Published : 13 Jul 2015 08:45 PM
Last Updated : 13 Jul 2015 08:45 PM

அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட மின் திட்டங்களால் ஒரு மெகாவாட் மின்சாரமாவது கிடைத்துள்ளதா? - கருணாநிதி

கடந்த 4 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட மின் திட்டங்களால் ஒரு மெகாவாட் மின்சாரமாவது கிடைத்துள்ளதா என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மின்வாரியத்தில் நடைபெற்றதாக கூறப்படும் ஊழல்கள் குறித்து ஓய்வுபெற்ற மின்வாரிய அலுவலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு அறிக்கை வெளியிட்டிருந்தேன். தமிழகத்தில் உள்ள பல்வேறு கட்சித் தலைவர்களும் இதே கோரிக்கையை விடுத்திருந்தனர்.

இதற்கு பதிலளித்துள்ள மின்துறை அமைச்சர், மின்வாரிய ஊழல் தொடர்பாக தொடரப்பட்டுள்ள வழக்கு விசாரணைக்கு ஏற்றதுதானா என்பதைக் கண்டறிவதற்காக முதல்கட்ட விசாரணையில் மட்டுமே இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் தமிழக அரசுக்கு கூர்மையான கேள்விக்கணைகளை நீதிபதிகள் தொடுத்துள்ளனர். ஆனால், அமைச்சர் முதல்கட்ட விசாரணைதான் என அலட்சியமாக கூறியிருக்கிறார்.

இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு கேட்டால் வியாபார நோக்கில் அறிக்கை வெளியிட்டிருப்பதாக அமைச்சர் கூறுகிறார். மின் உற்பத்தி, மின் கொள்முதலில் யார் வியாபார நோக்கில் செயல்பட்டார்கள் என்பது காலம் வரும்போது மக்கள் மன்றத்தில் வெளிவரும்.

கடந்த 4 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் 5,346.5 மெகாவாட் கூடுதல் மின்சாரம் பெறப்பட்டுள்ளதாக நத்தம் விஸ்வநாதன் கூறியிருக்கிறார். அவர் குறிப்பிட்டுள்ள 19 திட்டங்களில் 3,860 மெகாவாட் மின்சார உற்பத்திக்கான திட்டங்கள் திமுக ஆட்சியிலும், வெறும் 27 மெகாவாட்டுக்கான திட்டங்கள் ஏற்கெனவே நடைபெற்ற அதிமுக ஆட்சியிலும் தொடங்கப்பட்ட திட்டங்களாகும். ஆனால், முதல்வரும் மின்துறை அமைச்சரும் திரும்பத் திரும்ப 5,346.5 மெகாவாட் மின்சாரமும் அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்ட திட்டங்கள்போல பேசி வருகின்றனர்.

2011-ல் அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு அறிவிக்கப்பட்ட மின் திட்டங்களில் இருந்து ஒரு மெகாவாட் மின்சாரமாவது கிடைத்திருக்கிறதா என்பதற்கு அமைச்சர் பதில் சொல்லாதது ஏன்? சூரியசக்தி மின்சாரம் குறைவான விலைக்கு கிடைக்கும்போது ஒரு யூனிட் மின்சாரம் ரூ.7.01-க்கு வாங்க அதானி குழுமத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டது ஏன்? அதிக விலை கொடுத்து ஒப்பந்தப்படி 25 ஆண்டுகளுக்கு மின்சாரம் வாங்கினால் ரூ.23 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும் எனக் கூறப்படுகிறது. இதற்கு அமைச்சரின் பதில் என்ன?

மின்வாரிய முறைகேடுகள் குறித்து நேரடியாக பதில் அளிக்காமல், திசை திருப்பும் நோக்கில் உண்மைக்கு மாறானவற்றை அமைச்சர் சுற்றிவளைத்து சொல்லியிருக்கிறார்.

இவ்வாறு அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x