Published : 25 Jul 2015 08:34 AM
Last Updated : 25 Jul 2015 08:34 AM

ராகுலின் வருகை தமிழகத்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது: தமிழக பாஜக தலைவர் தமிழிசை பேட்டி

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் திருச்சி வருகை தமிழக அரசியலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர் களிடம் நேற்று அவர் கூறியதாவது:

காங்கிரஸ் ஆட்சியில் இருந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தின் பிரச்சினைகளை நாடாளுமன்றத் தில் ராகுல் காந்தி பேசியதில்லை. காங்கிரஸ் ஆட்சியில்தான் இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப் பட்டனர்.

காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது நடைபெற்ற காமராஜர் பிறந்த நாள் விழாக்களில் ராகுல் காந்தி கலந்துகொண்டதில்லை. இந்த ஆண்டு விருதுநகரில் காமராஜர் பிறந்த நாள் விழாவுக்கு பாஜக ஏற்பாடு செய்தது. அதன் பிறகு ராகுல் காந்தி தமிழகம் வந்துள்ளார்.

எனவே, ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளை தமிழக மக்கள் நம்ப மாட்டார்கள். அவரின் திருச்சி வருகை தமிழக அரசியலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.

மதுவிலக்குக்காக அனைவரும் குரல் கொடுத்து வரும் நிலையில் எலைட் மதுபானக் கடைகள் திறக்கப்பட இருப்பதாக செய்திகள் வந்துள்ளன. இதனை எதிர்த்து பாஜக போராடும். மது குடிக்கும், புகை பிடிக்கும் காட்சிகள் இடம்பெறும் திரைப்படங்களுக்கு வரி விலக்கு அளிக்கக் கூடாது.

ஜெயலலிதா முதல்வராக பொறுப்பேற்ற பிறகும் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. குடிநீர் பிரச்சினை தலைவிரித்தாடுகிறது. சென்னை குடிநீர் வாரியம் மக்களின் 50 சதவீத தேவையை மட்டுமே பூர்த்தி செய்கிறது. ஆனால், இதுபற்றியெல்லாம் அதிமுக அரசு கவலைப்பட்டதாக தெரியவில்லை.

பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா வரும் ஆகஸ்ட் 6-ம் தேதி மதுரை வருகிறார். தென் தமிழக கேந்திர பொறுப்பாளர்கள் கூட்டத்தில் பங்கேற்கும் அவர், 7-ம் தேதி புதுச்சேரி செல்கிறார். விரைவில் மத்திய அமைச்சர்கள், பாஜக தலைவர்கள் தமிழகம் வரவுள்ளனர்.

இவ்வாறு தமிழிசை கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x