Published : 13 Jul 2015 08:24 AM
Last Updated : 13 Jul 2015 08:24 AM
அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வில் இடம் கிடைக்கும் மாணவர்களுக்கு கல்விக் கடன் அளிக்க அங்கு அமைக் கப்பட்டுள்ள வங்கிகளின் கவுன்ட் டர்கள் வெறும் கண்துடைப்புக்காக வைக்கப்பட்டுள்ளன என மாணவர்கள், பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு (கவுன்சிலிங்) கடந்த 1-ம் தேதி தொடங்கியது. நாள்தோறும் 8 அமர்வுகள் வீதம் நடத்தப்படும் இக்கலந்தாய்வில் ஆறாயிரம் மாணவர்கள் பங்கேற்கின்றனர்.
இவ்வாறு பங்கேற்க வரும் மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்கவும், இதுதொடர்பான ஆலோசனை வழங்குவதற்காகவும் வேண்டி 6 பொதுத்துறை வங்கிகள் சிறப்புக் கவுன்ட்டர்களை அமைத்துள்ளன. இக்கவுன்ட்டர்களில் கல்விக் கடன் வழங்குவதற்கான அடிப்படை ஆலோசனைகள், தற்காலிக ஒப்புதல் கடிதம் ஆகியவை வழங்கப்படுகின்றன.
மேலும், பல வங்கிகளில் ஒரு பகுதியில் உள்ள குறிப்பிட்ட சில வார்டுகளில் வசிக்கும் மக்களுக்கு மட்டுமே கடன் வழங்குவதால் இக்கவுன்ட்டர்களில் தற்காலிக ஒப்புதல் கடிதம் வாங்கிச் சென்றும் பயனில்லை. எனவே, இக்கவுன்ட்டர்கள் மூலம் தங்களுக்கு எவ்விதப் பலனும் இல்லை என்று பெற்றோர் புகார் கூறியுள்ளனர்.
இதுகுறித்து, பெற்றோர் சிலர் ‘தி இந்து’விடம் கூறிய கருத்துக்கள்:
வி.வெங்கடேசன், தேனி
நான் எனது மகளின் கலந்தாய்வுக்காக வந்துள்ளேன். எனக்கு தேனியில் உள்ள கனரா வங்கியில் சேமிப்புக் கணக்கு உள்ளது. ஆனால், எனது மகளின் கல்விக் கடனை அதே வங்கிக் கிளையில் வாங்கலாம் என்றால் வங்கி கிளையும், எனது வீடும் வெவ்வேறு வார்டுகளில் உள்ளதால் அந்த வங்கிக் கிளையில் கடன் கிடைக்காது என்றும், அங்குள்ள வேறொரு கிளையில் சென்று கடன் வாங்குமாறும் கூறுகின்றனர்.
புதிய வங்கியில் கடன் வாங்கச் செல்லும்போது என்னைப் பற்றிய விவரங்கள் ஏதும் அந்த வங்கி கிளையில் உள்ளவர்களுக்கு தெரியாது. மேலும், எனது சேமிப்புக் கணக்கு உள்ள வங்கிக் கிளையிலேயே எனது மகளின் கல்விக் கடனும் இருந்தால் அதைக் கண்காணிக்க எனக்கு வசதியாக இருக்கும்.
ஐய்யப்பன், சேத்தியாதோப்பு
நான் எனது மகனின் கல்விக் கடன் குறித்து இங்குள்ள ஒரு பொதுத்துறை வங்கியின் கிளை யில் விசாரித்தேன். அங்குள்ள ஊழியர் நான் கேட்கும் கேள்வி களுக்கு பதில் கூறாமல் ஒரு நோட்டீஸை எடுத்துக் கொடுத்து அதைப் பார்த்து தெரிந்து கொள்ளும்படி கூறுகிறார்.
அண்ணா பல்கலைக் கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த சிறப்புக் கவுன்ட்டர்களின் முக்கிய நோக்கமே கல்விக் கடன் குறித்து மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் தெளிவாக விளக்க வேண்டும் என்பதுதான். ஆனால், ஊழியர்களின் இத்த கைய அலட்சிய போக்கு காரண மாக இக்கவுன்ட்டர்கள் வெறும் கண்துடைப்பாக உள்ளன.
ஆர்.தனலஷ்மி, மணப்பாறை
இங்குள்ள வங்கி கவுன்ட்டர் களில் கல்விக் கடனுக்கு அளிக்கப்படும் தற்காலிக ஒப்புதல் கடிதத்தை வைத்து கல்விக் கடன் கிடைக்கும் என உறுதியாக கூற முடியாது. காரணம், இக்கடிதத்தை எங்கள் ஊரில் உள்ள வங்கியின் கிளையில் கொண்டு சென்று கொடுத்து அங்குள்ள வங்கி மேலாளர் கேட்கும் அனைத்து விவரங்களையும் கொடுத்த பிறகுதான் கல்விக் கடன் கிடைக்கும் என கூறுகின்றனர். எனவே, இந்தக் கவுன்ட்டர்களால் எவ்விதப் பயனும் இல்லை.
இதுகுறித்து, வங்கி அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது அண்ணா பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள வங்கிக் கவுன்ட்டர்கள் வங்கியில் கல்விக் கடனை எவ்வாறு பெறுவது என்பது குறித்து மாணவர்களுக்கும், பெற்றோர் களுக்கும் ஆலோசனை வழங்குவதற்காக மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இக்கவுன்ட்டர்களில் கல்விக் கடன் பெறுவதற்காக வழங்கப்படும் தற்காலிக ஒப்புதல் கடிதத்தை வைத்து வங்கி மேலாளர்கள் கண்டிப்பாக கல்விக் வழங்க வேண்டும் என்ற எவ்வித கட்டாயமும் கிடையாது’’ என்றார்.
பல வங்கிகளில் ஒரு பகுதியில் உள்ள குறிப்பிட்ட சில வார்டுகளில் வசிக்கும் மக்களுக்கு மட்டுமே கடன் வழங்குவதால் இக்கவுன்ட்டர்களில் தற்காலிக ஒப்புதல் கடிதம் வாங்கிச் சென்றும் பயனில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT