Last Updated : 05 Jul, 2015 12:50 PM

 

Published : 05 Jul 2015 12:50 PM
Last Updated : 05 Jul 2015 12:50 PM

திருச்சி உட்பட 7 விமான நிலையங்களில் வெளிநாட்டினருக்காக இ-சுற்றுலா விசா திட்டம்

ஜூலை 15-ல் பிரதமர் தொடங்க உள்ளதாக தகவல்

வெளிநாட்டுப் பயணிகளுக்கு இ-சுற்றுலா விசா வழங்கும் திட்டம் திருச்சி உட்பட 7 விமான நிலையங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதை வரும் 15-ம் தேதி பிரதமர் தொடங்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் விரைவில் விசா பெறும் வகையில் சென்னை, பெங்களூரு, கொச்சி, புதுடெல்லி, கோவா, ஹைதராபாத், கொல்கத்தா, மும்பை, திருவனந்தபுரம் ஆகிய 9 விமான நிலையங்களில் இணையதளம் மூலம் விசா வழங்கும் திட்டம் செயல்பட்டு வருகிறது. இவற்றுக்கு அடுத்த படியாக அதிகளவிலான வெளிநாட்டு பயணிகள் வந்து செல்லும் விமான நிலையங்களிலும் இந்த திட்டத்தை விரிவுபடுத்த மத்திய அரசு முடிவு செய்தது.

முதற்கட்டமாக திருச்சி (தமிழ்நாடு), ஜெய்ப்பூர் (ராஜஸ் தான்), ஆமதாபாத் (குஜராத்), அமிர்தசரஸ் (பஞ்சாப்), லக்னோ, வாரணாசி (உத்தரப்பிரதேசம்), கயா (பிஹார்) ஆகிய 7 விமான நிலையங்களில் இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணி களை இந்திய விமான நிலைய ஆணையக் குழுமம் மற்றும் இமிகிரேசன் பிரிவினர் (பீஓஐ) துரிதமாக மேற்கொண்டு வருகின்றனர்.

இதன்படி, திருச்சி விமான நிலையத்தில் இ-சுற்றுலா விசா வழங்குவதற்காக 4 பிரத்யேக கவுன்ட்டர்கள் அமைக்கப்பட் டுள்ளன. அவற்றில் இணைய வசதியுடன் கூடிய கணினிகள், ஸ்கேனர்கள், எலெக்ட்ரானிக் பாஸ்போர்ட் ரீடர்கள் மற்றும் கேமராக்கள் பொருத்தப்பட் டுள்ளன. இவற்றின் கட்டமைப்பு வசதிகள் குறித்து வெளிநாட்டினர் பதிவுக்கான சென்னை மண்டல அலுவலர் டாக்டர் செந்தில்வேலன் இரு தினங்களுக்கு முன் ஆய்வு செய்தார். இந்த மையம் மிக விரை வில் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளது.

இதுபற்றி திருச்சி விமான நிலைய இயக்குநர் நெகி கூறும் போது, “இ-சுற்றுலா விசா வழங்குவதற்கு தேவையான கட்டமைப்பு வசதிகளை விமான நிலையத்தில் ஏற்படுத்திவிட்டோம். நாடு முழுவதும் 7 இடங்களில் திறக்கப்பட உள்ளதால், இதற்கான தேதியை இமிகிரேசன் பிரிவினர் முடிவு செய்வார்கள்” என்றார்.

இதுபற்றி இமிகிரேசன் பிரிவு அதிகாரிகளிடம் கேட்டபோது, “திருச்சி விமான நிலையத்துக்கு ஆண்டுதோறும் சுமார் 12 லட்சம் பேர் வெளிநாடுகளில் இருந்து வருகின்றனர். இவர்களில் சுமார் 1.25 லட்சம் பேர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள். சுற்றுலா, மருத்துவ விசாவில் வந்து செல்கின்றனர். இவர்களின் வசதிக்காக இ-சுற்றுலா விசா வழங்கும் திட்டம் இங்கு அமல்படுத்தப்பட உள்ளது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, இலங்கை உள்பட 76 நாடுகளைச் சேர்ந்தவர்கள் இ-விசா பெற முடியும்.

இணையதளம் மூலம் விண்ணப் பம் செய்தால் அதிகபட்சமாக 4 நாட்களுக்குள் அவர்களுக்கு பதில் கிடைக்கும். விண்ணப்பித்த ரசீதை திருச்சிக்கு வந்தவுடன் இமிகிரேசன் பிரிவில் அளித்தால், உடனே விசா வழங்கப்படும். 30 நாட்கள் இந்த விசா செல்லுபடியாகும். இத்திட்டம் செயல்படத் தொடங்கினால் திருச்சி வரும் வெளிநாட்டினர் விசா பெறுவதற்காக அவர் களின் நாட்டிலுள்ள இந்திய தூதரகங்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. ஜூலை 15-ம் தேதி நாடு முழுவதும் 7 இடங்களில் இத்திட்டத்தை பிரதமர் தொடங்கி வைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றிய அறிவிப்பு மத்திய அரசால் முறைப்படி விரைவில் வெளியிடப்படும்” என்றனர்.

இத்திட்டம் செயல்படத் தொடங்கினால் திருச்சி வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x