Published : 01 Jul 2015 07:34 AM
Last Updated : 01 Jul 2015 07:34 AM

முதல்நாளில் 40 ஆயிரம் பேர் ஜாலி பயணம்: மெட்ரோ ரயில் கட்டணம் குறையுமா? - பொதுமக்கள் எதிர்பார்ப்பு

மெட்ரோ ரயிலில் முதல் நாளான 29-ம் தேதியன்று மட்டும் 40 ஆயிரம் பேர் பயணம் செய்துள்ளனர். இதன்மூலம் ரூ.17 லட்சம் வசூலாகியுள்ளது. 2-வது நாளான நேற்று மெட்ரோ ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் கணிசமாக குறைந்திருந்தது. ரயில் கட்டணத்தை சற்று குறைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

ஆலந்தூர் இருந்து கோயம்பேடு வரையிலான மெட்ரோ ரயில் சேவையை முதல்வர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் நேற்று முன்தினம் தொடங்கிவைத்தார். இதையடுத்து, அந்த மார்க்கத்தில் 10 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்படுகிறது. முதல் நாளில் மட்டும் 40 ஆயிரம் பேர் பயணம் செய்துள்ளனர். இதன்மூலம் ரூ.17 லட்சம் கட்டணமாக வசூலாகியுள்ளது. 2-வது நாளான நேற்று காலை 8 மணி முதல் பொதுமக்கள் மெட்ரோ ரயில் நிலையங்களை பார்க்க குடும்பத்துடன் ஆர்வமாக வந்திருந்தனர். ஆனால், முதல் நாளை ஒப்பிடும்போது கூட்டம் கணிசமாக குறைந்திருந்தது.

மெட்ரோ ரயில் நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரத்தில் டிக்கெட் பெற மக்கள் சிரமப்பட்ட னர். ரூ.1, ரூ.2 நாணயங் களை இயந்திரங்கள் ஏற்றுக்கொள்ள வில்லை. பழைய மற்றும் சிறிது கசங்கியிருந்த ரூபாய் நோட்டு களை இயந்திரம் திரும்பி அனுப்பி விடுகிறது. சில இயந்திரங்களில் போதிய அளவில் சில்லறைகள் உடனுக்குடன் நிரப்பாமல் இருந்ததால், சரியான சில்லறை செலுத்துபவர்கள் மட்டுமே டிக்கெட் எடுக்க முடிந்தது. இதனால், தானியங்கி இயந்திரத்தை தவிர்த்து, கவுன்ட்டர்களிலேயே பலர் டிக்கெட்களை பெற்றுச் சென்றனர். மேலும், பயணம் அட்டை பெறுவது குறித்து வாடிக்கையாளர் சேவை மையத்தில் மக்கள் ஆர்வமாக தகவல்களை கேட்டறிந்தனர்.

இது தொடர்பாக டி.எஸ்.கே.கிரிதாரி (மடிப்பாக்கம்) கூறும்போது, ‘‘மெட்ரோ ரயில் நிலையங்களில் பாதுகாப்பு மற்றும் அதிநவீன வசதிகள் இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால், போதிய அளவில் குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகள் இல்லாமல் இருக்கிறது. இந்த அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். மேலும், வாகனங்களை நிறுத்துவதற்காக ஒடுக்கப்பட்டுள்ள இடங்களில் மேற்கூரைகளை அமைத்தால், அவை பாதுகாப்பாக இருக்கும்’’ என்றார்.

பயணிகள் சு.அகல்யா, பிரியா (தி.நகர்) ஆகியோர் பேசும்போது, ‘‘மெட்ரோ ரயிலில் ஏசி வசதி இருப்பதால் வெயிலுக்கு நன்றாக இருக்கிறது. மேலும், ரயில் நிலையங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள புதிய வசதிகள் சிறப்பாக உள்ளன. ஆனால், ஆலந்தூரில் இருந்து கோயம்பேட்டுக்கு ரூ.40 கட்டணம் என்பது அதிகமாக தெரிகிறது. நாங்கள் மற்ற மாநகரங்களில் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளோம். டெல்லியில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.8 ஆகவும், அதிகபட்சம் ரூ.30 ஆகவும்; பெங்களூரில் குறைந்த பட்சம் ரூ.10, அதிகபட்சம் ரூ.17 எனவும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எனவே, கட்டணத்தை சிறிது குறைக்க சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்தால் ஏழை, எளிய மக்கள் பெரிதும் பயன்பெறுவார்கள்’’ என்றனர்.

ஆட்டோக்களுக்கு 30% வருவாய் இழப்பு

ஆலந்தூர் - கோயம்பேட்டு இடையே மெட்ரோ ரயில் சேவை தொடங்கியுள்ளதால், அந்த பகுதி ஆட்டோ ஓட்டுநர்கள் 30 சதவீதம் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக ஆட்டோ ஓட்டுநர்கள் எ.பக்ரி, எம்.கே.சந்திரன் (ஆலந்தூர்) ஆகியோர் கூறும்போது, ‘‘கோயம்பேட்டில் இருந்து ஆலந்தூருக்கு ஆட்டோவில் பயணம் செய்ய ரூ.90 கட்டணமாக வசூலிக்கிறோம். இதுவே, ஷேர் ஆட்டோக்களில் பயணம் செய்ய ரூ.30 கட்டணமாக வசூலிக்கப்படும். பஸ்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க மக்கள் கோயம்பேட்டில் இருந்து கிண்டி, ஈக்காட்டுதாங்கல், ஆலந்தூருக்கு ஆட்டோக்களில் பயணம் செய்வார்கள். ஆனால், தற்போது மெட்ரோ ரயில் சேவை தொடங்கியுள்ளதால் கடந்த 2 நாட்களில் ஆலந்தூர் வரை செல்லும் சவாரி குறைந்துள்ளது. இதனால் எங்களுக்கு 30 சதவீதம் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய ஒருவருக்கு ரூ.40 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், ஆட்டோக்களில் 3 பேராக பயணம் செய்தால், மெட்ரோ ரயிலை விட கட்டணம் குறைவுதான். எனவே, அடுத்த சில வாரங்களில் மக்கள் மத்தியில் மாற்றம் ஏற்படும் என நம்புகிறோம்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x