Published : 06 Jul 2015 05:52 PM
Last Updated : 06 Jul 2015 05:52 PM

பாஜக அரசின் ஊழல் விவகாரங்களுக்கு பதிலளிக்க அஞ்சுகிறார் மோடி: ஈவிகேஎஸ் இளங்கோவன்

'நரேந்திர மோடி இந்தியாவையே உலுக்கிக் கொண்டிருக்கிற மெகா ஊழலுக்கு பதில் சொல்ல தயங்குவது ஏன்? மடியில் கணம் இருப்பதனால் நரேந்திர மோடி பதில் சொல்ல அஞ்சுகிறாரோ?' என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''மத்தியில் பாஜக ஆட்சி அமைந்து ஓராண்டு முடிந்ததும், மதுராவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஊழல் இல்லாத ஆட்சியை ஓராண்டு நடத்தியதாக பிரதமர் நரேந்திர மோடி நெஞ்சை உயர்த்தி, மார்தட்டி முழக்கமிட்டு பேசினார்.

அவர் பேசிய சில நாள்களிலேயே ஒவ்வொரு ஊழலாக வெடித்துக் கிளம்பி வருகிறது. முதலில் இந்திய நிதியமைச்சகத்தினால் தேடப்படுகிற சர்வதேச பொருளாதார குற்றவாளியான லலித் மோடியின் வெளிநாட்டு பயணத்திற்கு வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் சட்டவிரோதமாக உதவியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன்மூலம் ஒரு அமைச்சர் கடைபிடிக்க வேண்டிய நன்னடத்தை விதிமுறைகளை மீறியதோடு, சட்டவிரோதமாக ஒரு கிரிமினல் குற்றவாளிக்கு உதவி புரிந்த குற்றச்சாட்டும் அவர்மீது எழுந்தது.

அடுத்து மேலும், லலித் மோடிக்கு உதவியதாக வசுந்தரா ராஜே மீது குற்றச்சாட்டு வெடித்தது. இதில் இவர் சட்டவிரோதமாக உதவி செய்ததற்கு கைமாறாக அவரது மகன் துஷ்யந்த் சிங்கின் நிறுவனத்திற்கு ரூ.10 மதிப்புள்ள பங்குகள் மீது ஒரு லட்ச ரூபாய் வீதம் அதிக விலை கொடுத்து 13 கோடி ரூபாய் முதலீடு செய்தது பூதாகரமாக வெளிவந்துள்ளது.

ஒவ்வொரு தேர்தலின் போதும் பல்வேறு கல்வித் தகுதிகளை மோசடியாக வெளியிட்டதற்காக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிரிதி ராணி மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநில குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரூ.206 கோடிக்கு பகிரங்க டெண்டர்கள் விடாமல் விருப்புரிமை அடிப்படையில் வழங்கியதில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனையடுத்து சத்தீஷ்கர் மாநில முதலமைச்சர் ராமன் சிங் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது ரூ.36 ஆயிரம் கோடிக்கு பொது விநியோகத்துறையில் உணவுப் பொருட்கள் கொள்முதல் செய்ததில் ஊழல் நடைபெற்றதாக குற்றச்சாட்டு வெளிவந்துள்ளது.

இப்படி ஒவ்வொரு ஊழல் குற்றச்சாட்டுகளாக பாஜகவினர் மீது வெளிவருகிற நிலையில் மத்தியபிரதேச மாநிலத்தில் தொழில்முறை தேர்வு வாரியம் அரசு பணிகளுக்கான தேர்வுகளை நடத்தியதில் 'வியாபம்” என்று அழைக்கப்படுகிற மெகா ஊழல் நடைபெற்றுள்ளது.

இதன்மூலம் மருத்துவக் கல்லூரிக்கு நுழைவுத் தேர்வு நடத்துவதில் ஆள் மாறாட்டம், புத்தகங்களை வைத்து பரீட்சை எழுத அனுமதிப்பது, பரீட்சை எழுதுவதற்கான அனுமதி அட்டையில் மோசடிகள், இப்படி பல்வேறு முறைகேடுகள் நடந்து நூற்றுக்கணக்கான மாணவர்கள் மோசடியாக தேர்வு பெற்று மருத்துவர்களாக பணியில் சேர்ந்துள்ளனர்.

இதுகுறித்து மத்தியபிரதேச உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டு மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை விசாரித்து வருகிறது. இந்த விசாரணையை முன்னின்று நடத்திய மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் அருண் ஷர்மாவும், பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர்களை பேட்டி கண்ட தொலைக்காட்சி நிருபர் அக்ஷய் சிங்கும் நேற்று மர்மமான முறையில் மரணமடைந்துள்ளனர்.

இந்த ஊழலில் சம்மந்தப்பட்டவர்கள் இதுவரை 46 பேர் மர்மமான முறையில் மரணமடைந்த அதிர்ச்சி செய்தி நாட்டையே உலுக்கி வருகிறது. அதேபோல இந்த பிரச்சினையை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் அம்பலப்படுத்திய ஆசீஷ் சதுர்வேதி தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

கல்வித்துறையின் அடிப்படையையே தகர்த்து தரைமட்டமாக்குகிற வகையில் மத்திய பிரதேசத்தில் மாநில தொழில்முறை தேர்வு வாரியம் செயல்பட்டுள்ளது. இவர்களது செயல்பாடுகளுக்கு பின்னாலே மத்தியபிரதேச முதலமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகள் என இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர்; சம்மந்தப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கை மத்தியபிரதேச பாஜக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மாநில காவல்துறையின் ஊழல் தடுப்பு பிரிவு விசாரணை மேற்கொண்டால் நிச்சயம் நீதி கிடைக்காது. குற்றவாளிகள் தப்புவதற்கு மாநில காவல்துறையே துணைபோகிற நிலை ஏற்படும்.

எனவே, நாட்டையே உலுக்கிய வியாபம் மெகா ஊழலில் சம்மந்தப்பட்டுள்ள குற்றவாளிகளை கண்டுபிடித்து சட்டத்தின் முன்னால் நிறுத்துவதற்கு உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையில் மத்திய புலனாய்வுத்துறையின் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரிக்க வேண்டும். அப்படி விசாரித்தால் தான் சட்டத்தின் முன்னால் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்.

ஊழலற்ற ஆட்சி நடத்தப்போவதாக தேர்தல் நேரத்தில் வீரவசனம் பேசிய நரேந்திர மோடி இதுவரை வெளிவந்துள்ள எந்த ஊழலுக்கும் தமது திருவாயை திறந்து பதில் சொல்லியதில்லை.

அடிக்கடி வெளிநாடு சுற்றுப்பயணம் செய்வதில் அக்கறை காட்டுகிற நரேந்திர மோடி இந்தியாவையே உலுக்கிக் கொண்டிருக்கிற மெகா ஊழலுக்கு பதில் சொல்ல தயங்குவது ஏன் ? மடியில் கணம் இருப்பதனால் நரேந்திர மோடி பதில் சொல்ல அஞ்சுகிறாரோ ?'' என்று இளங்கோவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x