Published : 10 Jul 2015 07:59 AM
Last Updated : 10 Jul 2015 07:59 AM

வேங்கடமங்கலத்தில் இருப்பதுபோல குப்பை மின்சார தயாரிப்பு திட்டத்தை விரிவாக்கலாம்: பசுமை தீர்ப்பாயம் யோசனை

வேங்கடமங்கலத்தில் இருப்பதுபோல தமிழகம் முழுவதும் சாத்தியம் உள்ள இடங்களில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை செயல்படுத்தி குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கலாம் என்று தமிழக அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்னிந்திய அமர்வு ஆலோசனை கூறியுள்ளது.

சென்னை பல்லாவரம் நகராட்சிக்கு உட்பட்ட கணபதிபுரம் பெரிய ஏரி, தாம்பரம் நகராட்சிக்கு உட்பட்ட கன்னட பாளையம், செம்பாக்கம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதி ஆகிய 3 இடங்களில் கொட்டப்படும் குப்பையால் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படுவதை தடுக்கக் கோரி இரு குடியிருப்பு சங்கங்கள், தனிநபர் சார்பில் தனித்தனியே 3 மனுக்கள் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்னிந் திய அமர்வில் தாக்கல் செய்யப்பட்டன.

தீர்ப்பாயத்தின் 2-ம் அமர்வின் நீதித்துறை உறுப்பினர் பி.ஜோதிமணி, தொழில்நுட்பத் துறை உறுப்பினர் பேராசிரியர் ஆர்.நாகேந்திரன் முன்பு இந்த மனுக்கள் சமீபத்தில் விசார ணைக்கு வந்தன. அப்போது, தாம்பரம் நகராட்சி ஆணையர் அறிக்கை தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:

பல்லாவரம், தாம்பரம் நகராட்சிகளில் உருவாகும் குப்பைகளைக் கொண்டு, தாம்பரம் அடுத்த வேங்கடமங்க லத்தில் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திடக்கழிவு மேலாண்மை மாதிரி திட்டம் செயல்படுத்தப் பட்டுள்ளது. இந்த ஆலையில் ‘தினமும் 300 டன் குப்பையில் இருந்து எரி பொருள்’ என்ற முழு திறன் ஜூலை 20-ம் தேதிக்குள் எட்டப்படும். இப்பணி செப்டம்பர் முதல் வாரத்தில் தொடங்கும். பல்லாவரம் நகராட்சியில் கணபதிபுரம் குப்பை மாற்றும் மையத்தின் சர்வே எண் மாற்றுவது தொடர்பாக அரசுக்கு கோப்பு அனுப்பப்பட்டுள்ளது எனக் கூறப்பட்டுள்ளது.

பின்னர் அமர்வு உறுப்பினர்கள் தமது உத்தரவில் கூறியதாவது:

பல்லாவரம் கணபதிபுரம் குப்பை மாற்றும் இடத்தின் சர்வே எண் மாற்றம் தொடர்பான அறிவிக்கையை 10 நாட்களுக்குள் அரசிதழில் வெளியிட நகராட்சி நிர்வாகத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். அடுத்த 7 நாட்களுக்குள் அம்மையத்தை இயக்க மாசுக் கட்டுப்பாடு வாரியம் உத்தரவிட வேண்டும். அமர்வின் உத்தரவு கிடைத்த 10 நாட்களுக்குள் பெரிய ஏரியை பல்லாவரம் நகராட்சி புனரமைப்பு செய்ய தடையில்லா சான்று வழங்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகம் முழுவதும் நகரப் பகுதிகளில் உள்ள ஏரிகளை அரசு புனரமைக்கலாம். குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் இந்த திடக்கழிவு மேலாண்மை மாதிரி திட்டத்தை, தமிழகம் முழுவதும் சாத்தியம் உள்ள இடங்களில் செயல்படுத்தலாம்.

இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள் ளது. அடுத்த விசாரணை ஆகஸ்ட் 4-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x