Published : 16 Jul 2015 09:44 PM
Last Updated : 16 Jul 2015 09:44 PM

திமுக ஆட்சியில் 1 யூனிட் மின்சாரம் கூட உற்பத்தி செய்யப்படவில்லை: நத்தம் விஸ்வநாதன் குற்றச்சாட்டு

திமுக ஆட்சி காலத்தில் ஒரு யூனிட் மின்சாரம் கூட உற்பத்தி செய்யப்படவில்லை என்று தமிழக மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

மின் உற்பத்தி திட்டங்கள் தொடர்பாக மக்களை திசைதிருப்பும் வகையில் தவறான குற்றச்சாட்டுகளை திமுக தலைவர் கருணாநிதி கூறி வருகிறார். அதிமுக ஆட்சியில் கூடுதல் விலை கொடுத்து மின்சாரம் வாங்கப்பட்டு வருவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

திமுக ஆட்சி காலத்தில் பிபிஎன், சாமல்பட்டி, மதுரை பவர் கார்ப்பரேஷன், ஜிஎம்ஆர் ஆகிய தனியார் நிறுவனங்களிடம் இருந்து 20,355 மில்லியன் யூனிட் மின்சாரம் கூடுதல் விலைக்கு வாங்கப்பட்டது. அதிமுக ஆட்சி காலத்தில் 11,075 மில்லியன் யூனிட் மின்சாரம் மட்டுமே தனியாரிடம் இருந்து வாங்கப்பட்டுள்ளது.

அதிமுக ஆட்சியில் 2012-13-ல் வல்லூர் மின் திட்டம் அலகு 1-ல் 350 மெகாவாட், 2013-14-ல் வல்லூர் மின் திட்டம் அலகு 2-ல் 350 மெகாவாட், வட சென்னை அனல் மின் நிலையம் அலகு 1, 2-ல் 600 மெகாவாட் உட்பட 1691.50 மெகாவாட் திறன் கொண்ட மின் உற்பத்தி திட்டங்கள் தொடங்கப்பட்டு மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளன.

திமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட 2,373 மெகாவாட் திறன் கொண்ட மின் உற்பத்தி திட்டங்கள் அதிமுக ஆட்சியில் முடிக்கப்பட்டன. திமுக ஆட்சியில் 40 முதல் 45 சதவீதம் வரை பணிகள் முடிக்கப்பட்டிருந்த தலா 600 மெகாவாட் வட சென்னை அனல் மின் நிலையம், 600 மெகாவாட் மேட்டூர் அனல் மின் நிலையப் பணிகள் அதிமுக ஆட்சியில் முடிக்கப்பட்டன.

இந்த திட்டங்களில் ஏற்படுத்தப்பட்ட கால தாமதத்துக்கு திமுகதான் பொறுப்பேற்க வேண்டும். பல மின் திட்டங்களை ஏட்டளவில் அறிவித்தார்களே தவிர, திமுக ஆட்சியில் ஒரு மெகாவாட் மின்சாரம் கூட உற்பத்தி செய்யப்படவில்லை.

தமிழ்நாடு மின் வாரியம், மத்திய மின் திட்டங்களின் மூலமும் புதிய மின் உற்பத்தி மற்றும் நீண்டகால கொள்முதல் மூலமும் 5,346.50 மெகாவாட் மின் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திறந்தநிலை ஒப்பந்தப்புள்ளிகள் மூலமே மின் மீட்டர்கள் வாங்கப்பட்டுள்ளன. எனவே, இதில் முறைகேடுகள் நடந்ததாக கருணாநிதி கூறுவது கண்டிக்கத்தக்கது.

தமிழகத்தில் அதானி குழுமம் மட்டுமல்ல, இதுவரை 43 நிறுவனங்களுடன் 1,214 மெகாவாட் சூரியசக்தி மின்சாரம் உற்பத்தி செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. வெளிமாநிலங்களில் யூனிட் ரூ. 5.40-க்கு சூரியசக்தி மின்சாரம் கிடைக்கும் போது அதானி குழுமத்துடன் ரூ. 7.01-க்கு ஏன் ஒப்பந்தம் செய்ய வேண்டும் என கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார். எந்த மாநிலத்திலும் யூனிட் ரூ. 5.40-க்கு சூரியசக்தி மின்சாரம் கிடைப்பதில்லை. எனவே, இதுபோன்ற அவதூறு பிரச்சாரத்தில் இறங்க வேண்டாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x