Published : 14 Jul 2015 09:51 AM
Last Updated : 14 Jul 2015 09:51 AM

கருணை வேலை கோரும்போது விரும்பும் பணியை கேட்க முடியாது: உயர் நீதிமன்றம் உத்தரவு

‘கருணை வேலை கேட்டு மனு செய்வோர் அரசு வழங்கும் பணியை ஏற்க வேண்டும். தாங்கள் விரும்பும் பணியைத்தான் தர வேண்டும் என கேட்க முடியாது’ என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

திண்டுக்கல் மாவட்டம், பழநியைச் சேர்ந்தவர் அமுதவள்ளி. இவரது கணவர் சண்முகநாதன், ஒட்டன்சத்திரம் நகராட்சியில் பணிபுரிந்து 30.4.2003-ல் இறந்தார். இதனால், கருணை வேலை கேட்டு அமுதவள்ளி 29.5.2004-ல் மனு அளித்தார். அவரது மனுவை ஏற்று அவருக்கு 2007-ல் துப்புரவாளர் பணி வழங்கப்பட்டது. அந்தப் பணியில் சேர அவர் மறுத்துவிட்டார்.

பின்னர், தனது மகனுக்கு இளநிலை உதவியாளர் பணி வழங்குமாறு 2007 மற்றும் 2011-ல் மனுக்கள் அளித்தார். அந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப் படாத நிலையில், தன் மகனுக்கு கருணை வேலை வழங்க உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அமுதவள்ளி மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்து நீதிபதி எஸ்.வைத்தியநாதன் நேற்று பிறப்பித்த உத்தரவு வருமாறு: கருணை வேலை கேட்டு மனுதாரர் அளித்த மனுவை ஏற்று அவருக்கு துப்புரவாளர் பணி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், துப்புரவாளராக பணி செய்வது கவுரவக் குறைச்சல் என நினைத்துக்கொண்டு அந்தப் பணியில் சேராமல் இருந்து கொண்டு, தான் விரும்பும் பணியைத் தர வேண்டும் என கேட்க முடியாது. தற்போதும் மனுதாரருக்கு துப்புரவாளர் பணி வழங்கு தயாராக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனவே, மனுதாரர் 30 நாளில் துப்புரவாளர் பணியில் சேர வேண்டும். அதில் தவறினால் அவருக்கான கருணை வேலை வாய்ப்பு தானாகவே பறிபோய் விடும். பணியில் சேர்ந்த நாளிலிருந்து அவருக்கு ஊதியம் வழங்க வேண்டும். துப்புரவாளர் பணி காலியாக இல்லாத பட்சத்தில், அப்பணி நிலையிலுள்ள மற்றொரு பணியில் நியமனம் செய்ய வேண்டும். பின்னர் துப்புரவாளர் பணி காலி ஏற்படும் போது அந்தப் பணியில் மனுதாரரை நியமிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x