Published : 14 Jul 2015 10:03 PM
Last Updated : 14 Jul 2015 10:03 PM

தனியார் பள்ளிகளுக்கு ரூ.97 கோடி வழங்கும் தமிழக அரசாணையை நிறுத்திவைக்க வேண்டும்: பிரின்ஸ் கஜேந்திரபாபு

கல்வி உரிமைச் சட்டம் தொடர்பாக மத்திய அரசிடம் இருந்து தெளிவான விளக்கங்கள் கிடைக்காத வரை, தனியார் பள்ளிகளுக்கு ரூ.97 கோடி வழங்குவது தொடர்பான அரசாணையை நிறுத்திவைக்க வேண்டும் என்று பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பு தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சருக்கு பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலர் பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கப்பட்டால் கல்விச் செலவை அரசே ஏற்கும். இதற்கான நிதியை மாநில அரசுக்கு மத்திய அரசு வழங்க வேண்டும். அந்த நிதி வழங்கப்படாததால், ‘மாநில அரசு மீது நிதித்சுமையை ஏற்றுவது நியாயமல்ல’ என்று பிரதமருக்கு கடந்த மே 5-ம் தேதி அப்போதைய முதல்வர் கடிதம் எழுதினார். ‘தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்ட 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கட்டணம் செலுத்துவது யார்’ என்றும் அதில் கேட்டிருந்தார்.

கல்வி உரிமைச் சட்டம் குறித்து தெளிவான விளக்கங்களை மத்திய அரசிடம் இருந்து எதிர்பார்த்துள்ள நிலையில், தனியார் பள்ளிகளுக்கு அரசு செலுத்தவேண்டிய ரூ.97.05 கோடிக்கான அரசாணை 102-ஐ தமிழக பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி, ஒரு மாணவருக்கு அரசு செய்யும் செலவுத்தொகை அல்லது தனியார் பள்ளிக்கு அரசு நிர்ணயித்துள்ள கட்டணம் இதில் எது குறைவோ அதை வழங்க இயலும். தவிர, இதில் எல்கேஜி, யுகேஜி கட்டணம் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு அரசு வழங்கும் தொகையில் சீருடை, மதிய உணவு, புத்தகம் உள்ளிட்டவற்றுக்கான செலவுகள் குறித்து தெளிவுபடுத்தவில்லை.

மேலும், பல தனியார் பள்ளிகளுக்கு தனியார் பள்ளிக்கட்டண நிர்ணயக் குழு தீர்மானித்துள்ள கட்டணம் நியாயமானதாக இல்லை. தனியார் பள்ளிகளில் ஒரு மாணவருக்கு செலவு செய்யப்படும் தொகை குறித்து ஆய்வு செய்யாமல், அப்பள்ளிகள் கோரியுள்ள தொகையை வழங்க முன்வருவது விதிகளுக்கு புறம்பானது.

எனவே, அரசாணை 102-ஐ உடனடியாக நிறுத்திவைக்க வேண்டும். மத்திய அரசு உரிய விளக்கம் அளிக்காத வரை அரசாணையை செயல்படுத்தக் கூடாது. அரசாணையை செயல்படுத்தினால், மாநில நிதிநிலை அறிக்கையில், அரசுப் பள்ளிகளுக்கான செலவுகளை குறைத்து தனியாருக்கு திருப்பிவிட வழிசெய்யும்.

கல்விக் கட்டணம் தொடர்பாக தனியார் பள்ளிகளில் கடந்த ஜூன் மாதம் நடத்தப்பட்ட ஆய்வு குறித்து பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. இதில், மாணவர்களிடம் தனியார் பள்ளிகள் கட்டணம் வசூலித்தது தெரியவந்து, அந்த பள்ளிகள் பெற்றோரிடம் கட்டணத்தை திருப்பித் தந்துள்ளன. எனவே, கல்வி உரிமைச் சட்டப்படி சேர்க்கப்பட்ட மாணவர்களிடம் கட்டணம் வசூலித்த தனியார் பள்ளி நிர்வாகங்கள் மீது இந்திய தண்டனை சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x