Last Updated : 02 Jul, 2015 08:19 AM

 

Published : 02 Jul 2015 08:19 AM
Last Updated : 02 Jul 2015 08:19 AM

வங்கியில் 19 கிலோ நகை திருடியவரிடம் நகைகளை பறிமுதல் செய்வதில் சிக்கல்: 4 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

புதுக்கோட்டை அருகே வங்கியிலிருந்து 19 கிலோ நகைகளைத் திருடியவரை 7 மாதங்களுக்குப் பிறகு போலீஸார் கைது செய்திருந்தாலும், அவரிடமிருந்து முழுமையாக நகைகளை பறிமுதல் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூரில் கடந்த 2014 நவம்பர் 30-ம் தேதி இரவு, அவ்வழியே சென்ற கீரனூர் காவல் நிலைய போலீஸாரைக் கண்டதும் மூட்டை ஒன்றை தன் தலையில் சுமந்து சென்ற ஒருவர், மூட்டையை அங்கேயே வீசிவிட்டு தப்பியோடினார். அந்த மூட்டையில் இருந்த 35 கிலோ தங்க நகைகள் அங்குள்ள சிட்டி யூனியன் வங்கியிலிருந்து திருடப்பட்டது என்பது தெரியவந்தது. மறுநாள் வங்கி லாக்கரில் இருந்த நகைகள் சரிபார்க்கப்பட்டதில் மீட்கப்பட்ட நகைகளைவிட, கூடுதலாக 19 கிலோ நகைகள் திருடுபோயிருந்தது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு பல மாதங்களாக விசாரணை நடைபெற்றும் துப்பு துலங்காததால் குற்றவாளியைப் பிடிப்பதில் தேக்கநிலை நீடித்தது.

திண்டுக்கல் அருகே திருட்டு

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே செந்துறையில் உள்ள வங்கியில் நடந்த திருட்டு முயற்சியின்போது அலாரம் ஒலித்ததால் திருடர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் அங்குள்ள கண்காணிப்பு கேமராவின் பதிவு, மர்ம நபர்கள் விட்டுச்சென்ற கட்டிங் பிளேடு, ஆக்ஸா பிளேடு போன்ற ஆயுதங்களைக் கொண்டு மேற்கொண்ட விசாரணையில், புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகேயுள்ள ஒடுக்கூர் கிராமத்தைச் சேர்ந்த முத்தையா மகன் கோபாலகிருஷ்ணன்(30) குளத்தூர் வங்கியில் திருடினார் என்பதும், செந்துறையில் திருட முயன்றதும் அவர்தான் என்றும் தெரியவந்தது.

குறுகிய காலத்தில் ஊருக்குள் செல்வந்தராக வலம் வந்த கோபாலகிருஷ்ணனை கைது செய்து ஜூன் 30-ம் தேதி அதிகாலையில் கீரனூர் நீதிபதி சக்திவேல் முன்னிலையில் ஆஜர்படுத்தி, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

வங்கியில் இருந்து மூட்டையாகக் கட்டி திருடிச் சென்ற நகைகளை கோபாலகிருஷ்ணன், மண்ணில் புதைத்து வைத்துள்ளார். பின்னர், சிறுகச் சிறுக எடுத்து விற்றும், அடகு வைத்தும் உள்ளார். மேலும், உள்ளூர் மற்றும் சிங்கப்பூரில் பல லட்ச ரூபாயை சூதாட்டத்தின் மூலம் அவர் இழந்திருப்பதாலும், வீடு, ஹோட்டல் கட்டியது, வாகனங்கள் வாங்கியிருப்பது போன்றவற்றால் திருடிய நகைகளை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, அடகு வைத்த கடைகளில் இருந்து நகைகளையும், நிலம், கார், டிராக்டரை விற்றவர்களிடம் இருந்து தொகையையும் வசூலித்து வருவதாக போலீஸார் கூறுகின்றனர்.

மேலும், கூடுதல் விசாரணைக் காக கோபாலகிருஷ்ணனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டுமென கீரனூர் நீதிமன்றத்தில் போலீஸார் மனு அளித்துள்ளனர்.

4 நாட்கள் போலீஸ் காவல்…

கோபாலகிருஷ்ணன் திருடிய நகைகளைப் பறிமுதல் செய்ய வேண்டியுள்ளதால் அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என போலீஸார், கீரனூர் குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி சக்திவேல், கோபாலகிருஷ்ணனை ஜூலை 4-ம் தேதி வரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதித்து உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x