Published : 12 Jul 2015 11:09 AM
Last Updated : 12 Jul 2015 11:09 AM

மவுலிவாக்கம் கட்டிட விபத்து குறித்த நீதிபதி ரகுபதி கமிஷன் அறிக்கையை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யாதது ஏன்? - திமுக தலைவர் கருணாநிதி கேள்வி

திமுக தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சென்னை மவுலிவாக்கத்தில் கடந்த ஆண்டு ஜூன் 28-ல் அடுக்குடிமாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 61 பேர் பலியாயினர். இதுகுறித்து விசாரிக்க நீதிபதி ரகுபதி தலைமையில் விசாரணைக் கமிஷனை முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

ரகுபதி கமிஷன் கடந்த ஆண்டு ஜூலை 3-ம் தேதி அமைக்கப்பட்டது. குறிப்பிட்ட காலவரம்புக்கு முன்னதாகவே ஆகஸ்ட் 25-ல் நீதிபதி ரகுபதி தனது அறிக்கையை அரசிடம் அளித்துவிட்டார். இந்த அறிக்கை குறித்து உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியபோது, சட்டப் பேரவையில் தாக்கல் செய்ய இருப்பதாக தமிழக அரசு தெரிவித்தது.

இதுபோன்ற விசாரணை கமிஷன்கள் தங்கள் அறிக் கையை அரசிடம் சமர்ப்பித்த 6 மாதங்களுக்குள் நாடாளுமன்றம் அல்லது சட்டப்பேரவையில் தாக்கல் செய்ய வேண்டும். அதன்படி, நீதிபதி ரகுபதி கமிஷன் அறிக்கை கடந்த பிப்ரவரி 25-க்குள் சட்டப்பேரவையில் தாக் கல் செய்யப்பட்டிருக்க வேண் டும். ஆனால், இதுவரை தாக்கல் செய்யப்படவில்லை. எனவே, இந்த அறிக்கை செல்லுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு என்ன பதில் சொல்லப் போகிறது?

முதல்வர் அலுவலகத்தில் கோப்புகள் தேங்கியிருப்பதாக செய்திகள் வருகின்றன. இதனால் பல்வேறு துறைகளில் காலிப் பணியிடங்களை நிரப்ப முடியவில்லை எனக் கூறப்படுகிறது.

உடன்குடி அனல் மின்நிலைய டெண்டர் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் சீன நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நிலுவையில் இருக் கும்போது மின்வாரியம் புதிய டெண்டரை அறிவித்தது. இதை எதிர்த்து சீன நிறுவனம் தொடர்ந்த வழக்கில் புதிய டெண்டருக்கு உயர் நீதிமன்றம் தடைவிதித்தது. அதோடு, தமிழக அரசையும் கண்டித்துள்ளது. இதற்கு முதல்வரும், மின் துறை அமைச்சரும் அளிக்கப்போகும் பதில் என்ன?

இவ்வாறு அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x