Last Updated : 13 Jul, 2015 03:32 PM

 

Published : 13 Jul 2015 03:32 PM
Last Updated : 13 Jul 2015 03:32 PM

அலங்கார நீரூற்று, பூங்கா, நீச்சல் குளத்துக்காக திற்பரப்பு அருவி பகுதியில் ரூ.26 லட்சத்தில் சீரமைப்பு பணி

திற்பரப்பு பேரூராட்சி பொதுநிதியில் இருந்து ரூ.26 லட்சம் செலவில் அலங்கார நீரூற்று, பூங்கா, நீச்சல் குளம், கழிவறை போன்றவற்றை நவீனப்படுத்தும் பணி நடந்து வருகிறது.

திற்பரப்பு அருவியில் குற்றாலத் துக்கு நிகரான வசதிகளை செய்துதரக் கோரும் வகையில் சுற்றுலா துறைக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலா பயணிகள் பலரும் திற்பரப்பு அருவிக்கு செல்லாமல் திரும்பமாட்டார்கள். இயற்கை எழில் சூழ்ந்த இந்த அருவிக்கு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தருகின்றனர். குமரி குற்றாலம் என்றழைக்கப் படும் இந்த அருவியில் தற்போது தண்ணீர் மிதமாக கொட்டுகிறது. கடந்த வாரத்தில் இருந்து அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

அருவிக்கு செல்வதற்கான நுழைவு கட்டணமாக ரூ.4 வசூலிக்கப்படுகிறது. ஆனால், போதிய அடிப்படை வசதிகள் செய்துதரப்படாததால் பலரும் அதிருப்தியடைந்துள்ளனர். தற்போது பெயரளவுக்கு இயங்கிவரும் படகு இல்லத்தை மேம்படுத்த வேண்டும் எனவும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் திற்பரப்பு பேரூராட்சி பொதுநிதியில் இருந்து அருவி மற்றும் சுற்றுப்புறத்தை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.

இதுகுறித்து திற்பரப்பு பேரூராட்சி தலைவி புஷ்பரதி கூறும்போது,

“திற்பரப்பு அருவி க்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு சிறப்பான வசதிகள் செய்து கொடுக்கும் வகையில் தற்போது பேரூராட்சி பொதுநிதியில் இருந்து பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.

அருவிக்கு வருவோரின் பயன்பாட்டுக்காக ரூ.7 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குழாய்கள் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அலங்கார நீரூற்று ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் செலவிலும், பூங்கா விளையாட்டு பொருட்கள் ரூ.4 லட்சத்து 50 ஆயிரத்திலும், நீச்சல்குளம் நவீனப்படுத்தும் பணி ரூ.4.70 லட்சத்திலும் நடந்து வருகிறது. குளியலறை, கழிவறை போன்றவற்றை ரூ.3 லட்சத்து 50 ஆயிரத்தில் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கார் பார்க்கிங் ரூ. 2 லட்சத்து 50 ஆயிரம் செலவில் சீரமைக்கப்படுகிறது. முதல்கட்டமாக ரூ. 26 லட்சம் திற்பரப்பு பேரூராட்சி பொதுநிதியில் இருந்து ஒதுக்கீடு செய்து இப்பணிகள் நடந்து வருகின்றன.

குற்றாலம் அருவியின் சுற்றுப்புறத்தில் உள்ளது போன்ற வசதிகள் திற்பரப்பு அருவிக்கு வருவோருக்கு ஏற்படுத்தி கொடுக்கும் விதத்தில் தமிழக சுற்றுலா துறைக்கு கருத்துரு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஆசிய வங்கி நிதியுதவியுடன் மேலும் சிறப்பு வசதிகள் ஏற்படுத்தி கொடுக்க அதில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x