Published : 21 Jul 2015 08:50 AM
Last Updated : 21 Jul 2015 08:50 AM

இந்தியாவுக்கு அடுத்த 10 ஆண்டுகள் சவால் மிக்கதாக இருக்கும்: ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் சி.ரெங்கராஜன் தகவல்

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அடுத்த 10 ஆண்டுகளுக்கு சவால் மிக்கதாக இருக்கும் என ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் சி.ரெங்கராஜன் தெரிவித்தார்.

கோவை பி.எஸ்.ஜி. மேலாண் மைக் கல்வி நிறுவனத்தின் 50-ம் ஆண்டு நிறைவு விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில், ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னரும், பிரதமரின் பொருளாதார ஆலோ சனைக் குழு முன்னாள் தலைவரு மான சி.ரெங்கராஜன் பேசியதாவது:

இந்தியாவின் கொள்கை முடிவு கள் காரணமாக கடந்த 20 ஆண்டு களில் நினைத்துப் பார்க்க முடியாத மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. 1991-ம் ஆண்டு பொருளாதார கொள்கை மாற்றத்துக்குப் பின்னர் நாட்டின் ஜி.டி.பி. அதிகரித்துள்ளது. 2004-05 தொடக்கத்தில் இருந்து நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.7 சதவீதத்தை தக்க வைத்து வந்தது. உலக பொருளாதார மந்த நிலைக்குப் பின்னர், நாட்டில் கடுமையான வறட்சி இருந்தபோதிலும் 2009 முதல் 2011 வரை 8.5 சதவீதத்துக்கு மேல் பொருளாதார வளர்ச்சியை அடைய முடிந்தது. ஆனால், கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் பொருளாதார வளர்ச்சியின் வேகம் சற்று குறைந்துள்ளது. உலக பொருளாதார சந்தை மாறுபாடு அடைந்து வருவதும், போட்டித் திறன் மிக்கதாகவும் இருந்து வருவதே வளர்ச்சி வேகம் குறைய காரணம். அதற்காக புதிய பொருளாதாரக் கொள்கையை தவறு என கூறக் கூடாது. புதிய பொருளாதாரக் கொள்கையில் சந்தை மாற்றங்களுக்கு ஏற்ப விரிவுபடுத்தி திருத்தங்கள் கொண்டு வருவது அவசியம். தற் போதைய நிலையில் நாட்டின் வளர்ச்சி என்பது 4.7 சதவீதமாக கணிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார வளர்ச்சிக்கு வித்திட வேண்டுமானால் விவசாயம் மற்றும் தொழில் உற்பத்தி யில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும். உலக பொருளாதார நிலையைக் கருத்தில் கொள்ளும் போது இந்தியாவுக்கு அடுத்த 10 ஆண்டுகள் சவால் மிக்கதாக இருக்கும்.

மின் உற்பத்தியை விரைவு படுத்துவது, சந்தை நிலையை மாற்றி அமைப்பது, தயாரிப்பை அதிகப்படுத்துவது போன்றவை தற்போதைய அதிமுக்கிய விஷயங் களாக உள்ளன. நிலம் கையகப் படுத்துவது, குறைந்து வரும் நிலக்கரி இருப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் தாக்கம் போன்ற விஷயங்களைக் கடந்துதான் அடுத்த கட்டத்துக்குள் நுழைய வேண்டி இருக்கும். அதற்கு, நாட்டின் சேமிப்பு, முதலீடு, உற்பத்தியைப் பெருக்குவதற்கான திட்டமிடல், செயல்பாடு இருக்க வேண்டும் என்று அவர் பேசினார்.

பி.எஸ்.ஜி. நிர்வாக அறங்காவலர் எல்.கோபாலகிருஷ்ணன், இயக்குநர் ஆர்.நந்தகோபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x