Published : 13 Jul 2015 09:19 AM
Last Updated : 13 Jul 2015 09:19 AM

சென்னை சென்ட்ரல் அருகே ரயிலில் முகமூடி கொள்ளை: பயணிகளுக்கு அரிவாள் வெட்டு

சென்ட்ரல் அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் முகமூடி கொள்ளையர்கள் ஏறி 3 பயணிகளை வெட்டி நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.

கொல்கத்தாவில் இருந்து ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று சென்னை வந்தது. அதிகாலை 4.20 மணிக்கு சென்ட்ரல் அருகே பேசின்பிரிட்ஜ் - கொருக்குப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் வந்து கொண்டிருந்தது. இந்த இடத்தில் சிக்னலுக்காக ரயில் மெதுவாக செல்வது வழக்கம். நேற்றும் ரயில் மெதுவாக சென்று கொண்டிருந்தது. அப்போது இருட்டில் மறைந்திருந்த 3 பேர் திடீரென முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் ஏறினர். அவர்கள் அனைவரும் முகமூடி அணிந்திருந்தனர். கையில் கத்தி, அரிவாள் வைத்திருந் தனர்.

அந்த பெட்டியில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஹசிலி(24) என்பவர் வந்துகொண்டிருந்தார். கொல்கத்தா வில் கடற்படையில் பணிபுரியும் அவர் தலையில் ஒரு பையை வைத்துக்கொண்டு தூங்கிக் கொண்டிருந்தார். அந்த பையை கொள்ளையர்கள் இழுக்க, ஹசிலி விழித்துக்கொண்டு பையை கொடுக்காமல் கொள்ளையர்களுடன் போராடினார். உடனே கொள்ளையர்கள் அரிவாளால் அவரது தலையில் வெட்டினர். இதில் அதிக ரத்தம் வெளியேறியதால் அவர் மயக்கம் அடைந்தார். அவரது பையில் ரூ.10 ஆயிரம் பணம், லேப்டாப், செல்போன் போன்றவை இருந்தன. அவற்றை கொள்ளையர்கள் பையுடன் எடுத்துக்கொண்டனர்.

பின்னர் சுலேகா(35) என்ற பெண் அணிந்திருந்த 2 பவுன் செயினையும் பறித்தனர். அதைத் தடுக்க முயன்ற இரு பயணிகளின் கையில் கொள்ளையர்கள் கத்தியால் வெட்டினர். இதில் அவர்களுக்கும் ரத்தக்காயம் ஏற்பட்டது. ஒரு நிமிடத்துக்குள் இவை அனைத்தும் நடந்து முடிந்துவிட்டன. பயணிகள் அனைவரும் கூச்சல் போட்டனர், ஒருவர் ரயிலின் அபாய சங்கிலியை பிடித்து இழுக்க, ரயில் நின்றது. சம்பவ இடத்துக்கு ரயில்வே பாதுகாப்புப் படையினர் வருவதற்குள் கொள்ளையர்கள் ரயிலில் இருந்து குதித்து தப்பிச் சென்றுவிட்டனர்.

போலீஸார் விரைந்து வந்து ஹசிலியை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். வெட்டுக்காயம் பட்ட 2 பயணிகள் சிகிச்சை பெற்று சென்றனர். ஹசிலியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அதிக ரத்தம் வெளியேறிவிட்டதால் உயிருக்கு ஆபத்தான நிலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து கொருக்குப்பேட்டை ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x