Published : 19 Jul 2015 10:47 AM
Last Updated : 19 Jul 2015 10:47 AM

சென்னை புரசைவாக்கம் சீர்திருத்த பள்ளியில் வார்டனை தாக்கிவிட்டு 14 சிறுவர்கள் தப்பி ஓட்டம்

புரசைவாக்கம் சீர்திருத்தப் பள்ளியில் வார்டனை அடித்து அறையில் பூட்டிவிட்டு 14 சிறுவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

சென்னை புரசைவாக்கத்தில் சிறுவர் சீர்திருத்தப்பள்ளி உள்ளது. குற்றச்செயல்களில் ஈடுபட்டு தண்டனை விதிக்கப்பட்ட 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் தண்டனைக்காலம் முடியும்வரை இங்கு தங்க வைக்கப்படுவர். பின்னர் அவர்கள் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்படுவர்.

சீர்திருத்தப்பள்ளி வார்டன் விஜயகுமார் நேற்று முன்தினம் காலை சிறுவர்கள் தங்க வைக்கப்பட்டிருந்த அறையில் ஆய்வு செய்தார். அப்போது ஒரு சிறுவன், தனது உறவினர் வாங்கி வந்த உணவுப்பொருள் வெளியில் இருப்பதாகவும், அதனை எடுத்துவர அனுமதிக்குமாறும் கேட்டார். இதை நம்பி, அறைக் கதவை விஜயகுமார் திறந்துவிட்டார்.

அந்த அறையில் மொத்தம் 14 சிறுவர்கள் இருந்தனர். கதவு திறக்கப்பட்டதும் 14 பேரும் சேர்ந்து வார்டனை சரமாரியாக தாக்கி, அறையில் தள்ளி கதவை பூட்டினர். பின்னர் 14 பேரும் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.

சிறுவர்களின் தாக்குதலில் மயங்கிய விஜயகுமார், சிறிது நேரம் கழித்து கண் விழித்து குரல் கொடுத்துள்ளார். ஊழியர்கள் ஓடிவந்து கதவை திறந்து அவரை மீட்டனர். பின்னர், சிறுவர்கள் தப்பிச் சென்றது குறித்து போலீஸாருக்கு விஜயகுமார் தகவல் தெரிவித்தார். தப்பி ஓடிய சிறுவர்கள் சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று போலீஸார் தெரிவித்தனர்.

அயனாவரம் காவல் உதவி ஆணையர் சங்கரன், தலைமைச் செயலக காலனி ஆய்வாளர் ராமசாமி ஆகியோர் சீர்திருத்த பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர். தப்பி ஓடிய சிறுவர்களைப் பிடிக்க போலீஸார் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x