Published : 30 May 2014 11:08 AM
Last Updated : 30 May 2014 11:08 AM

பிரதமர் மோடியை சந்திக்க ஜூன் 3-ல் ஜெ. டெல்லி பயணம்

பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்காக முதல்வர் ஜெயலலிதா வரும் 3-ம் தேதி டெல்லி செல்கிறார். இந்த சந்திப்பின்போது, தமிழகத்தின் தேவைகள் குறித்த கோரிக்கை பட்டியலை பிரதமரிடம் வழங்குகிறார்.

மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதையடுத்து நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்தார். அதேபோல, தமிழகத்தில் 37 தொகுதிகளில் அதிமுக அமோக வெற்றி பெற்றதற்காக ஜெயலலிதாவுக்கு மோடியும் வாழ்த்து தெரிவித்தார். பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கும் விழாவில் ஜெயலலிதா கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இலங்கை அதிபர் ராஜபக்சே கலந்து கொண்டதால், அந்த விழாவில் ஜெயலலிதா பங்கேற்கவில்லை.

இந்நிலையில், பிரதமரை சந்தித்து மாநிலத்தின் தேவைகள் குறித்து கோரிக்கை மனு அளிக்க ஜெயலலிதா முடிவு செய்தார். அதன்படி, வரும் 3-ம் தேதி அவர் டெல்லி செல்கிறார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்டது. அதில் கூறியிருப்பதாவது:

முதல்வர் ஜெயலலிதா வரும் ஜூன் 3-ம் தேதி டெல்லி செல்கிறார். பிரதமர் நரேந்திர மோடியை சவுத் பிளாக்கில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து தமிழக அரசின் கோரிக்கைகள் அடங்கிய பட்டியலை அளிக்கிறார். மத்திய அரசின் உதவிக்காக நீண்ட நாட்களாக காத்திருக்கும் தமிழகத்துக்குத் தேவையான முக்கிய திட்டங்கள் அதில் இடம்பெற்றிருக்கும். மேலும், மத்திய அரசை உடனடியாக தலையிடக் கோரும், தமிழகத்தை வளர்ச்சிப் பாதைக்கு வேகமாக இட்டுச் செல்லக்கூடிய திட்டங்களும் மாநிலத்தின் நியாய மான கோரிக்கைகளும் அதில் இடம்பெற்றிருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

37 எம்.பி.க்களுடன் செல்கிறார்

புதிய எம்.பி.க்கள் பதவியேற்பதற்காக வரும் 4-ம் தேதி நாடாளுமன்றம் கூடுகிறது. எனவே, முதல்வர் ஜெயலலிதா தன்னுடன் அதிமுக எம்.பி.க்கள் 37 பேரையும் டெல்லிக்கு அழைத்துச் செல்கிறார். பிரதமரைச் சந்தித்துவிட்டு 3-ம் தேதியே ஜெயலலிதா சென்னை திரும்புவார் என கூறப்படுகிறது. எம்.பி.க்கள் அங்கேயே தங்கியிருந்து, நாடாளுமன்றத்தில் நடக்கும் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள் எனத் தெரிகிறது.

பட்டியலில் இருப்பது என்ன?

வட மாநிலங்களில் இருந்து மின்சாரம் கொண்டு வரும் வழித்தடம் தொடர்பான பணிகளை துரிதப்படுத்துதல், கூடங்குளம் அணுமின் நிலையத்தின் 2-வது அலகில் கூடுதல் மின்சாரத்தை தரக்கோருதல் உள்ளிட்ட பல்வேறு மின் அபிவிருத்தித் திட்டங்கள், தமிழகத்துக்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு, நதிநீர் இணைப்பு, காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்குமுறை ஆணையம் ஆகிய வற்றை உடனே அமைக்கக் கோருவது, கடந்த ஆட்சி அறிமுகப் படுத்திய சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பில் மாநில அரசுகளை பாதிக்கும் அம்சங்களை நீக்கக் கோருவது போன்ற அம்சங்கள் கோரிக்கை பட்டியலில் இடம்பெற்றி ருக்கும் என்று தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x