Published : 03 Jul 2015 08:34 AM
Last Updated : 03 Jul 2015 08:34 AM

காஞ்சிபுரம் பள்ளி மாணவர்களிடையே மோதல்: 11-ம் வகுப்பு மாணவர் மருத்துவமனையில் பலி

காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் 11-ம் வகுப்பு மாணவர் களிடையே நேற்று முன்தினம் மோதல் ஏற்பட்டது. இதில் படுகாயம் அடைந்த மாணவர் சிகிச்சை பலனின்றி மருத்துவ மனையில் நேற்று பலியானார்.

காஞ்சிபுரம் நகராட்சி அலுவலகத்துக்குப் பின்புறத்தில் கா.மு.சுப்பராய முதலியார் அரசு மேல்நிலைப் பள்ளி அமைந் துள்ளது. இந்தப் பள்ளியில் சின்ன காஞ்சிபுரம் சேர்மன் சாமிநாதன் தெருவைச் சேர்ந்த பாபு என்பவரின் மகன் ஜானகிராமன் 11-ம் வகுப்பு படித்து வந்தார். அதே வகுப்பில், அருட்பெருஞ்செல்வி தெருவைச் சேர்ந்த தர்மன் என்பவரின் மகன் சரத்குமார் என்பவரும் படித்து வந்தார்.

நேற்று முன்தினம் பள்ளியின் மதிய உணவு இடைவேளையின் போது, மேற்கூறிய மாணவர்கள் இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், சரத் குமாரை ஜானகிராமன் தரக்குறை வான வார்த்தைகளால் திட்டிய தாக கூறப்படுகிறது. இதில், ஆத்திரமடைந்த சரத்குமார், ஜானகிராமனின் மார்பு மற்றும் கழுத்து பகுதியில் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், பலத்த காயமடைந்த ஜான கிராமன் மயங்கி விழுந்துள்ளார். சக மாணவர்கள் அளித்த தகவலின் பேரில், ஆசிரியர்கள் வகுப் பறைக்கு விரைந்து வந்து, ஆம்புலன்ஸ் உதவியுடன் அருகில் இருந்த தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை அளித்தனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசுப் பொதுமருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாணவர் ஜானகிராமன் நேற்று அதிகாலை இறந்தார்.

பள்ளி மாணவனர்களிடையே ஏற்பட்ட மோதல் குறித்து வகுப்பு ஆசிரியை அளித்த புகாரின்பேரில், சிவகாஞ்சி போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். மாணவர் இறந்ததால், பள்ளிக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது. அரசுப் பள்ளி மாணவர்களிடையே மோதல்ஏற்பட்டு பள்ளி மாணவர் ஒருவர் பலியான சம்பவம் இந்தப் பகுதி பெற்றோர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து, பள்ளியின் தலைமை ஆசிரியர் சீனிவாசன் கூறியதாவது: 11-ம் வகுப்பில் தற்போது வேறு பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் சேர்ந்து படித்து வருகின்றனர். ஜானகிராமன் கடந்த ஐந்தாண்டுகளாக எங்கள் பள்ளியில் படித்து வந்தார். சரத்குமார் வேறு பள்ளியில் இருந்து 11-ம் வகுப்பு படிப்பதற்காக தற்போதுதான் பள்ளியில் சேர்ந்துள்ளார். இந்நிலையில், மாணவர்கள் மோதலில் ஈடுபட்டு அதில் ஒரு மாணவர் உயிரிழந்த சம்பவம் மிகவும் வேதனை அளிக்கிறது. இவ்வாறு அவர் தொரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x