Published : 21 Jul 2015 04:39 PM
Last Updated : 21 Jul 2015 04:39 PM

திருச்சியில் 4 ஆண்டுகளுக்கு மேலாகியும் திறக்கப்படாத சிவாஜி கணேசன் சிலை: விரைவில் திறக்க ரசிகர்கள் வலியுறுத்தல்

திருச்சி பாலக்கரை பிரபாத் ரவுண்டானாவில் நிறுவப்பட்டு 4 ஆண்டுகளுக்கு மேலாகியும் திறக்கப்படாமல் உள்ள திரைப்பட நடிகர் மறைந்த சிவாஜி கணேசனின் சிலையை விரைந்து திறக்க வேண்டுமென அவரது ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

1928-ம் ஆண்டில் பிறந்த சிவாஜி கணேசனுக்கு இளம் வயது முதலே நடிக்கும் ஆர்வம் அதிகமாக இருந்தது. தனது இள வயதில் திருச்சி சங்கிலியாண்டபுரம் பகுதியில் நாடகக் குழுவில் சேர்ந்து மேடை நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். பின்னர் திரையுலகில் நுழைந்து ஏறத்தாழ 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

குறிப்பாக இவர் நடித்த பராசக்தி, வீரபாண்டிய கட்டபொம்மன், கர்ணன் உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் இவரது உணர்ச்சித் ததும்பும் நடிப்பும், வசன உச்சரிப்புகளும் இவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்களை பெற்றுத் தந்தது என்றால் அது மிகையல்ல.

தமிழ் மற்றும் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களிலும் நடித்தவர். உயரிய விருதான செவாலியே விருது, இந்திய அரசின் பத்மஸ்ரீ, பத்ம விபூஷண் உள்ளிட்ட ஏராளமான விருதுகளைப் பெற்ற சிவாஜி கணேசன் 2001-ஜூலை 21-ல் மறைந்தார்.

இவரது மறைவுக்குப் பின்னர், திருச்சியில் சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான ஏற்பாடுகள் கடந்த திமுக ஆட்சியில் எடுக்கப்பட்டு 2011-ல் திருச்சி பாலக்கரை பிரபாத் ரவுண்டானாவில் 9 அடி உயர முழு உருவ வெண்கலச் சிலை அமைக்கப்பட்டது. அப்போது சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால், சிலை துணியால் மூடப்பட்டது. சிலை திறப்பு கிடப்பில் போடப்பட்டது.

தமிழ்த் திரையுலகில் மாபெரும் நடிகராக விளங்கி மக்கள் மனதில் இன்றும் இடம்பிடித்துள்ள சிவாஜி கணேசன் திருச்சியில் தங்கி, நாடகங்களில் நடித்து வந்த சங்கிலியாண்டபுரம் பகுதி அருகிலேயே சிலை அமைக்க முழு முயற்சி எடுத்த அவரது ரசிகர்கள், சிலை திறக்கப்படாமல் மூடி வைக்கப்பட்டுள்ளதைக் கண்டு பெரும் மன வருத்தத்துடன் உள்ளனர். இந்த சிலையை திறக்க வேண்டுமென வேண்டுமென திருச்சி மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பப்பட்டு 3 ஆண்டுகளுக்கு மேலாகிறது. இந்த விஷயத்தில் அரசு எவ்வித நடவடிக்கைகையும் எடுக்கவில்லை.

இதுகுறித்து அகில இந்திய சிவாஜி மன்ற சிறப்பு அழைப்பாளர் அண்ணாதுரை ‘தி இந்து’விடம் கூறியபோது, “செவாலியே விருது பெற்ற சிவாஜி கணேசன் பெயர் சென்னையில் ஒரு சாலைக்கு வைக்கப்பட்டுள்ளது. 2001-ம் ஆண்டில் அவர் மறைந்தபோது 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையும் வழங்கப்பட்டது. சென்னை கடற்கரைச் சாலையில் முழு உருவச்சிலை அரசு சார்பில் வைக்கப்பட்டுள்ளது.

திருச்சியில் அவரது சிலை அமைக்கப்பட்டு 4 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. தொடர்ந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டும் சிலை திறக்கப்படவில்லை. இந்த சிலையை விரைந்து திறக்க வேண்டும் என்பதுதான் சிவாஜி ரசிகர்களின் ஒட்டுமொத்த கோரிக்கை” என்றார்.

திருச்சி பாலக்கரை பிரபாத் ரவுண்டானாவில் நிறுவப்பட்டு 4 ஆண்டுகளுக்கு மேலாகியும் திறக்கப்படாமல் உள்ள சிவாஜி கணேசனின் சிலை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x