Published : 17 Jul 2015 12:15 PM
Last Updated : 17 Jul 2015 12:15 PM

மனிதம் கொண்ட அனைவருக்குமானது நபிகள் அறிவுரைகள்: ராமதாஸ்

நபிகள் நாயகம் அறிவுரைகள் மனித நேயத்தில், நீதி நேர்மையிலும் நம்பிக்கை கொண்ட அனைவரும் கடைபிடிக்க வேண்டியவை என பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ரம்ஜான் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இரமலான் திருநாளைக் கொண்டாடும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இரமலான் திருநாளை ஒரு கொண்டாட்டம் என்பதைவிட முப்பது நாட்கள் பகலில் உண்ணாமலும், பருகாமலும் நோன்பிருந்து மேற்கொள்ளப்படும் பயிற்சி என்பது தான் பொருத்தமானதாகும். அண்ணல் நபி அவர்கள் அருளிய போதனைகளில் முதன்மையானது மது அருந்தாமை தான்.

மது தயாரிப்பவர், தயாரிக்கக் கூறுபவர், அருந்துபவர், அருந்தத் தருபவர், மதுவை எடுத்துக்கொண்டு போகிறவர், எடுத்துச் செல்லக் கூறுபவர், விற்பவர், மதுவை வாங்கிச் செல்பவர், மதுவை அன்பளிப்பாக தருபவர், மது விற்ற பணத்தில் உணவு உண்பவர் ஆகிய 10 பேரும் சபிக்கப்பட்டவர்கள் தான் என்று நபிகள் நாயகம் கூறியிருக்கிறார்.

ஆனால், இன்று தமிழகத்தில் திரும்பிய திசைகளில் எல்லாம் மதுக் கடைகளை திறந்து தங்களை மட்டுமின்றி, மக்களையும் சபிக்கப்பட்டவர்களாக்கும் முயற்சியில் ஆட்சியாளர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். மதுவின் தீமைகளும், கேடுகளும் குழந்தைகளைக் கூட விட்டு வைக்கவில்லை.

இறைவன் அருளிய திருமறையில் உள்ள இத்தகைய அறிவுரைகள் இஸ்லாமியர்கள் மட்டுமின்றி, மனித நேயத்திலும், நீதி நேர்மையிலும் நம்பிக்கை கொண்ட அனைவரும் கடைபிடிக்க வேண்டியவை ஆகும். அவற்றை கடைபிடித்து, உலகில் அமைதி, வளம், மற்றும் நல்லிணக்கத்தை பெருக்கவும், தீமைகளை ஒழிக்கவும் பாடுபட இந்நன்னாளில் உறுதியேற்போம்" எனக் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x