Published : 19 May 2014 08:31 AM
Last Updated : 19 May 2014 08:31 AM
பழனி, ஏற்காடு உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் ரயில்களை சூப்பர் பாஸ்ட் ரயில்களாக மாற்றும் ரயில்வே நிர்வாகத்தின் முடிவுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மறை முகமாக கட்டணத்தை உயர்த்தும் நோக்கத்தோடுதான் இந்த நடவடிக்கை என பயணிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
சென்னை சென்ட்ரலில் இருந்து தினமும் இயக்கப்படும் வெஸ்கோஸ்ட் எக்ஸ்பிரஸ், ஏற்காடு எக்ஸ்பிரஸ், பழனி எக்ஸ்பிரஸ், ஆலப்புழை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் வரும் ஜுலை முதல் தேதி முதல் சூப்பர் பாஸ்ட் ரயில்களாக இயக்கப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. இதற்கு பயணிகள் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இதுகுறித்து, மண்டல ரயில்வே பயணிகள் ஆலோசனைக் குழு முன்னாள் உறுப்பினர் பாஸ்கரன் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
இந்த ரயில்களின் வேகத்தைக் கூட்டி பயண நேரத்தை குறைப் பதற்கு பதிலாக, மறைமுகமாக கட்டணத்தை உயர்த்தி வசூலிக் கவே இந்த முடிவு எடுக்கப் பட்டுள்ளது. சீசன் டிக்கெட் பயணிகள் புறநகர் ரயில்கள் மட்டுமல்லாது எக்ஸ்பிரஸ் ரயில் களிலும் பயணிக்கலாம். அதன்படி திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடியிலிருந்து சென்னைக்கு தினசரி ஆயிரக்கணக்கானோர் வேலை நிமித்தமாக பயணிக் கின்றனர். இவர்களுக்கு இரவில் சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் பழனி, ஆலப்புழை மற்றும் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில்கள் வசதியாக உள்ளன. பயண நேரமும் குறைவு என்பதால் சீசன் டிக்கெட் பயணிகளுக்கு வரப்பிரசாதமாக இந்த ரயில்கள் உள்ளன.
இந்நிலையில், இந்த ரயில்கள் சூப்பர்பாஸ்ட்டாக மாற்றப் பட்டுள்ளதால் சீசன் டிக்கெட் பயணிகளால் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அல்லது கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டி உள்ளது.
வளர்ந்த நாடுகளில் மணிக்கு 300 கி.மீ. வேகத்தில் ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், மணிக்கு 55 கி.மீ., வேகத்தில் இயக்கப்படும் இந்திய ரயில்களை சூப்பர்பாஸ்ட் என அறிவிக்கப் படுவது வேடிக்கையாக உள்ளது. எனவே, குறைந்தபட்ச வேகமாக மணிக்கு 70 கி.மீ. என அதிகரிக்க வேண்டும். அத்துடன், சீசன் டிக்கெட் பயணிகளையும் அதில் பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு பாஸ்கரன் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT