Published : 02 May 2014 09:41 AM
Last Updated : 02 May 2014 09:41 AM

7 இளைஞர்களின் அரசுப் பணியை பறித்த ‘செல்வி’: வருவாய் துறை, மின் துறை அதிகாரிகளின் அலட்சியம்

சாதிச் சான்றிதழ் உள்ளிட்ட அரசுத்துறை ஆவணங்களில், ஆணுக்கு பதில் ‘செல்வி’ எனக் குறிப்பிடப்பட்டதால், ஏழு பேரின் பணி நியமன ஆணை உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.

தமிழக மின்சார வாரியத்தின் கீழ் செயல்படும் தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் 4,000 உதவியாளர்கள் (ஹெல்பர்கள்) புதிதாக நியமனம் செய்யப்பட்டனர். இந்த பணிக்கு சுமார் 23,500 பேர் விண்ணப்பித்திருந்தனர். சான்றிதழ் சரிபார்ப்பு, எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவை முடிந்து, 4,000 பேர்கொண்ட பெயர்ப்பட்டியல் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் பட்டியலில் இடம் பெற்ற எம்.கவியரசன், எஸ்.கஜேந்திரன், எஸ்.ராம்குமார், ஆர். தமிழ்மணி, ஏ.கார்த்தி, கே.அழகு மற்றும் எஸ்.யுவராஜ் ஆகிய ஏழு பேரின் தேர்வாணை திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. அவர்களது பெயர் தேர்வுப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக, மின் வாரிய தலைமைப் பொறியாளர் (பணியாளர் நிர்வாகம்) என்.கிருஷ்ணமூர்த்தி அறிவித்துள்ளார்.

இவர்களில் கவியரசன், கஜேந்திரன் மற்றும் கார்த்தி ஆகியோர் தலித் இனத்தைச் சேர்ந்தவர்கள், மற்ற நான்கு பேரும் பிற்படுத்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர்கள். தேர்வுப்பட்டியலில் இருந்து தங்கள் பெயர் திடீரென்று நீக்கப்பட்டது ஏன் என்று மின் வாரிய அதிகாரிகளை விண்ணப்பதாரர்கள் கேட்ட போது, மிக ஆச்சர்யமான பதிலை அவர்கள் தெரிவித்துள்ளனர்.

நீக்கப்பட்ட ஏழு பேரும், வேலை வாய்ப்பு அலுவலகத்தின் பதிவு மூப்பு பட்டியலில் பெண்கள் என்று சிபாரிசு செய்யப்பட்டுள்ளனர். ஆனால், இந்த ஏழு பேரும் ஆண்கள் என்பதால் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளனர்.

இதுகுறித்து ‘தி இந்து’, அதிகாரிகளிடம் விசாரித்த போது, இன்னும் அதிர்ச்சியான தகவல் கிடைத்தது.

இந்த ஏழு பேரின் சாதிச் சான்றிதழில், பாலினத்துக்கான குறிப்பில், திரு, திருமதி செல்வன், செல்வி, என்ற குறிப்பில் செல்வி என்பதை 'டிக்' செய்து, மற்றதை அடித்துள்ளனர். இந்த சான்றிதழ்கள், பள்ளிகளில் 10ம் வகுப்பு முடித்த போது, வருவாய்த் துறை ஒத்துழைப்புடன் வழங்கப்பட்டுள்ளது. அப்போது, இந்த பிழை நடந்துள்ளது தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து, பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட ஒருவர் கூறியதாவது:

ஏழ்மைக் குடும்பத்தைச் சேர்ந்த எங்களைப் பொறுத்தவரை, 10ம் வகுப்பு முடிந்ததும், அடுத்து என்ன செய்வது, என்ன படிப்பது என்ற முயற்சியில் இறங்கினோம். அதனால் இதுபோன்ற விஷயங்களில் அதிக கவனம் செலுத்த வில்லை.

பள்ளிக்கூடங்கள் மூலம் சான்றிதழ்கள் வழங்கப்பட்டதால், இந்தப் பிழையை நாங்கள் கவனிக்கவில்லை. பள்ளி சான்றிதழ், நடத்தை, பிறப்பு, இருப்பிட மற்றும் ஐ.டி.ஐ., தொழிற்படிப்பு சான்றிதழ்கள் அனைத்திலும், பாலினத்தில் ஆண் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. நாங்கள் வேலைக்காக விண்ணப்பித்த போதும், ‘ஆண்’ என்றே குறிப்பிட்டுள்ளோம். நேர்முகத் தேர்வுக்கும் மின் துறை அதிகாரிகள் முன் நேரில் ஆஜராகியுள்ளோம்.

இந்நிலையில் எங்களை 'செல்வி' என்று சிபாரிசு செய்ததை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மாதக்கணக்கில் முயற்சி செய்து, அரசு வேலையை பெற்று விட்டோம் என்ற மகிழ்ச்சியில் இருக்கும் போது, வலுவில்லாத காரணம் கூறி, தேர்வு பட்டியலில் இருந்து எங்களை நீக்கியது வேதனை அளிக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து மின் வாரிய தலைவர் ஞானதேசிகனிடம் மின் துறை தொழிற்சங்க நிர்வாகிகள் மனு அளிக்கவுள்ளனர். இதுகுறித்து, மின் ஊழியர் தொழிற்சங்க நிர்வாகி செல்வராஜ் கூறியதாவது:

தேர்வுப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதற்கு, மின் துறை கூறிய காரணங்கள் அனைத் தும், சம்பந்தப்பட்ட விண்ணப்பதா ரரை சேர்ந்ததல்ல. மற்ற சான்றிதழ்களையெல்லாம் பார்க் காமல், ஏதோ ஒரு சான்றிதழில் உள்ள பிழையைக் காரணம் காட்டி நடவடிக்கை எடுப்பது கண்டிக்கத்தக்கது. அப்படி பிழையாக தெரிந்திருந்தால் விண்ணப்பதாரர்களை அழைத்து, புதிய சான்றிதழ் வாங்கி வர உத்தரவிட்டிருக்கலாம்.

மாறாக விண்ணப்பதாரருக்கு எந்த வாய்ப்பும் அளிக்காமல், தவறான முடிவை மின் துறை எடுத்துள்ளது.

இதுகுறித்து, மின் வாரிய அதிகாரிகளிடம் முறையிட உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x