறையினருக்கு அதன் சிறப்புகள் மற்றும் கூறும் செய்திகள் எடுத்துச்செல்லப்பட வேண்டும். அதற்காக, தொல்லியல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், வரலாற்றுச் சின்னங்களை பாதுகாப்பதில் உள்ளூர் மக்களுக்கும் அதிக கடமை உள்ளது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT