Published : 22 Jul 2015 07:47 AM
Last Updated : 22 Jul 2015 07:47 AM

தோழமை கட்சி என்ற சகாப்தம் முடிந்துவிட்டது: ஆட்சியில் பங்களித்தால்தான் கூட்டணி - இளங்கோவன் திட்டவட்டம்

தோழமை கட்சி என்ற சகாப்தம் முடிந்துவிட்டது. ஆட்சியில் பங்கு அளித்தால் மட்டுமே இனி கூட்டணி என தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் காமராஜர் ஆட்சியை அமைப்பதுதான் காங்கிரஸின் ஒரே லட்சியமாகும். கடந்த 50 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியினரிடம் இருந்துவரும் ஏக்கத்துக்கு வடிகாலாக 2016 சட்டப்பேரவைத் தேர்தல் வர இருக்கிறது.

தேர்தலில் மற்ற கட்சிகளோடு கூட்டணி அமைக்கும் நிலை ஏற்பட்டால், ‘ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு’ என்ற அடிப்படையில்தான் இருக்கும் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். இனி ஆளுங்கட்சியாக இருப்போம். இல்லையெனில் எதிர்க்கட்சியாக இருப்போம். இரண்டுக்கும் மாறாக தோழமைக் கட்சி என்ற சகாப்தம் முடிந்துவிட்டது.

தமிழகத்தில் கடந்த 25 ஆண்டுகளில் நடந்த ஒவ்வொரு தேர்தலிலும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதேபோல 2016 சட்டப்பேரவைத் தேர்தலிலும் ஆட்சி மாற்றம் ஏற்படப்போவது உறுதி.

காமராஜரின் 113-வது பிறந்த நாளை முன்னிட்டு 23-ம் தேதி (நாளை) திருச்சியில் காங்கிரஸ் சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் ராகுல் காந்தி பேசுகிறார். பொதுக்கூட்டம் முடிந்ததும் காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள், கரும்பு, ரப்பர், தேயிலை, தென்னை உள்ளிட்ட பல்வேறு விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளை சிறுசிறு குழுக்களாக சந்தித்து பிரச்சினைகளின் உண்மைத் தன்மையை ராகுல் அறிய இருக்கிறார்.

திருச்சி திணறியது என்று அனைவரும் கூறும் அளவுக்கு காங்கிரஸார் திரள்வார்கள். கடந்த சில மாதங்களாக தமிழக காங்கிரஸிஸ் ஏற்பட்டுள்ள எழுச்சியின் முழுவடிவத்தை திருச்சி காண இருக்கிறது. திருச்சி பொதுக்கூட்டம் தமிழக அரசியலில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும். தேசிய சக்திகளிடையே மிகப்பெரிய மறுமலர்ச்சி ஏற்படும்.

இவ்வாறு அறிக்கையில் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x