Published : 02 Jul 2015 10:00 PM
Last Updated : 02 Jul 2015 10:00 PM

திடுக்கிடும் திருப்பங்களும், திகைக்க வைக்கும் மர்மங்களும் நிறைந்த ஆட்சி தமிழகத்தில் நடக்கிறது: கருணாநிதி

திடுக்கிடும் திருப்பங்களும், திகைக்க வைக்கும் மர்மங்களும் நிறைந்த ஆட்சி தமிழகத்தில் நடப்பதாக திமுக தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழகத்தில் ரூ.1,400 கோடியில் 400 மெகாவாட் சூரியசக்தி மின்சாரம் உற்பத்தி செய்ய பிரதமர் நரேந்திர மோடியின் நெருங்கிய நண்பரான அதானிக்குச் சொந்தமான நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இது குறித்து சில சந்தேகங்களை நான் எழுப்பியிருந்தேன்.

அதனைத் தொடர்ந்து பாமக நிறுவனர் ராமதாஸ் கடந்த 17-ம் தேதி வெளியிட்ட அறிக்கையில், மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதி கிடைக்காத நிலையில் அதானி குழுமத்துடன் 632 மெகாவாட் கொள்முதல் செய்ய தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இதுதவிர மேலும் 648 மெகாவாட் அளவுக்கு புதிய ஒப்பந்தங்களில் விரைவில் கையெழுத்திட இருக்கிறது. இது சட்ட விரோதமாகும்.

பல தனியார் நிறுவனங்கள் முன்வந்தும் அதானி குழுமத்துடன் மட்டும் ஒப்பந்தம் செய்கிறார்கள். சூரிய மின்சாரத்தின் விலை யூனிட்டுக்கு ரூ.5.86 ஆக குறைந்துவிட்டது. அடுத்த ஆண்டு அது ரூ.5 ஆக குறைய வாய்ப்புள்ளது. இந்நிலையில் அதானி குழுமத்துடன் ஒரு யூனிட்டுக்கு ரூ.7.01 என்ற விலைக்கு மின்சாரம் வாங்க தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது என குற்றம்சாட்டியுள்ளார்.

இதற்கு தமிழக அரசு தரப்பில் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை. இதிலிருந்து இந்த குற்றச்சாட்டுகளில் உண்மை உள்ளது என்பது உறுதியாகிறது.

இந்நிலையில் அதானி குழுமத்துடன் முதல்வர் முன்னிலையில் ஜூன் 30-ம் தேதி ஒப்பந்தம் கையெழுத்தாகலாம் என செய்திகள் வந்தன. ஆனால், அதுபோல எதுவும் நடைபெறவில்லை. இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதற்கான காரணத்தையும் அரசு தெரிவிக்கவில்லை.

அதுபோல ஜூன் 30-ம் தேதி ஜெயலலிதா எம்.எல்.ஏ.வாக பதவியேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால், அந்த நிகழ்ச்சியும் நடைபெறவில்லை. ஜூலை 1-ம் தேதி நடைபெற்ற இஃப்தார் விருந்து நிகழ்ச்சியிலும் ஜெயலலிதா பங்கேற்கவில்லை. முதல்வருக்கு உடல் நலக்குறைவு என்றால் அலட்சியப்படுத்தக்கூடியதா? அதுபற்றி விவரத்தை முறைப்படி அறிவிக்க வேண்டும்.

ஆனால், இஃப்தார் விருந்துக்கு வராத அதே நாளில் பிளஸ் 2 தேர்வில் முதல் 3 இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு ஜெயலலிதா பரிசு வழங்கியதாக செய்தி வந்துள்ளது. அதிலும் சிலருக்கு மட்டும்தான் முதல்வர் வழங்கியுள்ளார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வெற்றிக்காக பாடுபட்டவர்கள் மணிக்கணக்கில் காத்திருந்தும் ஜெயலலிதாவை பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளனர்.

இப்படி அடுக்கடுக்கான தவறுகளும், எதிர்பாராத நிகழ்வுகளும் ஒன்றன் பின் ஒன்றாக நிகழ்ந்து வருகின்றன. துக்ளக் தர்பார் போல திடுக்கிடும் திருப்பங்களும், திகைக்க வைக்கும் மர்மங்களும் நிறைந்த ஆட்சியை அதிமுக நடத்தி வருகிறது என கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x