Published : 03 Jul 2015 08:13 AM
Last Updated : 03 Jul 2015 08:13 AM

இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதால் ஏற்படும் பிரச்சினைகளை தவிர்க்கும் வழிமுறை

ஹெல்மெட் அணிந்து கொண்டு இருசக்கர வாகனத்தை ஓட்டும் போது வாகன ஓட்டிகள் சில பாதுகாப்பு அம்சங்களை கடை பிடிப்பதன் மூலம் பிரச்சினைகளை தவிர்ப்பதுடன் தேவையில்லாத விபத்துக்களை தடுக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

தமிழகத்தில் இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் ஹெல் மெட் அணிவது கட்டாயமாக்கப் பட்டுள்ளது. ஆனால், பல ஆண்டுகளாக ஹெல்மெட் இல் லாமல் இரு சக்கர வாகனம் ஓட்டி பழகிவிட்டு திடீரென ஹெல்மெட் அணிந்து ஓட்டுவதால் வாகன ஓட்டிகள் சில சிரமங்களை சந்திக்கின்றனர். மேலும், கடந்த 1-ம் தேதி ஹெல்மெட் அணிந்து வந்த துரைப்பாக்கத்தை சேர்ந்த செல்வராஜ்(22) என்ற இளைஞர் பின்னால் லாரி வருவது தெரி யாமல், லாரி மோதி இறந்தார்.

ஹெல்மெட் அணிந்து வண்டி ஓட்டுவது குறித்து மோட் டார் சைக்கிள் பந்தய வீரர் ஜெக தீஷ் கூறியதாவது: ஹெல்மெட் அணிந்து ஓட்டுவதால் உயிர் பாதுகாக்கப்படுவது உண்மை தான். ஆனால் விவரம் அறியாமல் ஹெல்மெட் அணிந்து ஓட்டினால் அதுவே ஆபத்தாகிவிடும்.

சாதாரணமாக வண்டி ஓட்டும் போது தலையை 40 டிகிரி கோணத்தில் திருப்பினாலே பின்னால் வரும் வாகனத்தின் தன்மையை அறிந்துகொள்ளலாம். ஆனால் ஹெல்மெட் அணிந்து ஓட்டும்போது இப்படி பார்க்க முடியாது. இதனால் ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டுபவர்கள் அனைவரும் கட்டாயம் வாக னத்தின் இரு பக்கமும் கண்ணாடி (சைடு மிர்ரர்) வைத்துக்கொள்ள வேண்டும்.

காதுகளை அடைத்தவாறு இருக்கும் ஹெல்மெட்டுகளை அணியவே கூடாது. இதனால் பின்னால் மற்றும் பக்கவாட்டில் வரும் வாகனத்தின் சத்தம் கேட் காது. விபத்து ஏற்பட இதுவும் காரணமாகிவிடும். ஹெல்மெட்டின் உட்பகுதிக்குள் காதுகள் பக்கத்தில் குழி போன்ற இடைவெளி இருக்கும் ஹெல்மெட்டுகளை பார்த்து வாங்க வேண்டும்.

புதிதாக ஹெல்மெட் அணிந்து வண்டி ஓட்டும்போது 50 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றால்கூட 30 கிலோ மீட்டர் வேகத்தில் செல்வது போன்ற ஒரு உணர்வையே கொடுக்கும். இதனால் நம்மை அறியாமலே நாம் வேகமாக செல்வோம். இதை எப்போதும் கவனத்தில் வைத்து வண்டி ஓட்ட வேண்டும்

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னால் மற்றும் ஓரத்தில் வரும் வாகனங்களை இரு பக்க கண்ணாடிகள் மூலம் கவனித்து, அவை எழுப்பும் ஒலியை காதில் வாங்கி, சரியான வேகத்தில் வண்டி ஓட்டினால் பயணம் இனிதாக இருக்கும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x